அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 30 ஜூன், 2011

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!

தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.
பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்களுக்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்தத் தடையும் இல்லை.

இந்தச் சேவை மையங்கள் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறை, விசாரணை அறை, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு மற்றும் கூடுதலான கவுன்டர்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஜெராக்சும் இங்கேயே எடுத்துக் கொள்ளலாம். இதற்காக தனிக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

ஆன்லைன் மூலம் செயல்படும் இந்த மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கும், ஆன்லைனில் காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் பணிக்காக 8 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இந்தச் சேவை மையத்துடன் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களும் பிரத்யேக மென்பொருள் மூலம் இணைக்கப்படும்.விண்ணப்பங்கள் குறித்த காவல்துறையினரின் விசாரணை அறிக்கை ஆன்லைன் மூலம் சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதனால் விண்ணப்பதாரர்களுக்கு தற்போது உள்ளதை விட, 10 நாட்கள் முன்கூட்டியே பாஸ்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.அதேசமயம் காவல்துறையினரின் விசாரணை அறிக்கை தேவைப்படாத நபர்களுக்கு 2 நாளிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில் சேவை வேகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : manarkenitimes

0 கருத்துகள்:

கருத்துரையிடுக