செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மார்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை இந்தியா அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்துகிறது. ரூ.450 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி & எக்ஸ்.எல். ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் செவ்வாய்கிரக ஆராய்ச்சி திட்டம் குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மூத்த விண்வெளித்துறை விஞ்ஞானியுமான யு.ஆர்.ராவ் கூறியதாவது:
'இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கமே செவ்வாய் கிரகத்தின் மீத்தேன் வாயு மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதுதான்.
சந்திரயான்-1 திட்டத்தை நாம் முதலில் தொடங்கியபோது சந்திரனில் தண்ணீர் இருப்பதை நாம் கண்டுபிடிக்கப்போகிறோம் என்று நமக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் சந்திரன் பற்றிய ஆராய்ச்சியை நாம் தாமதமாகவே தொடங்கினோம் என்றாலும் சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்ற அரிய உண்மையை நாம்தான் முதலில் கண்டு பிடித்தவர்களானோம்.
அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான குறிக்கோளையும் நாம் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இது உள்ளபடியே ஒரு நல்ல ஆராய்ச்சி ஆகும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளது. இந்த வாயு எப்படி உருவாகிறது. எது இந்த மீத்தேன் வாயுவை உருவாக்குகிறது என்ற மர்ம முடிச்சை அவிழ்ப்பதுதான் நமது மார்ஸ் ஆர்பிட்டரின் நோக்கம் ஆகும்.
இது தவிர செவ்வாய் கிரகம் பற்றிய ஏராளமான விடைதெரியாத கேள்விகள் நம் முன்னே அணி வகுத்து நிற்கின்றன. தற்போதைய நிலையில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் உள்ளன. வீனஸ் கிரகம் பூமிக்கு அருகே உள்ளது. இருந்தபோதிலும் அது வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. செவ்வாய் கிரகமும் பூமிக்கு அருகே உள்ளது. இருந்தாலும் அதன் வளிமண்டலம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது. ஆக்சிஜனும் இங்கு குறைவாகவே உள்ளது. செவ்வாய் கிரகம் முழுவதும் காந்த பொருட்கள் பரவி உள்ளன. இருந்தாலும் அங்கு காந்த வயல்கள் இல்லை. அது ஏன்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. நாம் மிகக்குறைந்த அளவிலேயே செவ்வாய் கிரகம் பற்றி அறிந்து வைத்து இருக்கிறோம். 500 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
பூமியில் உள்ள வளங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் வளங்களை நாம் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன. வாழ்வதற்கு ஏற்ற கிரகம் செவ்வாய் என்று ஏராளமானவர்கள் நம்புகிறார்கள். இருந்தாலும் அதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன'.
இவ்வாறு விஞ்ஞானி யு.ஆர்.ராவ் கூறினார்.
நன்றி : மாலைமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக