அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 9 மே, 2013

இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை - இளமை !

உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
 
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் 
 பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!

இந்த பூவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் அது கொள்கையானாலும் சரி, கோட்பாடுகளானாலும் சரி புதிய புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களானாலும் சரி அல்லது குடும்பப்பராமரிப்பானாலும் சரி அதன் பின்னே ஒரு இளைஞனின் கனவும் உழைப்புமே அஸ்திவாரமாய் இருப்பதைக் காணலாம்.கடினமாய் தோன்றுபவைகள் எல்லாம் இளைஞனின் கைபட்டு இலகுவாய் ஆன சம்பவங்கள் மனித வரலாற்றில் மண்டிக் கிடப்பதை சர்வசாதரணமாய் நாம் பார்க்க முடிகிறது. நபிமார்களானாலும் நல்லடியார்களானாலும் இறையருள் பிரமிக்க வைக்கும் அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் வழிகாட்டும் வரலாறுகளாய் ஆனது அவர்கள் இளமையில் வளர்த்த செயல்திட்டங்களேயாம்.அதனால் தான் அரசியல் கட்சிகளும் சரி, மதம் சார்ந்த அமைப்புகளும் சரி இளைஞர்களை கருத்தில் கொண்டு தான் செயல்படுகின்றனர். இளைஞர்களை கவரும் விதத்தில் தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றனர். இளைஞர்களை வசீகரித்து அவர்களின் அந்த தன்னலமில்லாத, எதையும் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதலை தங்களின் சுயவளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு, இளைஞர்களை பகடைக் காய்களாக ஆக்கி விடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா இளைஞர்களைக் கொண்டு தான் தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறான். மேலும் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் நமக்கு தன்னுடைய வேதத்தகத்திலே பல நபிமார்களின் வரலாறுகள் மூலமாக கற்றும் தருகிறான். மேலும் இந்த உலகில் நம்மை படைத்த இறைவன் நாம் மரணித்தப் பின் கேள்வி கேட்கப்படும் நாளில் எழுப்பப்படும்போது பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற தன்னுடைய திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூலமாக எச்சரிக்கையும் செய்கிறான்.

மறுமை நாளில் ஒரு மனிதன் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் அவனது கால்கள் அவன் நின்ற இடத்;தை விட்டு அகலாது. 1.வாழ்நாளை எப்படி கழித்தாய். 2.உன் இளமையை எப்படி செலவழித்தாய் 3,4. எவ்வாறு சம்பாதித்தாய்: எப்படி செலவழித்தாய் 5.கல்வியை எந்த வழியில் பயன்படுத்தினாய் 
(புகாரி முஸ்லிம்)

இந்த ஐந்து கேள்விகளில் ஒன்றுதான் கொடுக்கப்பட்ட இளமையை எப்படி செலவு செய்தோம். அல்லாஹ்வின் பாதையில் கழித்தோமா? அல்லது வீணடித்தோமா? 
ஆனால் இன்றைய இளைஞன் அந்தோ பரிதாபம்! தன்னுடைய இலக்கு என்ன? நாம் பயணிக்க வேண்டிய பாதை எது? என்பதை தெரிந்து கொள்ளாமல் நடிகர்களின் பின்னாலும் நடிகைகளின் பின்னாலும் சென்று கொண்டிருக்கும் அவலம்.ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்ணியமிக்க அல்லாஹ் அழகான வரலாற்றின் மூலம் சொல்லிக் காண்பிக்கிறான்.  

கேட்போருக்கு யூசுப்பிடமும் அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.(12:7) 

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றா விட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து விடுவேன் என்றார். (12:33)

அல்லாஹ்வின் தூதரான யூசுப் (அலை) அவர்கள் எந்த வீட்டில் வளர்ந்தார்களோ, யார் அவர்களை வளர்த்தாரோ அந்த பெண் அவரை தன்னுடைய இச்சைக்கு இசையுமாறு அழைக்கும் போது, அவர்கள் அல்லாஹ்வின் பயத்தால் அந்த தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதை விட்டும் விலகுகிறார்கள். அந்த பெண்களின் சூழ்ச்சியை விட சிறைச்சாலை தனக்கு நல்லது என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான். 
ஆனால் இன்றோ, கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் பெற்றோர்கள் எவ்வளவு சிரமம் கொண்டு தங்களை படிக்க வைக்கின்றார்கள் அதற்காக அவர்கள் சிந்தும் தியாகங்கள் என்னவென்றெல்லாம் சிந்திக்காமல் தன்னோடு படிக்கும் சக மாணவிகளை காதலித்து படிக்கின்ற காலத்தில் பெற்றோர்களை தவிக்க வைத்து விட்டு ஒடிப் போய் அதனால் சிறைச்சாலைக்கு சென்று தியாகி பட்டத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதே போல் சாதிக்க வேண்டிய இளைஞர்கள் சாதித்துக் காட்டிட வேண்டிய பருவத்தில் தங்களின் பொன்னான நேரங்களை மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் கன்னியரின் கடைக்கண் பார்வைக்காக  காத்துக்கிடக்கும் அவலம்.மேலும் யூசுப் (அலை) அவர்கள் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றார்கள். அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும்போதுகூட எப்போது விடுதலையாவோம் என்று கவலைப்படாமல் அவர்கள் அங்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கி அழைத்தது சரியான முன்தமாதிரி.
 
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர். அவ்விருவரில் ஒருவன் நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினான். மற்றவன், நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும் அதிலிருந்துபறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன் என்று கூறினான்.(பின் இருவரும் யூசுபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக: மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கின்றோம். 

அதற்கு அவர் கூறினார்: உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்துசே)ருவதற்கு முன்னரும் (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறி விடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும் மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.   12: 36 –37) 

என் முன்னோர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும் மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள், எனினும் அநேகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை. 
(12:38)

என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா? (12:39) 

தன்னோடு சிறைச்சாலையில் இருக்கும் தோழர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் முன், தனக்கு கிடைத்த வாய்ப்பை தருணத்தை எதிர்பார்த்ததுபோல், தான் யார், தன்னுடைய கொள்கை என்னவென்பதை தெளிவாகக் கூறி விடுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களோ, சதா தொலைபேசியிலும், வலைதளங்களிலும் மூழ்கி தங்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை பார்க்க முடிகிறது. 

மேலும் இன்றைய இளைஞர்கள் சமுதாயச் சேவைகளில் ஈடுபடுகிறோம், மார்க்கத்தைப் போதிக்கின்றோம் என்கிற ஆவலில் செயல்படுவதை காண்கின்றோம். ஆனால் அவர்கள் தங்களின் வழிகாட்டிகளாக சமுதாயத்தை ஏமாற்றுபவர்களையும், தங்களின் அரசியல் வாழ்க்கை பிரகாசமாகயிருக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர்களையும் எற்றுக் கொண்டு தங்களின் இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் வீணடித்துக் கொள்கின்றனர். 

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்:
  
நிச்சயமாக இப்ராஹிம் ஒரு சமுதாயமாகவும்,  அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராகவும் உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16: 120) 

மேலும், (முஹம்மதே) உண்மை வழியில் நின்ற இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 16:123)

தான் அறிந்துகொண்ட இறைவனை அந்த ஏக நாயனை தன்னைச் சார்ந்த சமூகமும் தன்னுடைய தகப்பனும் வணங்காமல் பல கடவுள்களையும் சிலைகளையும் வணங்கி வந்ததை கண்டு பொறுக்க இயலாமல் அதனால் எந்தவிதமான விளைவுகள் ஏற்பட்டாலும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இளமைப்பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டதை அல்லாஹ் பெருமைப்படுத்திச் சொல்வதை திருக்குரானில் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

இப்ராஹிமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன் என்று அவன் கூறினான். எனது வழித்தோன்றல்களிலும்(தலைவர்களை ஆக்குவாயாக) என்று அவர் கேட்டார். என் வாக்குறுதி (எமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான்(அல்குர்அன் 2:124)

மேலும் அன்றைய இளைஞர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும், அதனால் கிடைக்கும் மறுமைப்பலனையும் மட்டுமே தங்களின் வாழ்வின் குறிக்கோளாக கொண்டனர்.ஒரு நபித்தோழர் முதலிரவன்று தன் மனைவியுடன் இருந்த போது உஹது போருக்கு அல்லாஹ்வின் தூதரின் அழைப்பு வர, பதிதாக திருமணம் முடிந்திருக்கிறது என்ற பார்க்காமல் மனைவியை விட்டு பிரிந்து சென்று உஹதுப் போரில் ஷஹிதாக்கப்படுகிறார்கள்.ஏன்? என்ன காரணம்? மறுமைக்குப் பின் உள்ள வாழ்வு வெற்றியடைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்கிற ஆவல்தான்.ஆனால் இன்றைய இளைஞனோ தொழுகைக்குக் கூட பள்ளிக்கு வராமல் தன்னுடைய மறுமை வாழ்வை தொலைபேசியில் தொலைத்துக் கொண்டிருக்கின்றான். 

இப்படி அன்று சொர்க்கத்திற்காக வாளேந்தினார்கள். ஆனால் இன்று ஜிஹாத் எனும் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக தவறுகளை சுட்டிக் காட்டும் சகோதரர்களை தாக்குவதும், மிரட்டுவதும் இவர்களின் அழைப்புப் பணியாக உள்ளது. அது மட்டுமின்றி தங்களின் வாழ்வை இஸ்லாத்திற்கு முரணான வழிகளில் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரங்களை பின்பற்றி தங்களை நரகின் விறகாக ஆக்கிக் கொள்ளும் அவலநிலையும் அடங்கி விடுகிறது. 
அதேபோல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக தன்னுடைய செல்வ செழிப்பான வாழ்வை தூக்கி எறிந்து விட்டு, ஏழ்மையான வாழ்வை தேர்வு செய்து கொண்டது மட்டுமல்லாமல், மதினாவில் இஸ்லாத்தைக் கொண்டு சென்றதும் அந்த இளமையில் தான்! அதேபோல் அல்லாஹ்வின் ஒளி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தன்னுயிரை உஹது போரில் நீத்த உத்தமர்கள் இந்த இளம் சஹாபாக்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். 

ஆகவே அருமை இளவல்களே! இப்பேர்ப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை வழிகாட்டியாக கொண்டு நம்முடைய இளமைப் பருவத்தை வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் வீணடிக்காமல் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டு மறுமை வெற்றிக்கு பாதையாக்கி கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக! 

நன்றி: துபை TNTJ & TNTJPNO

0 கருத்துகள்:

கருத்துரையிடுக