அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 29 ஜூலை, 2011

இறையில்லத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் (பகுதி-2)

அலங்காரம் செய்தல்

இறையில்லத்திற்குள் இறைவனை வணங்குவதற்காக வரும்போது அலங்காரமாக, தூய்மையான ஆடையணிந்து வரவேண்டும் என்று இந்த வசனம் தெரிவிக்கின்றது.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 7 : 31


ஆனால் இஸ்லாமிய சமுதாயம் தங்களை அலங்கரிப்பதை விட்டுவிட்டு பள்ளிவாசல்களை அலங்கரிப்பதை காண்கிறோம். பள்ளிக்குள் வரும்போது அழுக்குப்பண்டாரமாக, துர்நாற்றத்துடன் வருகின்றார்கள். ஆனால் பள்ளிவாசல்களை மின்விளக்குகளால் அலங்கரிக்கின்றார்கள்.

பள்ளிவாசல்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக வானாளாவிய அளவில் இராட்சத மின்விளக்குகளை பள்ளிவாச­ல் பொருத்துவதையும், சிறுசிறு மின்விளக்குகள் மூலம் பள்ளிவாசல் முழுவதையும் ஜோடனை செய்வதையும் இந்த வசனம் கூறுகின்றது என்று சொல்லி­ மக்கள் செய்யும் காரியத்தினை அனுமதிக்க முடியாது.


அலங்காரத்துடன் வரவேண்டும் என்பதின் பொருள் உயர்தரமான, விலையுயர்ந்த ஆடையணிந்து, உயர்ரக நறுமணம் பூசி வரவேண்டும் என்பதல்ல. நம்மிடத்தில் என்ன ஆடை இருக்கின்றதோ அவற்றை தூய்மையாக அணிந்து, துர்நாற்றத்தை களைந்து வரவேண்டும் என்பதே.


ஒரு பிரமுகரை சந்திக்கச் செல்லும் போது, விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அலங்காரமாக செல்கின்றோம். இறைவனை சந்திக்க வரும் போதும், தொழுகையில் பங்கெடுக்க வரும் போதும் அழுக்காடைகளுடன் வருகின்றோம். இறைவனை சந்திக்க, அவனிடத்தில் கோரிக்கைகளை முன்வைக்க வருகிறோம் என்ற சிந்தனையை மனதில் நிறுத்தாததே இதன் காரணம்.


துர்வாடையை அகற்றுதல்
சிலர் நம் அருகில் நின்று தொழுவார்கள். நமது கவனத்தை சிதறவைக்குமளவு அவர்களின் வாயி­ருந்து வெளிப்படும் ஒரு வித துர்வாடை நம்மை தொந்தரவு செய்யும். ஒரு சிலர், துர்வாடையை சகிக்க முடியாமல் தொழுகையை முறித்துவிடும் நிகழ்வுகளும் உண்டு. இது போன்று பிறர்களுக்கு தொந்தரவு செய்யுமளவில் நம்முடைய செயல் அமைந்து விடக்கூடாது, அவர்களுடைய தொழுகையில் குறைவு ஏற்படுதவற்கு நாம் ஒரு காரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக பள்ளியில் வருமுன் துர்வாடையை ஏற்படுத்தும் உணவை சாப்பிட்டால் வாயி­ருந்து வெளிப்படும் துர்வாடையை நீக்கி விட்டு பள்ளியினுள் வரவேண்டும் என்று நபிகளார் கட்டளையிடுகின்றார்கள்.


நபி (ஸல்) அவர்கள், ”வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மை விட்டும் விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நம் பள்ளிவாசலை விட்டும் விலகியிருக்கட்டும்’ அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்” என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)
புகாரி 855


பச்சையாக வெங்காயம், பூண்டு போன்றதை சாப்பிட்டவர்கள் தொழுகைக்காக பள்ளிக்கு வரவேண்டாம் என்று இச்செய்தியில் கூறுகின்றார்கள். (சமைக்கப்பட்டவை துர்வாடையை ஏற்படுத்தாது.) ஏனெனில் அவைகள் துர்வாடையை ஏற்படுத்துபவையாகும். பள்ளிக்கு வரவேண்டாம் என்று நபிகளார் கூறுவதை இவைகளை சாப்பிட்டு விட்டு வீட்டிலயே அமர்ந்து விட வேண்டும் என்று புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக துர்வாடையை அகற்றிவிட்டு விரைவாக தொழுகைக்கு வரவேண்டும் என்பதை கண்டிப்புடன், கோபத்துடன் கூறுகின்றார்கள் என்று விளங்கி கொள்ள வேண்டும்.


ஹலாலான பொருட்களான வெங்காயம், பூண்டு போன்றதை சாப்பிட்டால் கூட அதன் துர்வாடையை அகற்றிவிட்டு தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று நபிகளார் கூறுகின்றார்கள். ஆனால் சிலர் ஹராமான பீடி, சிகரெட், பான்பராக் போன்றவைகளை உட்கொண்டும், அதன் துர்வாடையுடன் தொழுகின்றார்கள். அருகில் இருப்பவர்களுக்கு தொல்லையளிக்கின்றனர். இது எவ்வளவு கண்டிக்கத்தக்க காரியம் என்பதை விளங்கவும்.

அசுத்தம் செய்யக் கூடாது
இறைவனின் இனிய இல்லத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இப்பணியை பள்ளிப் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விலகியிருத்தல் கூடாது. இது நம் அனைவர்களின் கடமை என்று உணர்ந்து நாமும் பங்களிப்பு செலுத்த வேண்டும். பலரும் பள்ளியை அசுத்தம் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். பள்ளியினுள் நகங்களை பிய்த்து, அங்கேயே எறிவது, கழிவறைக்கு சென்றால் அதை சரியாக சுத்தம் செய்யாமை, தொழுகை விரிப்பை நோண்டுவதோடு அக்குப்பையை அங்கேயே அகற்றாமல் விட்டுவிடுவது போன்ற காரியங்களின் மூலம் பள்ளிவாசலை குப்பைக் கூடமாக மாற்றிவிடுகின்றார்கள். பள்ளிவாசல் இது போன்ற அசுத்தம் செய்வதற்குரிய இடமல்ல என்று நபிகளார் கண்டிக்கின்றார்கள்.


ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் ‘நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அழைத்து ”இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்” என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம்  கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்­லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா­ரிக் (ர­லி)
முஸ்­லிம் 480


நன்றி : கடையநல்லூர் அக்ஸா  
                 & 
அப்துல் கரிம் மேளப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரி

தொடரும் இன்ஷாஅல்லாஹ்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக