அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 28 மார்ச், 2011

பவளப் பாறைகள் (coral reefs )

சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக பூமிப்பந்தில், பரந்த அளவில், ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பவளப் பாறைகளை (coral reefs )உண்டாக்கும் எளிமையான உயிரினங்கள் தற்போது புவி வெப்பமடைத்தல், காலநிலை மாற்றங்கள், கடலோடு மாசுக்கள் கலத்தல், கடற்கரையில் உள்ள இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் மீன்பிடி போன்ற முக்கிய காரணிகளால் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அருகி வரும் நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவொன்றில் இருந்து அறியப்பட்டுள்ளது.

இந்தப் பவளப் பாறைகளே கடலரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தையும் இவை
அளிக்கின்றன. உல்லாசப் பயணத்துறையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்களை உலகெங்கும் வருமானமாக ஈட்டித்தரும் இயற்கையின் முதலீடுகளாகவும் இவை விளங்குகின்றன. அத்தோடு சிமென்ட், கண்ணாடி போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான சில மூலப் பொருட்களும் இப்பாறைகளில் இருந்தே பெறப்படுகின்றன.

பவளப் பாறை உயிரிகள் அழிவதில் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைட்டின் அளவு அதிகரிப்பதும் முக்கிய காரணியாக இனங்காணப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைட்டின் அளவு அதிகரிப்பதால் அது கடல் நீரில் கரையும் அளவும் அதிகரித்து கடல் நீரினை மேலும் அமிலத்தன்மை ஆக்குவதால் பவளப் பாறை உயிரிகளின் எளிமையான சுண்ணாம்பிலான தாங்கு வன்கூடு அமில நீரில் கரைந்து அவை அழிவுக்கு உள்ளாவதை ஊக்குவிப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பை இந்த எளிமையான உயிரிகளால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது.

இதுவரை இனங்காணப்பட்டுள்ள பவளப் பாறை உயிரிகளின் 704 இனங்களில் சுமார் 231 இனங்கள் அருகி வரும் இனங்கள் பட்டியலில் சேர்கப்பட்டுள்ளன. 1998 இல் இவற்றின் 13 இனங்களே அருகி வரும் இனங்கள் பட்டியலிலிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இந்தப் பவளப் பாறை உயிரினங்களோடு கூடி வாழ்ந்து அவை உயிர் வாழத் தேவையான கனிப்பொருட்களையும் சக்தியையும் பெற உதவுவதுடன் அழகு வர்ணங்களை வெளிப்படுத்துவும் துணை நிற்கும் அல்கா வகை உயிரினங்களும் பவளப் பாறைகள் எதிர்நோக்கும் அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் பவளப் பாறைகளின் அழகும் கெட்டு வருகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் மனிதனின் பிற கடல் வாழ் உயிரினங்களின் இருப்புக்கு அவசியமானதும் இயற்கையின் அழகு பொக்கிசங்களானதுமான இந்த உயிரினங்களின் அழிவு மனிதனின் நடவடிக்கைகளால் துரிதப்படுகிறது என்பது எமக்கு வருத்தமளிக்கின்ற விசயமே ஆகும். இந்த நிலையை தவிர்க்க அனைவரும் இவற்றினைப் பாதுகாப்பது குறித்து சிந்தித்து எதிர்காலத்தில் செயற்பட முன் வர வேண்டும்.

நன்றி : யாழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக