அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -9)

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புக்களையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.'அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது' என்ற கொள்கையின் காரணமாக வியாபாரம், அல்லது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.
தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.

மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?' என்றார்கள். அவர் கிடாய்' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி 'நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்' என்று கூறினார்கள். இதை லகீத் பின் ஸபுரா (ரலி) அறிவிக்கிறார். நூல் : அபூதாவூத் 123, அஹ்மத் 17172

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்
என்பது இதிலிருந்து தெரிகின்றது.நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.அரபு நாட்டு ஆடுகள் அதிகமாகப் பால் சுரக்கக் கூடியவை. நூறு ஆடுகள் இருக்கும் போது பத்து ஆடுகளாவது பால் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். நூறு ஆடுகள் கொண்ட பண்ணையில் மாதம் இரண்டு ஆடுகள் குட்டி போட்டாலே போதுமான வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தின் மூலம் தான் தமது தேவைகளையும், தமது மனைவியரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் இந்த வருமானம் தேவைக்கும் அதிகமான வருமானமாகும். ஆனால் பல மனைவியர் இருந்த காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியிருந்ததால் தான் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய வறிய வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் பல மனைவியரை மணக்க வேண்டும் என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற நமது நூலைப் பார்க்கவும்.) http://onlinepj.com/books/nabikal_pala_thirumanangal_seythathu_en/

இவை தவிர இன்னொரு வகையிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பல்வேறு போர்களைச் சந்தித்தார்கள்.போரில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித ஊதியமும் அன்றைய காலத்தில் வழங்கப்படுவதில்லை. போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் தோற்றவர்களின் உடமைகளை வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. போரில் பங்கு கொண்டவர்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அது போல் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் தனி மனிதர்களுக்கு உரிமையாக இல்லாத பொதுச் சொத்துக்களும் வெற்றி பெற்றவர்களுக்குச் சொந்தமாகி விடும். அவற்றையும் வெற்றி பெற்ற நாட்டினர் போரில் பங்கெடுத்தவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற வீரர்களைப் போலவே நேரடியாகப் போரில் பங்கெடுத்தார்கள். வாள் வீச்சிலும், குதிரை ஏற்றத்திலும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்ததால் மற்றவர்களை விடத் தீவிரமாகப் பங்கெடுத்தார்கள்.போரில் பங்கு கொண்ட மற்ற வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போல் போர் வீரர் என்ற முறையில் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள். குதிரை வைத்திருப்பவர்களுக்கு சாதாரணப் போர் வீரரை விட இன்னொரு மடங்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் குதிரை வீரர்களுக்குக் கிடைத்த பங்குகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தன.

கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்கள் நபிகள் நாயகத்துக்கு இவ்வாறு தான் கிடைத்தன. இதையும் மரணிக்கும் போது பொது உடமையாக்கி விட்டார்கள் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம். இந்தத் தோட்டங்களிலிருந்தும் அவர்களுக்கு வருமானம் வந்தது.
நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டார் அன்பளிப்புகளாக வழங்கினால் அதை ஏற்றுக் கொள்வார்கள். தாமும் அன்பளிப்புச் செய்வார்கள்.இந்த வகைகளில் தவிர வேறு எந்த வருமானமும் அவர்களுக்கு இருந்ததில்லை. இதிலிருந்து தான் தமது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த அற்புதமான வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக