அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,
ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33  

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு  கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா ? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர்தனமாக இறைவனுக்கே  விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !

''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகிவிட்டாயா?''என்று (இறைவன்) கேட்டான். 

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக்
களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்  வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான்.38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.
 
உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.  

இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35 

தடையை மீறினார் வழி தவறினார்.

எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.

20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது
வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று,

அந்த மரத்தின் கனி

இன்று,

மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள்,  நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

படிப்பினைகள்

ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.   

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர். அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்

உயர்ந்த படைப்பு நானா ? அவரா ?  என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர்  யார் தாழ்ந்தவர் யார் ?   என்பது தெளிவாகும்.

ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள். 

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.  

நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி தங்களை  சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !

இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த  இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

· உலகம் முடியும் காலம் வரை,
·மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,

பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவதாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு றைவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகிவிடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி-முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 

நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக