அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 8 ஜனவரி, 2013

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? என்று எனது நண்பர் ஒருவர் கேட்கிறார். 
                                                              - எம். அஹ்மது, சென்னை-1.

பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன.வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன.
 
நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது.நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும்.அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான்.நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.
 
இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்து விடுவோம்.எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அனைவரும் அழிவது தான் நடக்கும்.இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான்.

நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது. இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான்.எத்தனையோ செல்வந்தர்கள் தினம் இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும்; மாமிசம், எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை.
கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை, இந்த வகையில் அவனை விடச் சிறந்தவன் இல்லையா?

இது போல் வறுமையும், நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேகமற அறிவார்கள்.
 
P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலிலிருந்து......

0 கருத்துகள்:

கருத்துரையிடுக