அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 31 மார்ச், 2013

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்!

ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல்
உரிய கவுரவத்தைக் கொடுக்காமல் அவர்களிடம் பொய் சொல்லி அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் - முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.எனவே நாம்,நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.பொய் சொல்லி ஏமாற்றி,அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமை கொள்வதற்கு (?) ஒரு தினம். இந்த ஏப்ரல் ஒன்று அன்று, அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள் களின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது ஏப்ரல் ஃபூல்...! என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள்.ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.
கேட்டால் எல்லாம் ஒரு ஜாலிக்குதானே...? ஏமாறிய யாருமே வருத்தப்பட்டதில்லையே..! என்பார்கள். ஆனால் தான்மட்டும் மற்றவர்களிடம் அன்றைய தினம் இப்படி ஏமாறும்போது ஆ.. நாம் ஏமாறுவதால் முட்டாளாக்கப் படுகிறோமே அடுத்த முறை ஏமாறக்கூடாது என்று உஷாராக இருப்பார்கள்.ஆக மற்றவர்களிடம் நாம் ஏமாறும்போது மட்டும் அதை நம் மனம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சனி, 30 மார்ச், 2013

கொளுத்துது வெயில் - பத்திரம் தோல்!

கத்திரி வெயிலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் உடல் சூடு, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு தோல் நோய்களும் ஏற்படுவது இயல்பு. காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்களும், கட்டிகளும் ஏற்படுகின்றன. இது நாளைடைவில் தோல் புற்று நோயாகவும் மாற வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தோல் நோயில் இருந்து தப்பிக்க : - பருத்தி ஆடைகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும். - புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் உள்ள நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். - பணி நிமித்தமாக வெளியில் செல்ல நேர்ந்தால் கையுறைகளை அணிந்து செல்லலாம். இது வெப்பத்தின் நேரடித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்களை உபயோகிக்கலாம். வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கிரீம்களை உபயோகிப்பதோடு, உதட்டிற்கு தேவையான தனிப்பட்ட கிரீம்களை உபயோகிக்க வேண்டும். 

சத்தான உணவுகள்: - கோடைக்கு ஏற்ற உணவுமுறைகளை உண்ண வேண்டும். - பச்சைக் காய்கறிகள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த பழங்களை உண்ண வேண்டும். - மோர், இளநீர், பானங்களுடன், நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். - வெப்பம் அதிகமாக உள்ள சமயங்களில் மஞ்சள் பூசிச்செல்வது, தலைமுடிக்கு சாயம் தடவுவது, போன்றவற்றையும் குறைத்து கொள்ள வேண்டும். 

நன்றி :tamil.boldsky

வெள்ளி, 29 மார்ச், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -13)

கடுகளவு கூட பெருமையும், புகழையும் விரும்பியதில்லை..

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள். நூல் : அஹ்மத் 23756, 24176, 25039.

தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். நூல் : தப்ரானி (கபீர்) 12494

மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள்.
 நூல் : தப்ரானி (ஸகீர்) 41

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.  
நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.  
நூல் : புகாரி 3906

இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும், புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை. இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது.

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம் 'மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்' என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.  
நூல் : புகாரி 2262, 3406, 5453

நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன்.  
அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி) நூல் : புகாரி 1502, 5542

பொது நிதிக்குச் செலுத்தப்பட்ட ஒட்டகங்கள் மற்றவர்களின் ஒட்டகங்களுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக அவற்றுக்குத் தனி அடையாளமிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) மேற்கொண்டிருந்தார்கள். இந்தப் பணியைத் தமது கைகளால் தாமே செய்துள்ளது அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

வெள்ளி, 15 மார்ச், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -12)

சட்டையைப் பிடித்து இழுத்த போதும் சகித்துக்கொண்ட 
சாந்த நபியவர்கள்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர் கொண்ட ஒரு கிராம வாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபிகள் நாயகத்தின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி 'உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக' என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.நூல் : புகாரி 3149, 5809, 6088

சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான நபிகள் நாயகத்தை முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராம வாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்த வனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது. 'உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்' என்று கோரிக்கை வைக்க முடிகின்றது.இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபிகள் நாயகத்தால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?இந்த நிகழ்ச்சியை ஏதோ ஒரு தடவை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகக் கருதி விடக் கூடாது.'மக்களிடம் சர்வ சாதாரணமாக முஹம்மது பழகுகிறார்; யாரும் அவரை நெருங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கோரிக்கையை முன் வைக்கலாம்; நீண்ட நாள் பழகிய நண்பனுடன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளலாம்; எப்படி நடந்தாலும் அவர் கோபம் கொள்ள மாட்டார்; தேவைக்கேற்ப வாரி வழங்குவார்' என்றெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் தான் அறிமுகமில்லாத கிராமவாசிக்கு இப்படி நடக்க முடிந்தது.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசல் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாச
ல் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. 'முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று அந்த மனிதர் கூறினார். 'இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'நான் விட மாட்டேன்' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் 'விட மாட்டேன்' என்றார். அந்தக் கிராம வாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். 'நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி 'இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக' என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி 'நீங்கள் புறப்படுங்கள்!' என்றார்கள். இதை நபிகள் நாயகத்தின் தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூற்கள்: நஸயீ 4694, அபூதாவூத் 4145

வெள்ளி, 8 மார்ச், 2013

தளராத உள்ளம்

''மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்­லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் 'அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ''பேரீச்சை மரம்'' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி)   நூல்கள்: புகாரீ (61), முஸ்­லிம் (5028)
 
துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்? என்பதற்கு இந்த உதாரணம் அழகிய வழிகாட்டியாகும். வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பங்களை சந்திப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் விரும்பும் வாழ்க்கை பெரும்பாலும் யாருக்கும் கிடைப்பதில்லை. இது போன்ற நேரங்களில் மோசமான முடிவுகளை எடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர்.துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர் கொள்ள வேண்டும்.இதைப் போன்று இன்னொரு உதாரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அறிவிப்பவர்: கஅப் பின் மாலி­க் (ர­லி)  நூல்: புகாரீ (5643)

வியாழன், 7 மார்ச், 2013

பெண் நபி ஏன் இல்லை?

கேள்வி : ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? என்று வாதிடுகிறார் மாற்று மத நண்பர். எஸ். சீனி சலாப்தீன், மண்டபம்.

பதில் : (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! 
(அல்குர்ஆன் 16:43, 22:07)

இவ்விரு வசனங்களும் ஆண்கள் தாம் நபிமார்களாக அனுப்பப்பட்டனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வார்த்தைகளால் அறிவிக்கின்றன. 12:109 வசனமும் இதே கருத்தைக் கூறுகின்றது.மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.எனவே பெண் நபிமார்கள் அனுப்பப்படாததன் காரணங்களை அறிந்து கொள்வதற்கு முன் ஆன்மீகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களில் நபிமார்கள் - இறைத் தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை மட்டம் தட்டுவது தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

பல்வேறு மதங்களில் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொருத்த வரை இத்தகைய பாரபட்சம் ஏதும் இல்லை என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது.

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழை வார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 40:40)

புதன், 6 மார்ச், 2013

டொயோட்டா ஐ ரோடு

2 பேர் பயணம் செய்வதற்கு வசதியான புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் வாகனத்தை ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது டொயோட்டா. பின்புறத்தில் ஒரு வீலும், 2 வீல்களும் கொண்டிருக்கும் இந்த வாகனத்துக்கு ஐ-ரோடு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது இந்த வாகனம் கவிழாமல் செல்லும் வண்ணம் செல்ஃப் பேலன்சிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. 2 பேர் முன்னும், பின்னும் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் வாகனம் என்பதால் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்புறங்களில் தனிநபர் பயன்பாட்டு வாகனமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்த கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது டொயோட்டா.
 
நன்றி :thatstamil

TNTJ-பிரச்சாரகர் பயிற்சி வகுப்பு மே மாதம் ஆரம்பம்

ஏகத்துவக் கொள்கை சரியான முறையில் மக்களைச் சென்றடைவதில் பிரச்சாரகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.பிராச்சாரம் செய்வோர் சரியான ஞானமில்லாமலோ, ஞானமிருந்தும் தக்க முறையில் எடுத்துச் சொல்லும் வழிமுறை அறியாதவர்களாகவோ இருந்தால் அவர்களின் பிரச்சாரத்தினால் நன்மையை விட தீமையே அதிகமாகும். எனவே பேசும் திறன் வளர்க்கவும் பிரச்சாரகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளையும், அதற்கு ஏற்ற வகையில் சரியான ஞானத்தைப் பெற்றிடவும் ஒருமாத பயிற்சி வகுப்பு மே1 முதல் 30 வரை TNTJ மாநிலத் தலைமையகத்தில் நடக்கவுள்ளது.
சென்னையில் பீஜே, ரஹ்மதுல்லா, எம்.ஐ. சுலைமான் ஆகியோரின் மேற்பார்வையில் நடக்கும் இப்பயிற்சி முகாமில் உணவும் தங்குமிடமும் இலவசமாக செய்து தரப்படும் தேவையான நூல்களும் வழங்கப்படும். மாவட்ட, கிளை பரிந்துரையுடன் புகைப்படம் இணைத்து உடனே விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 20
குறிப்பு: இதற்கு முன் தலைமை சார்பில் நடத்தப்பட்ட ஒரு மாத பயிற்சி முகாமில் பயின்ற மாணவர்களுக்கும், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் அனுமதியில்லை

இப்படிக்கு,
மாநிலத்தலைமையகம்,TNTJ

வெள்ளி, 1 மார்ச், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -11)

வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலாத போது... 
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசுக் கருவூலத்தில் நிதி இல்லாத நேரத்தில் யாராவது உதவி கேட்டு வந்தால் வசதி படைத்தவர்களிடம் கடனாகப் பெற்று வழங்குவார்கள். ஸகாத் நிதி வசூலிக்கப்பட்டு வந்தவுடன் கடனைத் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு தடவை இங்கிதம் தெரியாத மனிதரிடம் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலவில்லை. அப்போது நடந்தது என்ன என்பதைப் பாருங்கள்!
 
அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது' எனக் கூறினார்கள். மேலும், 'அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள்' எனக் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். 'அவருக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்' எனக் கூறினார்கள். நூல் : புகாரி 2306, 2390, 2401, 2606, 2609