அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 20 ஆகஸ்ட், 2011

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் (ரமளான் சிறப்பு தொடர் பகுதி - 3)

4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 508
 
மாதவிடாய்க் காலம் என்பதைப் பற்றிப் பெரும்பாலான பெண்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். மாதவிடாய் என்பது உடற்கூறு, வாழ்கின்ற பிரதேசம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கணக்கில் மாதவிடாய் வெளிப்படாது.

சில பெண்களுக்கு ஓரிரு நாட்களிலேயே மாதவிடாய் ஏற்பட்டு நின்று விடும். இவர்கள் மாதவிடாய் நின்றவுடன் நோன்பு நோற்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் ஆகவில்லையே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

அது போல் சில பெண்களுக்குப் பதினைந்து நாட்கள் கூட மாதவிடாய் நீடிக்கலாம். அவர்கள் பதினைந்து நாட்களும் நோன்பை விட்டு விட வேண்டும். இந்த விஷயத்தில் பல பெண்கள் அறியாமையிலேயே உள்ளனர்.

மேலும் பெண்களிடம் இன்னொரு அறியாமையும் உள்ளது. புனிதமிக்க ரமளான் மாதத்தில் நோன்பை விடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணி மாதவிடாயைத் தள்ளிப் போடச் செய்யும் மாத்திரைகளை சில பெண்கள் உட்கொள்கிறார்கள். ஹஜ்ஜின் போதும் இது போன்று நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.

அல்லாஹ் எந்த மனிதருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்க மாட்டான்.

அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர். அல்குர்ஆன் 10:44

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான். அல்குர்ஆன் 4:40

மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாததாகும்.

5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் சலுகை உண்டு

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: நஸயீ 2276

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?

மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்? இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1950

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

நன்றி : ஆன்லைன் பீ.ஜே , planetislam

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக