அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 8 ஜூன், 2012

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 3)

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.
கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.
அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 231)
மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும் இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உமக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)
இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும். ஆனால் கிதாபையும் ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.
குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்துடையவர்கள் இதற்குப் பதிலளிக்கும் போது எள்ளி நகைக்கும் விதமாக உளற ஆரம்பித்து விடுகின்றனர்.
”ஹிக்மத் என்பதன் பொருள் ஞானம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுக்கிறான். அதைத் தான் இங்கே குறிப்பிடுகிறான்” என்பது இவர்களது விளக்கம்.
ஹிக்மத் என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் ஞானம், அறிவு என்பது தான். இதில் சந்தேகம் இல்லை. ஹிக்மத் என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் கொண்டவர்கள் கிதாப் என்ற வார்த்தைக்கும் நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும். கிதாப் என்ற வார்த்தைக்கு எழுதப்பட்டது – தபால் என்பது பொருள். அகராதியில் வேதம் என்று பொருள் கிடையாது.
யாரோ எழுதிய துண்டுச் சீட்டைக் கூட கிதாப் எனலாம். ஒரே வசனத்தில் இடம் பெற்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு மட்டும் அகராதியில் உள்ள பொருளைக் கொடுத்து விட்டு மற்றொரு வார்த்தைக்கு வேறு பொருள் கொடுக்க எந்த நியாயமும் இல்லை.கிதாப் என்ற வார்த்தையின் பொருள் எழுதப்பட்டது என்று இருந்தாலும் அல்லாஹ் இறக்கியருளியதாகக் கூறும் போது அதன் பொருள் வேதம் என்று ஆகி விடுகிறது. அது போலவே ஹிக்மத் என்பதன் நேரடிப் பொருள் ஞானம் என்றாலும், இங்கே ஹிக்மத்தை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அதாவது கிதாபை எவ்வாறு இறக்கியருளி இருக்கிறானோ அது போலவே ஹிக்மத்தையும் இறக்கியருளியிருக்கிறான்.
பொதுவாக மனிதர்களுக்கு ஞானம் வழங்கியது பற்றிக் குறிப்பிடும் போது ஞானத்தைக் கொடுத்ததாகவும், நபிகள் நாயத்துக்கு ஞானத்தை வழங்கியது பற்றிக் கூறும் போது ஞானத்தை இறக்கியருளியதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே குர்ஆன் போன்ற மற்றொரு வஹீயை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்பதே இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய இருவசனங்களுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
மிகத்தெளிவான இவ்விரு வசனங்களுக்கும் முன்னால் இவர்களின் புரட்டு வாதம் நொறுங்கிப் போவதைக் கண்டவுடன் வேறு விதமாகவும் சமாளிப்பார்கள், சமாளிக்கிறார்கள். அதாவது கிதாப் தான் ஹிக்மத், ஹிக்மத் தான் கிதாப். இரண்டும் ஒன்று தான். கிதாபு என்றும் ஹிக்மத் என்றும் குர்ஆனையே இங்கே குறிப்பிடுகிறான் என்று பிதற்றுகிறார்கள்.
அல்லாஹ்வின் வசனங்களை எப்படியெல்லாம் கே­லிக் கூத்தாக்குகிறார்கள் என்பதற்கு இந்த உளறல் சரியான ஆதாரமாகவுள்ளது. அதுவும் இதுவும், அவனும் இவனும் என்று ”உம்”மைப் பயன்படுத்தினால் இரண்டு தனித்தனி பொருட்களுக்கிடையே தான் பயன்படுத்த முடியும்.
அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புங்கள் என்று கூறினால் அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ் என்று வியாக்கியானம் அளிப்பது போன்ற பைத்தியக்காரத்தனமாக இவர்களது கூற்று அமைந்துள்ளது.
சோறும் குழம்பும் தந்தான் என்றால் இரண்டு பொருட்கள் தரப்பட்டதாகத்தான் பொருள்.இன்னும் தங்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மேலும் உளறுகிறார்கள்.குர்ஆனில் ஹிக்மத் (ஞானம்) இல்லையா? ஹிக்மத்துடைய குர்ஆன் என்று யாசீன் அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படவில்லையா என்று கேட்டு இரண்டையும் ஒன்றாக்க முயல்கின்றனர்.இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் யாசீன் அத்தியாயத்தில் கூறியது போல் ஏன் இங்கே கூறவில்லை. ஹிக்மத்தான கிதாப் என்று கூறாமல் ஹிக்மத்தையும் கிதாபையும் என்று ஏன் கூற வேண்டும்? யாசீன் அத்தியாயத்தில் பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு அவ்வார்த்தையின் அமைப்பை வைத்துப் பொருள் கொள்வது போல் இங்கே பயன் படுத்தப் பட்ட வார்த்தைக்கு பொருள் கொள்ளும் போது இங்கே பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பை வைத்துத் தான் பொருள் கொள்ள வேண்டும். இங்கே கிதாப் என்ற ஒரு பொருளும் ஹிக்மத் என்ற இன்னொரு பொருளும் வழங்கியதாகத் தெளிவாகக் கூறப்படுகின்றது.
இவர்களது அறியாமையைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும். பொறுமை மிகுந்த சுலைமான் என்று ஒரு நாள் நான் கூறுவதாக வைத்துக் கொள்வோம். மறுநாள் மக்களிடம் ”பொறுமையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பொறுமை மிகுந்த சுலைமான் என்று நீங்கள் தானே கூறினீர்கள். எனவே சுலைமானை நான் பிடிக்கப் போகிறேன். சுலைமானிடமும் பொறுமை இருக்கத் தானே செய்கிறது என்று ஒருவன் வாதிட்டால் அவனை நாம் என்ன வென்போம்? அவனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சுலைமானிடம் பொறுமை இருப்பது தனி விஷயம். இந்த இடத்தில் பொறுமை எந்தக் கருத்தில் பயன் படுத்தப் பட்டது என்பது தனி விஷயம். எனவே அல்லாஹ் வேதத்தை எவ்வாறு தன் புறத்தி­ருந்து அருளினானோ அவ்வாறே ஹிக்மத்தையும் தன் புறத்தி­ருந்து வஹியாக அருளியிருக்கிறான். அதை நாம் ஹதீஸ்கள் என்கிறோம்.குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்லாஹ் இறக்கியருளிய ஹிக்மத் எது என்பதை குர்ஆனிலிருந்து கண்டு பிடித்துக் காட்டட்டும்!
ஹிக்மத் என்பதற்கு இவர்கள் கூறுகின்ற விளக்கம் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனே சான்று கூறுகிறது.
நன்றி : tntj.net
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக