அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புத்தாண்டு!




புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களை புறக்கணிப்போம்! கலாச்சார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -22)

முரண்பாடின்மை

எத்தனையோ துறைகளில் தலைமை தாங்குவோரை நாம் காண்கிறோம். அவர்கள் தமக்கே முரண்படுவதையும் காண்கிறோம். அதிலும் ஆன்மீகவாதிகள் மற்றவர்களை விட அதிக அளவில் தமக்குத் தாமே முரண்படுவதைக் காணமுடியும். ஆசையை அறுக்கச் சொல்வார்கள். அவர்கள் தான் அறுசுவையுடனும், அதிகமாகவும் சாப்பிடுவார்கள்.எளிமை, அடக்கம் பற்றிப் போதிப்பார்கள். தங்கள் கால்களில் மக்கள் விழுந்து எழுவதை விரும்புவார்கள்.ஆடையில் மாத்திரம் தான் வித்தியாசம் காட்டுவார்களே தவிர மற்ற விஷயங்களில் சராசரி மனிதனின் அளவுக்குக் கூட அவர்கள் பக்குவப்பட்டிருக்க மாட்டார்கள்.இப்படி ஏராளமான முரண்பாடுகளை ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் காண்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடில்லாத ஒரே ஆன்மீகத் தலைவராகத் திகழ்கிறார்கள். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை நிகழ்ச்சிகளுமே இதற்குரிய ஆதாரங்களாக உள்ளன.அவர்களின் முரண்பாடில்லாத தூய வாழ்க்கையை நம் கண் முன்னே நிறுத்தும் இன்னும் பல சான்றுகளும் உள்ளன.

அகில உலகுக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறான். அந்த ஒரு கடவுளை ஏற்காமல் பல கடவுளை வணங்கினால் அவர்கள் மறுமையில் நரகத்தை அடைவார்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) போதித்த முக்கியக் கொள்கை. இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கையும் இது தான்.இப்படி ஒரு கொள்கையைச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் எந்தக் கட்டத்திலும் முரண்பட்டதேயில்லை.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தந்தை எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்' என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்' என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 302

கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்தார். அந்த நிலையிலேயே மரணித்தும் விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஆன்மீக நெறியின் படி அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.ஆனால் வந்தவர் நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வய வந்து 'தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்' என்று கூறுகிறார்கள். இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதி விலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள். தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ. 57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க நெருக்கடியால் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த நாடுகள் அதை வேறு நாடுகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், ஈரானுக்கு டாலர்களை வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உத்தரவால், கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி மூலமாக ஈரானுக்கு ரூபாயாகத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது. இந்த ரூபாயை ஈரானால் சர்வதேச சந்தையில் பயன்படுத்த முடியாது. இதனால் இந்த ரூபாய்கு இணையான உணவுப் பொருட்கள், மருந்துகள், ரயில்வே என்ஜின்கள், ரயில் பெட்டிகளை இந்தியாவிடம் இருந்து ஈரான் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று இந்திய சந்தையில் டாலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. இந் வகையில் டாலர்களை சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவை மிச்சப்படுத்தவும் அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு புதிய யோசனையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.ஈரானுக்கு டாலர்களுக்குப் பதிலாக ரூபாயைத் தந்தே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியும் என்பதால், அந்த நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவை அதிகரிக்கலாம் என்கிறார் மொய்லி.

செவ்வாய், 30 ஜூலை, 2013

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். 
(அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.  
நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். 
(நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)
நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
 
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)

திங்கள், 22 ஜூலை, 2013

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.  அபூஹுரைரா(ரலி). புகாரி-முஸ்லீம்

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிறுத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

நோன்பின் சட்டங்கள்!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (2:184)

நோன்பு என்பது இஸ்லாமிய மாளிகையை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கும் நோன்பை முஸ்லிம் சமுதாயம் சரியான முறையில் விளங்கிப் பேணிக் கொள்வது இஸ்லாத்தை நிலைநாட்டுவதும், ஈமானை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் அருட்கொடையாகும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் ரமளான் என்ற பரகத் மிக்க மாதத்தை நோன்பிற்காகவே படைத்துள்ளான். நோன்போடு ஏனைய வணக்கங்களும், ஏனைய வணக்கங் களோடு நோன்பும் இரண்டறக் கலந்து இறையருளைப் பல்கிப் பெருகிடச் செய்யும் அற்புதமான மாதமே ரமளான். இதில் நோன்பை நிய்யத் செய்வதிலிருந்து நோன்பை பூர்த்திச் செய்யும் வரை திருமறை திருக்குர்ஆனும், ஹதிஸ்களும் கூறும் முறைப்படி இஸ்லாமிய சமுதாயம் கடைப்பிடிக்கிறதா? என்பதை நம்மை நாமே ஆய்வு செய்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் வணக்கங்களில் அலட்சியம் கொள்வது சிலரின் நிலைப்பாடாக இருக்க வேறு சிலரோ பேணுதல் என்ற அடிப்படையில் வணக்கங்களை கஷ்டப்படுத்திக் கொள்வதை மார்க்கத்திற்கு முரணாக தங்களை வருத்திக் கொள்வதை பார்க்கிறோம். இதில் நோன்பையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. முதலாவதாக நிய்யத்தை எடுத்துக் கொள்வோம்.நிய்யத் என்றால் என்ன? நிய்யத் செய்யும் முறை எப்படி?

நிய்யத் செய்வது

செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
(உமர்(ரலி) புகாரி 1)

இங்கு நிய்யத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. நிய்யத் என்னும் வார்த்தைக்கு மனதால் எண்ணுவது, தீர்மானம் செய்வது என்பதாகும். ஆனால் வாயால் மொழிவது என்கின்ற அர்த்தம் கிடையாது.ஆனால் இன்று நம் சமுதாயத்தில், நவ்வைத்து ஸவ்மகதின் அன்ன தாயி ஃபர்ளி ரமளானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா என்ற வாசகங்களைக்  கொண்டு நிய்யத் எனும் பெயரால் வாயால் மொழியும் பழக்கம் இருந்து வருகிறது. முதலில் இந்த செய்தி  ஹதிஸ் கிரந்தங்களில் இருந்தாலும் அனைத்து ஹதிஸ்களும் பலவீனமானவையாகும். இவ்வாறு கூறித்தான் நோன்பு நோற்க வேண்டுமென்றிருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒரு நிய்யத் மார்க்கத்தில் இல்லை ஆகவே அதை ஓதக் கூடாது. மீறி செய்தால் அது நிராகரிக்கப்படும்.

யாரேனும் நமது  கட்டளையின்றி ஒரு செயலை செய்தால் அது நிராகரிக்கப்படும் (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 3243)

வெள்ளி, 5 ஜூலை, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -21)

ஆன்மீகவாதிகளின் மிக முக்கியமான கேடயத்தையும் முறித்துப் போடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து எதையோ பேசினார்கள். என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் பேச்சு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்விருவரையும் ஏசியதுடன் சபிக்கவும் செய்தார்கள். அவ்விருவரும் சென்ற பின் இவ்விருவருக்கும் கிடைத்த நன்மையை வேறு எவரும் அடைய முடியாது என்று நான் கூறினேன். நீ என்ன சொல்கிறாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'அவ்விருவரையும் திட்டிச் சபித்தீர்களே' என்று நான் கூறினேன். 'ஆம்! நானும் ஒரு மனிதனே. எனவே நான் யாரையாவது திட்டினாலோ, சபித்தாலோ அதை அவருக்கு அருளாக ஆக்கி விடு என்று என் இறைவனிடம் நான் உறுதி மொழி பெற்றுள்ளேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4705

உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒரு அனாதைப் பெண் இருந்தாள். அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது 'நீ பெரியவளாகி விட்டாய்! உன் வயது பெரிதாகாமல் போகட்டும்' எனக் கூறினார்கள். உடனே அந்த அனாதைப் பெண் உம்மு சுலைம் அவர்களிடம் அழுது கொண்டே சென்றார். 'மகளே என்ன நேர்ந்தது' என்று உம்மு சுலைம் கேட்டார்கள். 'என் வயது அதிகமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) எனக்கெதிராகச் சபித்து விட்டார்களே! இனி மேல் நான் வளராது போய் விடுவேனே' எனக் கூறினார். உடனே அவசரமாக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது அனாதைக் குழந்தைக்கு எதிராகச் சாபம் இட்டீர்களா? எனக் கேட்டார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். 'நான் எனது இறைவனிடம் உறுதி மொழி பெற்றுள்ளது உனக்குத் தெரியாதா? நானும் ஒரு மனிதனே! மற்ற மனிதர்கள் திருப்தியுறுவது போல் (சிலர் மீது) நானும் திருப்தியுறுவேன். மற்ற மனிதர்கள் கோபம் கொள்வது போல் நானும் கோபப்படுவேன். எனவே என் சமுதாயத்தில் எவருக்கு எதிராகவேனும் நான் பிரார்த்தனை செய்து அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டால் அதை அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வணக்கமாகவும் ஆக்குவாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்துள்ளேன் என்றார்கள்.  
நூல் : முஸ்லிம் 4712

வியாழன், 4 ஜூலை, 2013

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)


“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

புதன், 26 ஜூன், 2013

கடமை..நாட்டுப்பற்று..மனிதாபிமானம்..ஓர் உதாரணம்...!

டேராடூன்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றியவர் எஸ்.எம்.யூனூஸ். இமயமலை சுனாமியில் சிக்கியோ இந்து யாத்ரீகர்களை மீட்ட யூனூஸின் மகத்தான சேவை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கும்.. ஜூன் 14-ந் தேதி முதல் உத்தர்காண்ட் மாநிலத்தில் மழை...ஜூன் 16-ந் தேதி சரஸ்வா விமானப்படை முகாமில் இருந்த 152வது ஹெலிகாப்டர் யூனிட்டில் கமாண்டர் அதிகாரியாக இருக்கும் யூனுஸுக்கு முதலில் தகவல் கிடைக்கிறது.. மிகப் பெரும் பேரழிவை மழை உருவாக்கிவிட்டிருக்கிறது என.
ஜூன் 17-ந் தேதி டேராடூனின் ஜோலிகிராண்ட் ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்குகிறார் யூனூஸ்.. மறுநாள் காலை 9 மணிக்கு தமது மிக்-17 வி5 ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் பகுதிக்கு செல்கிறார். இந்த ஹெலிகாப்டர் 3 டன் எடையை சுமக்கக் கூடியது.. கேதார்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு 20 பேரை முதலில் மீட்டு வருகிறார் யூனூஸ்... இப்படியாக மொத்தம் 500 இந்து யாத்ரீகர்களை மீட்டவர் யூனூஸ்.. இவரது மீட்புப் பணி ஜூன் 18, 19 என தொடர்ந்து கொண்டே இருந்தது.

செவ்வாய், 25 ஜூன், 2013

பாஸ்போர்ட் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

பாஸ்போர்ட் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.


2003 முதல் 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குண்டு வெடிப்பு மூளையாக செயல்பட்டவர் இந்துத்துவாவாதி

2003-ஆம் ஆண்டிலிருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கியத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹமீத் சவ்கான் என்ற ஹக்லா என்பவரின் உண்மையான அடையாளம் என்ன என்பது தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் தாக்கல் செய்துள்ள துணை குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது உண்மை பெயர் ரமேஷ் வெங்கட் மஹால்கர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.மத்தியப்பிரதேச மகாராஷ்டிரா ஆகிய மாநில இந்துத்துவ தீவிரவாத ஆசாமிகளுக்கு இவர் இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மாலேகான், அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜவ்தா வெடிகுண்டு தாக்குதல் 2006-லிருந்து நிகழ்ந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் பார்ப்பனி, பூர்ணா, ஜல்னா மற்றும் நந்தால் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் 2003-லிருந்து 2006 வரை நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு செயல்பட்டவிதம் இந்துத்துவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒரு நபரின் தலைமையின் கீழ் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஹக்லாவின் உண்மையான அடையாளம் வெளிப்படுவதற்குமுன் அவர் இமான்சுபான்சி என்பவரின் சொந்த ஊரான நந்தால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2006-லிருந்து 2008 வரை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்தார் என்று கண்டு பிடிக்கப் பட்டது.

செவ்வாய், 18 ஜூன், 2013

பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பராஅத்தும் மத்ஹபுகளும்

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

வியாழன், 13 ஜூன், 2013

சேவையை நிறுத்தும் தந்தி

தபால் இலாகாவின் 'தந்தி' (டெலிகிராம்) சேவையை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதியில் இருந்து நிறுத்திவிட முடிவு செய்து இருப்பதாக பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் அறிவித்து உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நல்லது, கெட்டது என எல்லாவித தகவல் பரிமாற்றத்துக்கும் “தந்தி" (டெலிகிராம்) சேவைதான் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.160 ஆண்டுகளைக்கடந்த இந்த சேவை, கடந்த 1850-ம் ஆண்டுவரையில் தபால்-தந்தி துறை என்று இருந்தது. பின்னர் தனித்தனியே பிரிக்கப்பட்டது. செல்போன், இ.மெயில், ஸ்மார்ட் போன் என்று காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், தந்தி மூலம் தகவல் அனுப்புவதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டனர். எந்தவொரு தகவலையும், செல்போனில் எஸ்.எம்.எஸ்.மூலமாக தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், டெலிபோன் துறைக்கு வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, கடந்த சில ஆண்டுகளாக, தந்தி அலுவலகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.

சமீபகாலமாக பெயரளவுக்கு ஒரு சில தபால் நிலையங்களில் மட்டுமே தந்தி சேவை உள்ளது. இதற்கிடையே, தந்தி சேவையை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்.தந்தி சேவை பிரிவின் மூத்த பொது மேலாளர் சமீம் அக்தர் அனைத்து தந்தி அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

வெள்ளி, 7 ஜூன், 2013

மிஃராஜ் தரும் படிப்பினை

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்'      (அல்குர்ஆன் 17:1)
 
விண்ணுலகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே இருக்கிறார்கள். 'மிஃராஜ்' என்ற பயணம் வல்ல நாயன் அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாகும்.அதில் என்ன மாதிரியான படிப்பினைகளெல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றன என்பதை நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு இஸ்லாமிய சமுதாய அமைப்பு எப்படிப்பட்ட அடையாளங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அற்புத படிப்பினை மிஃராஜில் அடங்கியிருப்பதை நாம் காணலாம். நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும். இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர்.

ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத சில அரசின் உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிப்பதென்பது வியக்கத்தக்கதல்ல. இதற்குச் சான்றாக நபி இபுராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆகுவதற்காக  வானம் மற்றும் பூமியின் சான்றுகளை அல்லாஹ் காட்டியதாக அல்குர்ஆனில் (6:75) இல் கூறப்படும் விஷயத்தையும், இறந்தபின் எவ்வாறு எவ்வாறு நீ உயிர்ப்பிக்கின்றாய்' என்று நபி இபுராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது, பறவைகளை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் வைத்து அதனை அவர்களிடம் அழைக்குமாறு கூறி உயிர்ப்பித்துக் காட்டியதாக கூறும் அல்குர்ஆனின் (2:260)வது வசனமும் இறைவனின் அற்புதங்களுக்கு சான்றாகக் கொள்ளலாம்.
மிகச்சிறந்த இறைத்தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்களை இறைவன் தூர் மலைக்கு அழைத்து அவர்களுடன் உரையாடியதாக கூறப்படும் அல்குர்ஆனின் (28:29,30)வது வசனமும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு தனது விருப்பத்திற்கேற்ப இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு சில பிரச்சனைகள் நடைபெறுகின்றன என்பதை தனது அடியார்களில் ஒருவர் மூலம் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் அல்குர்ஆனின்(18: 65,66) வது வசனங்களும்கூட இவைகளுக்குச் சான்றுகளாகும்.
 
அண்ணலாரின் வாழ்விலும் இதே போன்று சில விந்தையான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு முறை இறைவனுக்கு மிக நெருக்கமான வானவர் ஒருவரை அவரது உண்மையான வடிவத்தில் அடிவானத்தில் கண்டார்கள்.

இது மரியாதைக்குரிய தூதரின்(ஜிப்ரீலின்) சொல்லாகும். (அவர்) வலிமை மிக்கவர். அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர், அங்கே நம்பிக்கைக்குரியவர். உங்கள்   தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவரை(ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.(அல்குர்ஆன் 81:19-23)

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -20)

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.



ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டுவிட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்' என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 624


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) முன்னால் அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோன்றுகிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.  


தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்ததை அறியும் போது இந்த மாமனிதரின் அப்பழுக்கற்றத் தூய்மை நம் கண்களைக் கலங்க வைக்கிறது.கண்ணை மூடிக் கொண்டு ஒருவரின் பின்னே செல்ல நினைத்தால் அதற்கான முழுத் தகுதியும் இவருக்கு மட்டுமே உள்ளது. எந்த வகையிலும் இவர் நம்மை ஏமாற்றவே மாட்டார். தமது அற்பமான சுயநலனுக்குக் கூட நம்மைப் பயன்படுத்த மாட்டார் என்று ஒருவரைப் பற்றிக் கருதுவதாக இருந்தால் இவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்தத் தகுதியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். நூல் : திர்மிதீ 3807


புதன், 29 மே, 2013

சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு

ஜூன்  9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் சவூதி அரசாங்கம் கடுமையான உத்தரவு.
சவூதியில் இயற்றப் பட்டுள்ள நிதாகத்எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி, தனி ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட், இக்காமா, காலாவதி ஆனவர்கள் மற்றும் ஹூரூப் கொடுக்கப்பட்டவர்கள், மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.

சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையில், மேற்கண்ட வகைகளில் சட்ட விரோதமாக சவூதியில் வாழும் இந்தியர்கள் தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

செவ்வாய், 28 மே, 2013

பசலைக்கீரை

பசலைக்கீரை, கொடி வகையைச் சேர்ந்த இந்த இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது.இக்கீரையில் வைட்டமின்  A, B C  போன்ற சத்துக்களும் இரும்பு, சுண்ணாம்பு மற்றும் நார் சத்துக்களும் மிகுந்து காணப்படுகிறது..

தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். உடலில் உள்ள வறட்சியை போக்கி நீர்சத்தை உண்டாக்கும். இந்த கீரை கிராமங்களில் பெரும்பான்மையான விடுகளில் வளர்க்கப்படும். இந்த கீரையை பருப்பில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் பறந்து போகும்.

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்10-ல் திறப்பு-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :thatstamil

திங்கள், 27 மே, 2013

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு - ஓர் அவசர அலசல்


இந்நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.

ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும் எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.11 பேர்கள் விளையாட பல கோடி மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11 பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும் இல்லை.இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.

வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)

ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்கலாம். அதனால் உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கலாம்.வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித் திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்கலாம்.ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய் வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.

வெள்ளி, 24 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -19)

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக்கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. ஆன்மீகவாதிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதுண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்குச் செய்யப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர். ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே இந்தச் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகமே.


உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத் தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத் தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்குத் தெரியும் வகையில்) இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நூல் : அஹ்மத்: 7054


எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! நூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449

யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கை யில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். நூல் : புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816