“இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான (பொய்ச்) செய்திகளை, (க் காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். (6:112)
ஜின்னிலுள்ள ஷைத்தான்கள், மனிதர்களிலுள்ள ஷைத்தான்களை வழிகேடு, தீமை, பொய்யான செய்திகள் போன்றவற்றைக் கொண்டு, அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி, அவர்களை வழிகெடச் செய்கிறார்கள் என்பதையே மேலேயுள்ள வசனம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது.
“மறுமையை நம்பாதோரின் இருதயங்கள் அதற்கு (அந்த வீணான செய்திகளுக்கு)ச் செவிசாய்த்து, அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் (தீய) கருமங்களை இவர்களும் செய்வதற்காகவுமே (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்)” (6:113)
நபிமார்கள் தமது சமூகங்களுக்கு அழைப்பு விடுத்த கலிமதுத் தௌஹீதை விட்டு, அம்மக்களை, மேற்காட்டிய வசனங்களில் கூறப்பட்ட வழிகேடர்கள் வழிகெடுத்துக் கொண்டிருந்தார்கள். நபிமார்களுக்கும், தௌஹீதைப் போதிப்பவர்களுக்கும் இவ்வாறான எதிரிகளை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் ஞானத்திலுள்ளதாகும்.
ஏனென்றால் இஸ்லாமியப் பிரசாரம் தௌஹீதின் மீதுதான் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவெனில் தௌஹீதின்பால் மக்களை அழைப்பதை, மக்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதாக சில ‘தாஇகள்’ (இஸ்லாமிய அழைப்பாளர்கள்) கருதுகின்றனர். தௌஹீது தான் பிரிந்த நிலையிலிருக்கும் மக்களை ஒன்று படுத்துவதாய் இருக்கின்றது. ‘தௌஹீத்’ என்று கூறப்படும் அந்தப்பதமே அதற்குச் சான்றாய் அமைந்துள்ளது.
முஷ்ரிக்குகளோ, ‘படைத்தவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்புதல்’ என்ற கருத்துடனுள்ள ‘தௌஹீதுர் ருபூபிய்யா’வை அறிந்திருந்தனர். அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை ஏற்றிருந்தனர். அவர்கள் நிராகரித்ததெல்லாம் ‘அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைக்கக்கூடிய இரட்சித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமேயாகும்’ என்று கருத்துப்படும் தௌஹீதுல் உலூஹிய்யாவைத்தான்.
தமக்குப் பாதுகாப்பளிப்பவர்கள் என்று தவறாக நம்பிக்கைக் கொண்டிருந்த தமது அவ்லியாக் (பாதுகாவலர்)களைப் பிரார்த்தனை செய்து அழைப்பதை அவர்கள் கைவிடவில்லை. வணங்குவதிலும் வழிபடுவதிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தக் கூடியதாக அல்லாஹ்வை மட்டுமே அழைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை அழைத்தபோது அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது பற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“என்ன! இவர் (முஹம்மத் (ஸல்) அவர்கள் நாங்கள் வணங்கும்) தெய்வங்கள் யாவற்றையும் (நிராகரித்து விட்டு, வணக்கத்துக்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கி விட்டாரா? உண்மையாகவே, இது ஓர் ஆச்சர்யமான விஷயம்தான்” (38:05)
நபி (ஸல்) அவர்களுடைய காலத்து நிலையை மேற்கண்டவாறு அல்லாஹ் கூறிவிட்டு, அவர்களுக்கு முன்னாலிருந்த சமுதாயங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
“இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (அவர்களிடம்) எந்தத்தூதர் வந்த போதிலும் (அவரைச்) ‘சூனியக்காரர்’ அல்லது ‘பைத்தியக்காரர்’ என்று அவர்கள் கூறாமல் இருக்கவில்லை” (51:52)
‘அல்லாஹ் ஒருவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும்’ என்று கூறுவதை முஷ்ரிக்குகள் செவிதாழ்த்தினால் அவர்களுடைய உள்ளங்கள் சுருங்கி விடும்; விரண்டோடுவார்கள்; நிராகரித்துப் புறக்கணிப்பார்கள்; இவை இணை வைப்பவர்களின் பண்புகளாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் அவர்களுடைய பண்புகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்.
“தனித்தோனாகிய அல்லாஹ்(வின் பெயரை) மட்டும் கூறப்பட்டால், மறுமையை நம்பாதவர்களின் இருதயங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. (எனினும்,) அவனல்லாதவை(களின் பெயர்)கள் கூறப்பட்டாலோ, சந்தோசப்பட்டு (அவர்களுடைய இருதயங்கள் விரிந்து மலர்ந்து) விடுகின்றன” (39:45)
தௌஹீதைப் புறக்கணிக்கக்கூடிய, இணைவைப்பவர்களைப் பற்றி, அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“(ஷிர்க் வைத்த குற்றத்துக்காக மறுமையில் தண்டனை பெறுபவர்களை நோக்கி அல்லாஹ்,) இ(த் தண்டனை கிடைத்த)தன் காரணமாவது: ‘அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறப்பட்டபோது, அதனை நீங்கள் நிராகரித்தீர்கள். அவனுக்கு இணையாக்கப்பட்ட போது நம்பினீர்கள். ஆதலால், (உங்களுக்குக் கிடைத்திருக்கும்) இத்தீர்ப்பு மிகப் பெரியவனும் மேலானவனுமான அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவான்” (4:12)
மேற்காட்டிய வசனங்கள் காஃபிர்களுடைய விஷயத்தில் அமைந்தனவாயிருந்தாலும் தாம் இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, மேற்சொன்ன காஃபிர்களுடைய பண்புகளுடன் இருப்போருக்கும் அவை பொருத்தம் உடையதாக இருக்கும்.
இவர்கள் தௌஹீத் பிரசாரகர்களுடன் போர் தொடுத்து அவர்கள் மீது பல அவதூறுகளைச் சொல்லிக் கொண்டு, வெறுக்கத்தக்க பல மோசமான பெயர்களைச் சூட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வெதிரிகள் தௌஹீதைப் பிரசாரம் செய்வதற்கென்றே அனுப்பப்பட்ட ரஸூல்மார்களுடைய போதனைகளை மக்களுக்கு வெறுப்பூட்டி, அதனை விட்டு அவர்களைத் தடுக்கின்றனர்.
அல்லாஹ்விடம் மட்டுமே வேண்டப்படுகின்ற துஆவை இவர்கள் செவி தாழ்த்தினால் இவர்களிடம் உள்ளச்சம் இருக்காது.
ரஸூலுல்லாஹ்விடமோ, அல்லது அவ்லியாக்களிடமோ உதவி வேண்டிப் பிரார்த்திக்கப்பட்டால் அதனை உள்ளச்சத்துடன் உயர்வாக கருதுவார்கள். இவர்களது செயல் எந்தளவு கெட்டதாகவுள்ளது?
நன்றி : mpmpages
0 கருத்துகள்:
கருத்துரையிடுக