நீங்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக குட்கா, அபின் போன்ற போதைப்பொருளை, உணவில் சேர்த்து சாப்பிட விரும்புவீர்களா? பாக்கெட் உணவுகளை அதிகம் ருசிப்பவரா? தாகம் எடுக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை உடைத்து "மொடக்"குபவரா?
வேண்டாமே, இந்த விபரீதம், நாம் அமெரிக்காவை போல உயரலாம், அதற்காக, அவர்கள் "கேடுகெட்ட" உணவுப் பழக்கத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா? மிளகிலும், சுக்கிலும், திப்பிலியிலும் அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று அவர்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் விட்டொழித்த "டப்பா" உணவுகளை நாம் ஏதோ ஆசைக்கு வாங்கி சாப்பிடலாம். அதற்காக வாழ்க்கையே டப்பா உணவாகி விடலாமா? நாம் சமையல் அறைகள் என்ன ரசாயன தொழிற்கூடமா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எல்லாம் நமக்கு அவசியம் தானா?நாம் இதையெல்லாம் யோசிக்க மறுக்கிறோம்?
* நாம் சமையலில் பயன்படுத்தும் பல பாக்கெட் சமாச்சாரங்களிலும் "ப்ளேவர்" கூட்டும் ரசாயனங்கள் இல்லாமல் இல்லை.
* நம்மில் சிலர் பயன்படுத்தும் "டேஸ்ட்" தருவதற்கான அஜினோமோட்டோவில் கூட முழுக்க ரசாயனம் தான். அதை பயன்படுத்தி வந்த சீனர்களும், அமெரிக்கர்களும் அதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆம், நாம் எப்போது உலகமயமாக்கலில் மூழ்கி விட்டோமோ, அப்போதே நம் வாழ்க்கையில் சர்வதேசத்தனம் ஊடுருவத் துவங்கிவிட்டது.பாக்கெட் உணவுகளால் ஆபத்தில்லை. ஆனால், நாம் அதிக அளவில் அதை பின்பற்றக்கூடாது.பலரும் அதிலேயே மூழ்கி விட்டது தான் ஆபத்து தருவதாகும்.
அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் எம்.எஸ்.ஜி., என்பது தான். மோனோ சோடியம் க்ளூட்டாமேட் (MSG -Mono Sodium Glutamate) என்பது தான் இதன் முழு ரசாயனப்பெயர். கெச்சப்பாகட்டும்(ketchup), மஷ்ரூம் அயிட்டங்களாகட்டும், சிக்கன் சமாச்சாரங்களாகட்டும் எதிலும், இந்த எம்.எஸ்.ஜி., இருக்கும். நம்மூர் சோடா உப்பு போல் தான். இந்த எம்.எஸ்.ஜி., நம்மில் அஜினோமோட்டோ என்று பிராண்ட் பெயரில் அழைக்கப்படுகிறது.