அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 30 ஜூலை, 2013

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். 
(அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.  
நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். 
(நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)
நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
 
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)

திங்கள், 22 ஜூலை, 2013

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.  அபூஹுரைரா(ரலி). புகாரி-முஸ்லீம்

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிறுத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

நோன்பின் சட்டங்கள்!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (2:184)

நோன்பு என்பது இஸ்லாமிய மாளிகையை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கும் நோன்பை முஸ்லிம் சமுதாயம் சரியான முறையில் விளங்கிப் பேணிக் கொள்வது இஸ்லாத்தை நிலைநாட்டுவதும், ஈமானை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் அருட்கொடையாகும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் ரமளான் என்ற பரகத் மிக்க மாதத்தை நோன்பிற்காகவே படைத்துள்ளான். நோன்போடு ஏனைய வணக்கங்களும், ஏனைய வணக்கங் களோடு நோன்பும் இரண்டறக் கலந்து இறையருளைப் பல்கிப் பெருகிடச் செய்யும் அற்புதமான மாதமே ரமளான். இதில் நோன்பை நிய்யத் செய்வதிலிருந்து நோன்பை பூர்த்திச் செய்யும் வரை திருமறை திருக்குர்ஆனும், ஹதிஸ்களும் கூறும் முறைப்படி இஸ்லாமிய சமுதாயம் கடைப்பிடிக்கிறதா? என்பதை நம்மை நாமே ஆய்வு செய்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் வணக்கங்களில் அலட்சியம் கொள்வது சிலரின் நிலைப்பாடாக இருக்க வேறு சிலரோ பேணுதல் என்ற அடிப்படையில் வணக்கங்களை கஷ்டப்படுத்திக் கொள்வதை மார்க்கத்திற்கு முரணாக தங்களை வருத்திக் கொள்வதை பார்க்கிறோம். இதில் நோன்பையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. முதலாவதாக நிய்யத்தை எடுத்துக் கொள்வோம்.நிய்யத் என்றால் என்ன? நிய்யத் செய்யும் முறை எப்படி?

நிய்யத் செய்வது

செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
(உமர்(ரலி) புகாரி 1)

இங்கு நிய்யத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. நிய்யத் என்னும் வார்த்தைக்கு மனதால் எண்ணுவது, தீர்மானம் செய்வது என்பதாகும். ஆனால் வாயால் மொழிவது என்கின்ற அர்த்தம் கிடையாது.ஆனால் இன்று நம் சமுதாயத்தில், நவ்வைத்து ஸவ்மகதின் அன்ன தாயி ஃபர்ளி ரமளானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா என்ற வாசகங்களைக்  கொண்டு நிய்யத் எனும் பெயரால் வாயால் மொழியும் பழக்கம் இருந்து வருகிறது. முதலில் இந்த செய்தி  ஹதிஸ் கிரந்தங்களில் இருந்தாலும் அனைத்து ஹதிஸ்களும் பலவீனமானவையாகும். இவ்வாறு கூறித்தான் நோன்பு நோற்க வேண்டுமென்றிருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒரு நிய்யத் மார்க்கத்தில் இல்லை ஆகவே அதை ஓதக் கூடாது. மீறி செய்தால் அது நிராகரிக்கப்படும்.

யாரேனும் நமது  கட்டளையின்றி ஒரு செயலை செய்தால் அது நிராகரிக்கப்படும் (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 3243)

வெள்ளி, 5 ஜூலை, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -21)

ஆன்மீகவாதிகளின் மிக முக்கியமான கேடயத்தையும் முறித்துப் போடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து எதையோ பேசினார்கள். என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் பேச்சு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்விருவரையும் ஏசியதுடன் சபிக்கவும் செய்தார்கள். அவ்விருவரும் சென்ற பின் இவ்விருவருக்கும் கிடைத்த நன்மையை வேறு எவரும் அடைய முடியாது என்று நான் கூறினேன். நீ என்ன சொல்கிறாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'அவ்விருவரையும் திட்டிச் சபித்தீர்களே' என்று நான் கூறினேன். 'ஆம்! நானும் ஒரு மனிதனே. எனவே நான் யாரையாவது திட்டினாலோ, சபித்தாலோ அதை அவருக்கு அருளாக ஆக்கி விடு என்று என் இறைவனிடம் நான் உறுதி மொழி பெற்றுள்ளேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4705

உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒரு அனாதைப் பெண் இருந்தாள். அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது 'நீ பெரியவளாகி விட்டாய்! உன் வயது பெரிதாகாமல் போகட்டும்' எனக் கூறினார்கள். உடனே அந்த அனாதைப் பெண் உம்மு சுலைம் அவர்களிடம் அழுது கொண்டே சென்றார். 'மகளே என்ன நேர்ந்தது' என்று உம்மு சுலைம் கேட்டார்கள். 'என் வயது அதிகமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) எனக்கெதிராகச் சபித்து விட்டார்களே! இனி மேல் நான் வளராது போய் விடுவேனே' எனக் கூறினார். உடனே அவசரமாக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது அனாதைக் குழந்தைக்கு எதிராகச் சாபம் இட்டீர்களா? எனக் கேட்டார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். 'நான் எனது இறைவனிடம் உறுதி மொழி பெற்றுள்ளது உனக்குத் தெரியாதா? நானும் ஒரு மனிதனே! மற்ற மனிதர்கள் திருப்தியுறுவது போல் (சிலர் மீது) நானும் திருப்தியுறுவேன். மற்ற மனிதர்கள் கோபம் கொள்வது போல் நானும் கோபப்படுவேன். எனவே என் சமுதாயத்தில் எவருக்கு எதிராகவேனும் நான் பிரார்த்தனை செய்து அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டால் அதை அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வணக்கமாகவும் ஆக்குவாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்துள்ளேன் என்றார்கள்.  
நூல் : முஸ்லிம் 4712

வியாழன், 4 ஜூலை, 2013

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)


“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.