அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 25 மே, 2012

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 2)

வஹீயாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. தனது அனுமதியுடன் தான் நாடியதை அவன் அறிவிக்கின்றான். நிச்சயமாக அவன் உயர்ந்தவன். நுண்ணறிவாளன். (அல்குர்ஆன் 42 : 51)

மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்தி­ருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்­ அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.
மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அங்கே அவர் வந்த போது மூஸாவே என்று அழைக்கப்பட்டார். நிச்சயமாக நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக. நிச்சயமாக நீர் பரிசுத்தமான இடத்தில் இருக்கிறீர்கள். மேலும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, (வஹீயாக) அறிவிக்கப் படுவதை செவிமடுப்பீராக. நிச்சயமாக நானே அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக.(அல்குர்ஆன் 20 : 11 – 14).

இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப் பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் திரைக்கு அப்பால் இருந்துஎன்று இறைவன் கூறுகிறான்.
பல கட்டளைகள் அப்போது பிறப்பிக்கப்

இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக வஹீ மூலம் என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான். இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான். இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை இப்படித்தான் செயல் படுத்த வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய வலியுறுத்தக் கூடிய மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள் திருக்குர்ஆனைத்தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் தான் மூன்றாவது வஹீ இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.
இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப் பட்டதாகக் கூறவில்லை. அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை. பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத்தான் கூறப்பட்டுள்ளது.

மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன் பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான் மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச் சந்தேகம்.

மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக் குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயி­ருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.
மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.

இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை வஹீ மூலமாக உமக்கு அறிவித்து இருக்கிறோம். (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்புவோர்க்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன் 42: 52)

இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

அதாவது நபிகள் நாயகத்துடன், திரைக்கப்பாலி­ருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.
ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல்லி­ அனுப்பியுள்ளான்.இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்
என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன் திரைக்கப்பாலி­ருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கே? இதயத்தில் போட்ட வழிகாட்டுதல் எங்கே? அவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா! அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?

நன்றி : tntj.net 
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.....



0 கருத்துகள்:

கருத்துரையிடுக