அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -5)

சுகபோகங்களில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?
 
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். 
நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

'
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 730, 5862
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 4913

இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.

'
நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார். நூல் : புகாரி 183, 992, 1198, 4572

கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறதுவலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா


தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக