அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 26 மார்ச், 2011

ஐபேட்-2 அறிமுகம்

ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது. முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலை சிறிது கூட குறைக்கப் படவில்லை. வை-பி(WiFi) திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் அமெரிக்காவில் வெளியான இந்த ஐபேட் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 25ல் வெளியாகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என அறிவிக்கப்பட்டவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட A5 என அழைக்கப் பட்ட புதிய டூயல் கோர் ப்ராசசர் இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.
இது இயக்க வேகத்தினை இரு மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரு மடங்கு பணிகளை மேற்கொள்ளலாம். இணையத்தில் உலா வரும் போதும், திரைப்படங்களைப் பார்க்கும் போதும், ஒரு அப்ளிகேஷ னிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போதும், இந்த வித்தியாசத்தினை உணரலாம். பல புரோகிராம்களின் இயக்கம் ஒரே நேரத்தில் மேற்கொள்கையில் இந்த வேகம் புலப்படுகிறது. கிராபிக்ஸ் ப்ராசசர் வேகம் ஒன்பது மடங்கு கூடுதலாக மேற்கொள்ளப்படுகிறது. கேம்ஸ் விளையாடுகையில் இதனை உணரலாம். அல்லது போட்டோ லைப்ரேரி மற்றும் வீடியோ எடிட்டிங் செயல்பாடுகளில் கிராபிக்ஸ் வேகத்தை அறியலாம்.
2. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் என இரண்டு கேமராக்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கலாம். வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை மிக எளிதாக இந்த கேமராக்களின் மூலம் மேற்கொள்ளலாம். குறிப்பாக பேஸ் டைம் (Face Time) வீடீயோ அழைப்பு மற்றும் அரட்டைக்கு இது உதவுகிறது.
3. முந்தைய ஐபேடைக் காட்டிலும் 33% ஸ்லிம்மாகவும் அழகாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட் 13.4 மிமீ தடிமன் கொண்டிருந்தது. இது 8.8. மிமீ கொண்டுள்ளது. ஐபோன்4 9.3 மிமீ அளவில் தடிமன் கொண்டது என்பது நினைவிற்குரியது. எடை 1.5 பவுண்டுக்குப் பதிலாக 1. 3 பவுண்டு உள்ளது. முதல் முறையாக கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உள்ளது. இதன் உயரம் 9.5 அங்குலம்; அகலம் 7.3; தடிமன் 0.34 அங்குலம்.
4. இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 4.3 பதிப்பிற்கு உயர்த்துகிறது. இது அனைத்து ஐபேட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம். மேலும் சில ஐபாட் சாதனங்களிலும், சில ஐபோன்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த பதிப்பில், மேம்படுத்தப்பட்ட சபாரி பிரவுசர் தரப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்க 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் உள்ளன.
5. ஏர் பிரிண்ட் எனப்படும் தொழில் நுட்பம் மூலம், எந்த வித வயர் இணைப்பு இல்லாமல் டாகுமெண்ட்களையும், போட்டோக்களையும், இணையப் பக்கங்களையும் அச்செடுக்கலாம். வை-பி(WiFi) இருந்தால் போதும். அதனையும் தானே உணர்ந்து அறிவிக்கிறது.
6.ஒரு தொழில் நுட்பம் எப்போது அதிகப் பயன் தருவதாக அமைகிறது என்றால், பயன்படுத்துகையில் அது ஒரு தொழில் நுட்பமாக அறியப்படக் கூடாது. ஐபேட் அந்த சிறப்பைப் பெற்றுள்ளது. விரல்களினால் மெதுவாகத் தட்டியே, இணையத்தை உலா வரலாம்; இமெயில்களைப் படித்து பதில் தரலாம்; போட்டோக்களை விரித்துப் பார்த்து எடிட் செய்திடலாம். நூல்களின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கலாம். நம் ஸ்கிரீன் தொடுதல்கள் இப்படி பல செயல்களாக மாறுகையில் ஏதோ மந்திரக் கோல்களினால் செயல்கள் நடைபெறுவதைப் போல் உள்ளது.
7. இதன் பேக்லைட் எல்.இ.டி. டிஸ்பிளே திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. அதிக ரெசல்யூசன் கொண்ட போட்டோக்கள், படங்கள், விளையாட்டுக்கள் உயிர்த்துடிப்புடன் நம் முன்னே உலா வருகின்றன. நாம் எப்படி இதனைப் பிடித்தாலும், அதற்கேற்ப டிஸ்பிளே மாறிக் கொள்கிறது. இந்த காட்சி 178 டிகிரி கோணத்தில் அகலமாக அழகாக காட்சி அளிக்கிறது.
8. பத்து மணி நேரம் திறன் தரும் பேட்டரி, முந்தைய ஐபேடில் உள்ளது போலத் தரப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. 10 மணி நேரம் கடல் தாண்டும் விமானப் பயணங்களில் இது கை கொடுக்கிறது.
9. இதன் மேல்கவர் புதுமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனத்துடன் இணைந்தே உள்ளது. ஸ்கிரீனை மட்டும் மூடுகிறது. சாதனத்தை மூடினால், இயக்கம் தானாக நின்றுவிடுகிறது. திறந்தால் உடனே இயங்கத் தொடங்கிவிடுகிறது. கவர் மைக்ரோ பைபர் துணியால் ஆனது. இதனைக் கொண்டு ஸ்கிரீனைச் சுத்தம் செய்திட முடியும். மேலாக உள்ள கவர் பாலியூரிதின் அல்லது லெதர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுகையில், இந்த 2011 ஆம் ஆண்டு புதிய ஐபேட் 2 சாதனத்தின் ஆண்டாக இருக்கும். இது அடுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் என ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் கருதுவதாகவும் அது தவறு எனவும் கூறினார். ஐபேட் சாதனம், கம்ப்யூட்டருக்கு அடுத்த நிலையில் மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் பயன்படுத்தக் கூடிய சாதனமாகும் என்று தெரிவித்தார்.
10. இதில் அதிகம் எதிர்பார்த்த யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் புதிய டிஸ்பிளே ஸ்கிரீன் இல்லை. ராம் நினைவகத்தின் திறன் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஐபேடிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இது உள்ளது. புதிய, பெரிய மாற்றங்கள் எல்லாம் எதுவும் கொண்டிருக்கவில்லை. இதனால், போட்டி நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களில் அதிக மாற்றங்களும் வசதிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி : செந்தில்வயல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக