அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 17 ஆகஸ்ட், 2011

கிரெடிட் கார்டு மோசடி

போலி கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மையத்தில் கொள்ளை என வரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். இது போன்ற தொழில்நுட்ப முறையிலான மோசடிக் குற்றங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்திருக்கின்றன.
வேறொருவருடைய கார்டை திருடியோ அல்லது அதனை நகல்
எடுத்தோ பயன்படுத்துவது பொதுவாக நடைபெறும் திருட்டாகும். நகலெடுப்பதற்காக பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன.

நீங்கள் பொருள்கள் வாங்கும் கடைகளில் கடன் அட்டை அல்லது ஏடிஎம் பண அட்டையை விற்பனையாளர் வசம் அளிக்கையில் மறைவாக வைத்திருக்கும் ஸ்கிம்மர் (Skimmer) என்ற தகவல்களை திருடும் கருவியில் செலுத்தி விபரங்களை சேகரித்து அதைப் பயன்படுத்தி போலி கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

மற்றொரு முறையில் ஸ்கிம்மர் கருவியை ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை செலுத்தும் இடத்தில் பொருத்தி அதன் மூலமாகவும் விபரங்களைத் திருடுகின்றனர். இத்தகைய திருட்டுகள் காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களிலேயே அதிகம் நடைபெறுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கும் பெட்ரோ கார்டுகளை வாங்கி, அந்தக் கார்டுகளின் பின்புறம் இருக்கும் மேக்னடிக் டேப்பை அழித்துவிட்டு கார்பன் ரைட்டர் மூலம் அந்த இடத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்களின் ஏடிஎம் அட்டை ரகசிய குறியீட்டு விபரங்களைப் பதிந்து, போலி ஏ.டி.எம். கார்டாக மாற்றி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல் ஒன்று சமீபத்தில் சென்னையில் பிடிபட்டது நினைவு கூறத்தக்கது.

கிரெடிட் கார்டு / ஏடிஎம் கார்டு பாதுகாப்பு:


கடன் அட்டை (Credit Card), பண அட்டைகளை (ATM/Debit Card) விற்பனை நிலையங்களில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். விற்பனையாளர் வசம் கார்டு மற்றும் பாஸ்வேர்டை கொடுப்பதை தவிர்க்கவும். விழாக் காலங்களில், கண்காட்சி அரங்குகளில், புதிதாக முளைக்கும் கடைகளில் கடன் / பண அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தும் முன்பாக வித்தியாசமான அந்நியப் பொருள்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்கவும். அவசரத்தில் இது சற்றுக் கடினமானதுதான். தொடர்ந்து ஏடிஎம் மையங்களுக்குச் செல்வோர் மாற்றங்களை எளிதாக கண்டுகொள்ள இயலும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க அறிமுகம் இல்லாத நபரின் உதவியை நாடுவதும் தவறு.

ஏடிஎம்களில் பணம் எடுத்தால் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை தற்போது பல வங்கிகளில் உள்ளது. அச்சேவையைப் பயன்படுத்தலாம்.
நம்முடைய கவனக் குறைவே இதுபோன்ற குற்றங்கள் நடைபெறக் காரணமாகும். ஆகவே கடன் / பண அட்டையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்.

நன்றி : நதிக்கரை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக