அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -16)

ஆன்மீகத் தலமையாலும் பலனடையவில்லை

ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி பெறுகின்றனர். நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விட அதிக மோசடிக்காரர்களாகவும் இவர்களே திகழ்கின்றனர்.

* தம்மைக் கடவுளின் அம்சமென வாதிடுவது

* சாபமிடுவதாக அச்சுறுத்துவது

* ஆசி வழங்குவதாகக் கூறி ஏமாற்றுவது

* புலனுக்குத் தெரியாதவை பற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது

* கட்டளைகள் யாவும் மற்றவர்களுக்குத் தானே தவிர தனக்குக் கிடையாது என்று நடந்து கொள்வது

* வயிறு வளர்க்கவும், சொத்து சேர்க்கவும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்வது

* மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பது


என்றெல்லாம் பலவிதமான மோசடிகள் காலங்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன. இவற்றில் எதையும் செய்யாதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாக எதிர்த்த ஒரே ஆன்மீகத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்ந்தார்கள்.ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளைக் கண்டு ஆன்மீகத்தை முழுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்கள் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவுக்கு ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை எதிர்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசடிகளை எதிர்த்தார்கள்.ஆன்மீகத் தலைவர்களுக்கு அளவு கடந்த மரியாதை செய்யப்படுவதைக் கண்டு அதை எதிர்த்த எத்தனையோ தலைவர்கள் அது போன்ற மரியாதை தமக்குச் செய்யப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வரலாற்றில் அநேக சான்றுகள் உள்ளன. நாமே இத்தகையவர்களை இன்றளவும் சந்தித்து வருகிறோம்.

ஆனால், ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத் தலைவர்களுக்குச் செய்யப்படும் அளவு கடந்த மரியாதையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். அறியாத மக்களால் தமக்கே அத்தகைய மரியாதை செய்யப்படும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்தி அதைத் தடுத்தார்கள். அவர்களை மாமனிதர் என்று வரலாறு போற்றுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.ஆன்மீகத் தலைமை அரசியல் தலைமையை விட வலிமையானது. இந்தத் தலைமையின் காரணமாகத் தான் அரசியல் தலைமை கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வந்தடைந்தது எனலாம்.இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பல நூறு ஆன்மீகத் தலைவர்களில் அவர்களும் ஒருவர் என்ற நிலையில் அவர்களின் தலைமை இருக்கவில்லை. மாறாக, முழுமையான அதிகாரம் படைத்த ஒரே ஆன்மீகத் தலைவராக அவர்கள் திகழ்ந்தார்கள்.உயிரைக் கொடுக்கச் சொன்னால் கூட கொடுப்பதற்குத் தயாரான மக்கள் கூட்டம் அவர்களுக்கு இருந்தது.அவர்களது எந்த உத்தரவையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எந்தக் கேள்வியுமின்றி நிறைவேற்றக்கூடிய தோழர்களை அவர்கள் பெற்றிருந்தார்கள்.அப்படி இருந்தும் ஆன்மீகத் தலைமையைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் அவர்கள் பெற்றதில்லை. முதன் முதல் அவர்கள் செய்த முக்கியமான பிரகடனமே இது தான்!

'எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நம்மைப் போன்றவர்களுக்கு இது சாதாரண பிரகடனமாகத் தோன்றலாம். ஆன்மீகத் தலைவர்களுக்கு இது ஆபத்தான பிரகடனமாகும். 'நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நாங்கள் தனிப் பிறவிகள்; தெய்வப் பிறவிகள்; அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்கள்' என்ற பிரகடனத்தில் தான் அனைத்து ஆன்மீகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.இந்த மாமனிதரோ அந்த ஆணி வேரையே பிடுங்கி வீசுகிறார்.ஏதோ பெயரளவுக்கு இப்படி அறிவித்து விட்டு நடைமுறையில் அதற்கு மாற்றமாக நடந்திருப்பார்களோ என்று யாரும் நினைக்க வேண்டாம். நடைமுறைப்படுத்தாத ஒரு பேச்சையும் பேசாத தலைவர் நபிகள் நாயகம். தமது வாழ் நாள் முழுவதும் இதை நடைமுறைப் படுத்திக் காட்டி விட்டுச் சென்றார்கள்.அவர்களின் வரலாற்றில் இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.  
எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் தனது அருள் போர்வையை என் மீது போர்த்தினால் தவிர நானும் அப்படித் தான்' என்றார்கள்.  
நூல் : புகாரி 5673, 6463, 6467

மனிதன் தனது வாழ் நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்தாலும் அதற்காக சொர்க்கம் எனும் மகத்தான பரிசைப் பெற இயலாது. ஏனெனில் சொர்க்கம் என்பது நினைத்ததெல்லாம் கிடைக்கக் கூடிய அழியாத பெரு வாழ்வாகும். மனிதர்கள் செய்யும் சிறிய செயல்களுக்கு பெரிய அளவில் இறைவன் நன்மைகள் வழங்குவதால் தான் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது இதன் கருத்தாகும்.'நீங்களுமா?' என்று நபித்தோழர்கள் கேட்ட போது 'எனது நிலை வேறு' என்று அவர்கள் பதிலளித்தால் அந்த மக்கள் அதை அப்படியே நம்பியிருப்பார்கள். 'நான் செய்யும் வணக்கத்திற்கு எத்தனை சொர்க்கம் தந்தாலும் போதாது; அந்த அளவுக்கு நான் வணக்கம் புரிகிறேன்' என்று அவர்கள் கூறினாலும் மக்கள் நம்பியிருப்பார்கள்.நான் சொர்க்கத்துக்குப் போவதாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் அருள் இருந்தால் தான் நடக்கும். எனது செயல்களால் அல்ல என்று அறிவிப்பது ஆன்மீகத் தலைவர்களுக்கு மிகவும் கஷ்டமானதாகும்.

ஆன்மீகத் தலைவர்களிடம் ஆசி பெறுவதை பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் அதற்கு முன் ஒரு பெரியாரிடம் ஆசி பெறுகின்றனர். இவ்வாறு ஆசி பெற்று விட்டு அக்காரியத்தில் இறங்கினால் அக்காரியம் கை கூடும் எனவும் நம்புகின்றனர்.ஆசி வழங்கும் பெரியார்களும் இதை உள்ளூர விரும்புகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்ற மனிதர்கள் தான். ஆன்மீகத் தலைவர்களின் காரியங்கள் கூட பெரும்பாலும் கை கூடுவதில்லை. அவர்களுக்கே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தங்களிடம் எந்த ஆற்றலும் இல்லை என்பது ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தாலும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இந்த நம்பிக்கையையும் ஒழித்துக் கட்டினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் என்னைப் பற்றி பேசும் போது என்னிடம் எதையும் பிரார்த்திக்கக் கூடாது. என்னிடம் ஆசி கேட்கக் கூடாது. எனக்காக இறைவனிடம் நீங்கள் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களைப் பற்றி பேசும் போது 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' எனக் கூறுகிறார். எழுத்தில் சுருக்கமாக 'ஸல்' எனக் குறிப்பிடுகிறார். 'அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்' என்பது இதன் பொருள்.மாபெரும் ஆன்மீகத் தலைவரான தமக்காக மற்றவர்கள் இறைவனிடம் இறையருளை வேண்ட வேண்டும் என்று அவர்கள் கற்றுத் தந்ததால் தான் முஸ்லிம்கள் எந்த மனிதனையும் வணங்குவதில்லை; ஆசி வாங்குவதில்லை. ஆன்மீகத்தின் காரணமாக கிடைக்கும் ஆசி வழங்கும் பெருமையைக் கூட ஒழித்துக் கட்டினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் நபிகள் நாயகத்துக்குப் பக்கபலமாக இருந்தார். அவர்களின் பிரச்சாரத்துக்கும் உறுதுணையாக இருந்தார். அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது அவரைச் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அகில உலகையும் படைத்த இறைவன் ஒரே இறைவன் தான்' என்ற கொள்கையின் பால் அவரை அழைத்தார்கள். அவர் அதனை ஏற்க மறுத்து தமது பழைய கொள்கையிலேயே மரணித்து விட்டார். அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிதும் கவலைப் பட்டார்கள். அப்போது 'நீர் நினைத்தவரை உம்மால் நேர்வழியில் செலுத்த இயலாது. தான் நாடியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான்' என்ற வசனம் (28:56) அருளப்பட்டது. புகாரி: 3884

ஒருவரை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என்று இறைவன் கண்டித்ததாக அறிவித்ததன் மூலம் அல்லாஹ்வின் தூதராக இருப்பதால் அல்லாஹ்வின் அதிகாரம் ஏதும் தமக்கு வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.இறைவனை வணங்கும் போது மனிதர்களால் மனம் ஒன்றிப் போய் வணங்க முடிவதில்லை. இறைவனை வழிபடும் நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் குறுக்கிடுவதை ஒவ்வொருவரும் அனுபவப்பூர்வமாக உணர்கிறோம்.

ஆன்மீகத் தலைவர்களின் நிலையும் இது தான். ஆனாலும் ஆன்மீகத் தலைவர்கள் தங்களைப் பற்றி பொய்யான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியுள்ளனர். தாங்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனுடன் ஒன்றி வணக்கம் புரிவதாக மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களும் அதை அப்படியே நம்புகின்றனர்.இதன் காரணமாகவே இறைவனிடம் தங்கள் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்காமல் ஆன்மீகக் குருமார்கள் வழியாகக் கேட்டு வருகின்றனர்.இந்தப் பித்தலாட்டத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முறியடித்தார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடையை அணிந்து தொழுதார்கள். அந்த வேலைப்பாடுகளின் பால் அவர்களின் கவனம் சென்றது. தொழுது முடித்ததும் 'எனது இந்த ஆடையை அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு அவரது ஆடையை எனக்கு வாங்கி வாருங்கள்! ஏனெனில் இந்த ஆடை எனது தொழுகையில் ஈடுபாட்டை திசை திருப்பிவிட்டது' என்று கூறினார்கள். புகாரி: 752, 373, 5817

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனம் ஆடையின் வேலைப்பாடுகளில் சென்றது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும். 'நான் உங்களைப் போன்றவன் அல்ல. என்னை எதுவும் கவனத்தைத் திருப்ப முடியாது' என்று அந்த மக்களை நபிகள் நாயகம் (ஸல்) ஏமாற்ற விரும்பவில்லை. மாறாக தொழுகையில் ஈடுபடும் போது உங்கள் கவனம் எவ்வாறு திரும்புமோ அது போல் என் கவனமும் திரும்பும். இந்த ஆடையின் வேலைப்பாட்டைப் பார்த்தவுடன் அதன் பால் என் கவனம் சென்று விட்டது' என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.

நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன். அப்போது பின்னால் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது. அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகத் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி 707, 708, 709, 710, 868

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுக்குத் தான் கவனம் வேறு பக்கம் செல்லும். என் கவனம் தொழுகையில் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் மக்களை நம்ப வைத்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் மக்களை நம்ப வைக்கின்றனர்.ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குழந்தையின் அழுகுரல் தொழுகின்ற தமது கவனத்தை ஈர்ப்பதாகவும், அது தம் காதில் விழுவதாகவும், அதன் காரணமாகவே தொழுகையைச் சுருக்க மாக முடிப்பதாகவும் தாமே முன் வந்து மக்களிடம் அறிவிக்கிறார்கள்.தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால், 'தாம் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் அல்லர்' என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது வழக்கமாகத் தொழுவதை விட அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தொழுதார்கள். தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன். எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்' என்று குறிப்பிட்டார்கள்
 நூல் : புகாரி 401

மக்கள் சுட்டிக் காட்டிய போது 'எனது நிலை வேறு; உங்கள் நிலை வேறு' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் மக்கள் இதை மறுக்கப் போவதில்லை. இன்று முதல் தொழுகை முறை மாற்றியமைக்கப்பட்டு விட்டது எனக் கூறி நபிகள் தமக்கு மறதி ஏற்பட்டதை மறைத்திருக்கலாம்.
ஆனால், இந்த மாமனிதர் மிக முக்கியமான வழிபாட்டில் தமக்கு மறதி ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இனி மேல் இவ்வாறு ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 'இதற்குக் காரணம் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே' என்கிறார்கள்.சராசரி மனிதனே தனது தவறை சபையில் ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்டுவதையும், வெட்கப்படுவதையும் காண்கிறோம். இந்த ஆன்மீகத் தலைவரோ தாமும் மற்றவரைப் போன்ற மனிதர் தாம் என்பதை எந்த நேரத்திலும் பகிரங்கப்படுத்திட தயக்கம் காட்டாதவராக இருக்கிறார்கள்.
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக