அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 4 ஏப்ரல், 2011

அந்த ஏழு நபர்கள் (பாகம்-1)

மறுமை நாளில்,மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (1 / 168)

660- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ.

‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவர்கள்:

01.           நீதமிகு தலைவர்

02.           அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு வாலிபர்.

03.           மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.

04.     அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.

05.           அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக)          அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை   அஞ்சுகின்றேன்                 என்றுரைக்கும் மனிதன்.

06.           தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு (இரகசியமாக) செலவு செய்யும் மனிதன்.

07.           தனிமையில் (இறையச்சத்தின் காரணமாக) அழும் மனிதன்.’

அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி)
நூல்: புகாரி 6806

மஹ்ஷர் மைதானத்தில் ஒவ்வொரு மனிதனும் தனக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, மேலே கூறப்பட்டுள்ள நபிமொழியில் சிலாகிக்கப்பட்ட ஏழு பேரும் எந்தக் கவலையுமின்றி, நிம்மதியாக இருப்பார்கள். இங்கு ஏழுபேர் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதனால்,
ஏழுபேர் மட்டும்தான் அல்லாஹ்வின் நிழல் பெறுவார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.அந்த ஏழுபேர் அந்தஸ்தில் எத்தனை ஆயிரம் பேரும் இணையலாம் என்றே  புரிந்து கொள்ளவேண்டும். எழுவர் மட்டும்தான் என்று புரிந்து கொண்டால், அல்லாஹ்வின் அருளை குறைத்து  மதிப்பிட்டதாகிவிடும். எனவே, ஏழு வகையான கூட்டத்தினர் என்றே இந்த ஹதீஸைப் புரிந்து  கொள்ள வேண்டும். இனி அந்த ஏழுவகைக் கூட்டம் பற்றி விரிவாக நோக்குவோம்.

நீதிமிகு தலைவர்:

தலைமைத்துவமானது செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு செயல்முறையாகவும் கடமைக் கூறாகவும் உள்ளது. இஸ்லாம் நீதிமிகு தலைமையையே வேண்டி நிற்கிறது. பொறுப்புக்களையும், பதவிகளையும் அது  அமானிதமாகவே கருதுகின்றது. பக்கச் சார்பற்று தீர்ப்புக் கூறப் பணிக்கிறது. நீதிமிக்க தலைமையின் இலக்கணமாக நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அண்ணலாரின் நீதிமிகு தலைமை போன்றதோர் தலைமையை உலகம் இனிமேல் அதன் இறுதி மூச்சுவரை சந்திக்கவே முடியாது. அந்தளவு நபியவர்கள் இனம், நிறம், மதம் போன்ற அனைத்தையும் கடந்து நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டுள்ளார்கள்.
இந்த உலகத்தில் அளப்பெரிய செல்வாக்குடன் மாபெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் நெடிய பெயர்ப்பட்டியலில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். ஏனெனில் ஆன்மீக, அரசியல், சமூக, பொருளியல், அறிவியல் போன்ற துறைகளில் மகத்தான வெற்றிபெற்றவர், உலக வரலாற்றில் அவர் ஒருவர் மட்டுமே, அவர்களின் தலைமைத்துவ ஆளுமை ஈட்டிய ஈடிணையற்ற செல்வாக்குத்தான், மனித இன வரலாற்றின் போக்கிலேயே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது சமயம், உலகியல் ஆகிய துறைகளில் ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் எனும் தனித் தகுதிக்கு அவர்களை உரித்துடையவராக்குகிறது.
‘அறிவுரை கூறுவோர்  அவர்போல் நடக்கவும்., இவர்கள் போல் நடக்கவும் என்று கூறுவதையே காண்கின்றோம். என்னைப் போல் நட என்று சொன்ன பெருமைக்குரியவர் பெருமானார் ஒருவரே!’

‘மனிதர்களிடையே நீங்கள் தீர்ப்புக் கூறினால், நீதத்துடன் தீர்ப்புக் கூற வேண்டும் என்று அல்லாஹ் உங்களுக்குக்  கட்டளையிடுகின்றான்.’
(4: 58)

சமூகத்தின் தலைமைப்பொறுப்பேற்போர் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். பக்கச் சார்பாக, அல்லது பிறர்மீது கொண்ட அதிருப்தி , வெறுப்புக் காரணமாக நீதி வழங்கும் விடயத்தில் தவறிழைத்து விடக்கூடாதென அல்லாஹ் அறிவுரை கூறுகின்றான்.

‘…ஒரு கூட்டத்தார் (மீதுள்ள) பகை, நீங்கள் (அவர்களுக்கு) நீதி செலுத்தாமல் இருந்துவிட உங்களைத் திண்ணமாகத் தூண்டிவிட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள், அது தக்வாவுக்கு மிக நெருக்கமானதாகும’;   (5 : 8)

எவர் உள்ளத்தில் இறைவன் மீது அச்சம் அதிகமாக உள்ளதோ, அவரால்தான் நீதமான தலைவராகத் திகழ முடியும். அதற்கான கூலியாகவே அல்லாஹ் தனது நிழலை வழங்கக் காத்துள்ளான். அதேவேளை, பொறுப்புக்களைப் பெற்றுவிட்டு மோசடி செய்தால் சுவர்க்கம்  அவருக்கு ஹராமாகிவிடும்.

‘எந்த மனிதருக்கேனும் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கி, அவன் அவர்களுக்கு மோசடி செய்தவனாக மரணித்துவிட்டால், சுவனத்தை அவனுக்கு இறைவன் ஹராமாக்கி விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி – முஸ்லிம்)

தலைமைப் பண்பைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தொல்லை கூட கொடுக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, மிகவும் இரக்கமாகவும் பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கடின சித்தத்துடன் ஆணவமாக நடக்கக் கூடாது. இதுபற்றி திருமறை வசனமொன்று பின்வருமாறு பேசுகிறது.

‘நீர் கடுகடுப்பானவராக – கடின சித்தமுடையவராக இருப்பீரானால், உம்மை விட்டும் அவர்கள் பிரிந்து போயிருப்பார்கள்.’(03: 159)

தலைமைப் பண்புக்கு கண்டிப்புடன் கூடிய மென்மைத் தன்மையும் அவசியமாகவுள்ளது. இஸ்லாம் இயம்பும் மென்மைத் தன்மையோடு, நடுநிலை தவறாத நீதிமிக்க தலைவர்களுக்கே அல்லாஹ் தனது நிழலை வழங்குவான்.

‘இறைவா! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விசயத்துக்கு ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டு, அவர்களுக்குச் சிரமம் தருபவனுக்கு நீயும் சிரமத்தைக்கொடு! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்திற்குப் பொறுப்பேற்று, அவர்களிடம் இனிமையாக நடப்பவனிடம் நீயும் இனிமையாக நடப்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (முஸ்லிம்)

வணக்கத்தில் வளர்ந்த வாலிபர்:

உலகில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் புவியில், இறை அடிமைத் தனத்தை நிலைநாட்ட வந்தவன் என்ற உணர்வுடன் மனிதன் தனது பொறுப்புக்களைப் உளப்பூர்வமாக நிறைவேற்றி அல்லாஹ்வை நினைவு கூறவேண்டும். வணங்க வேண்டும்.  துதிக்கவேண்டும்.
இளமைப் பருவம் என்பது, அல்லாஹ்வின் அளவற்ற அருளாகவும், தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான இஸ்லாமிய நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும்.
சமூகத்தின் ஜீவநாடிகளான இளைஞர்கள், தங்களது இஸ்லாமிய பொறுப்புக்களை மறந்து, அகவய உணர்வுகளுக்கு உட்பட்டு நிற்பது ஆரோக்கியமானதல்ல. சூழலுக்கு அடிமையாகிப் போய், அல்லாஹ்வை மறந்து வாழ்வது அல்லாஹ்வின் நிழலை விட்டும் அப்புறமாக்கிவிடும்.
அல்குர்ஆனை அதிகமாக பொருளறிந்து ஓதுதல், உபரியான தஹஜ்ஜத்  தொழுகையில் கூடிய கவனம் செலுத்துதல் , ஹலால் – ஹராம் பேணி வாழ்ந்து, வட்டியை விட்டும் தூரமாகுதல் போன்ற ஆழ்ந்த ஆன்மீகப் பண்புகளோடு சத்தியத்தை பிரசாரப்படுத்துதல், தீமையைத் தடுத்தல் ஆகிய இஸ்லாத்தின் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுதல் மூலம், ஓர் இளைஞன் அல்லாஹ்வின் அருளை நெருங்க முடியும். அல்குர்ஆன் இத்தகு ஆன்மீக கோட்பாடுகளுக்கு பல உதாரண புருஷர்களாக, வரலாற்று வாலிபர்களை அடையாளப்படுத்துகின்றது.
‘இபாதத்’ எனும் இறை வழிபாடு அதன் ஆழமான உள்ளார்ந்த அர்த்தத்தில் மனிதன் தனது சொல், செயல் எண்ணங்களால் முழுமையாக அல்லாஹ்வின் திருப்திக்கும் விருப்பத்திற்கும் இணங்க உலகில் செயல்படுவதையே குறிக்கின்றது. இறை வழிகாட்டலுக்கும் இறை சட்டத்திற்கும் ஏற்ப நடத்தைகளை அமைத்துக் கொள்ள வேண்டிய நிலை மனித வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாழ்வே இறை வழிபாடுடையதாகும்;.
ஈமானிய உடன்படிக்கை ஒரு முஸ்லிமின் வாழ்க்கைக் கடிவாளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகின்றது. அல்லாஹ் தன் தூதரின் பொறுப்பில் அதைக் கொடுத்து, தூய ‘வஹி’ மூலம் அவனுக்கு வழிகாட்டுகிறான். அவ்வழிகாட்டலைக் குறித்து முஸ்லிம் மனப்பூர்வமாக ஏற்று உலகில் செயற்படுவான்.

‘மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சியமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.’ (33:36)

மேலுள்ள வசனம் முஃமின்களின் சிந்தனைக்குரியதாகும். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான அடிப்படை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் மாத்திரம் அடிமைத் தனத்தை நிரூபித்து, பொது வாழ்வில் சுதந்திரமாக, மனோவிருப்பத்திற்கு இணங்கி வாழும் ஒரு முஸ்லிம் இளைஞன் எவ்வாறு அல்லாஹ்வின் உண்மை அடியானாக இருக்க முடியும்?
வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஹலால்-ஹராம் பேனாதவன், இஸ்லாமிய குணநலன்களையே அணிகலனாகப் பெறாதவன் எவ்வாறு தன்னை அல்லாஹ்வின் விசுவாசமுள்ள, உண்மை அடியானாகப் பறைசாற்ற முடியும்?
தனிப்பட்ட வாழ்வில், பொது விசயங்களில், அல்லது சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் இறை சட்டத்துக்கு முரணாக ஒரு தீர்ப்பைப் பெற நாடுகின்ற, அல்லது பெற்றுத் திருப்தியடைகின்ற ஒரு இளைஞனின் வாழ்க்கை, அவன் தொழுகையாளியாகவோ, நோன்பாளியாகவோ இருப்பின் அது எவ்வாறு இபாதத்தாக முடியுமா? இவ்விசயத்தில் நிர்பந்தத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு உண்டு. ஆனால், நிர்பந்தத்தை நிலைப்படுத்துவதில் நியாயம் இல்லையே!
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது ‘ஷிர்க்’ எனும் கொடிய பெரும் பாவமாகும். அதற்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு இல்லை என அல்குர்ஆனும், ஹதீஸும் தெளிவாகப் பிரகடனப்படுத்திவிட்டுள்ளது. அல்லாஹ்வுக்கு நிகராக வேறொரு சிருஷ்டியை வணங்கி, வழிபடும் செயல் மாத்திரமே ‘ஷிர்க்’ என நினைப்பது தவறு. மனிதனால் உருவாக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை முறைகளுக்கு மனப்பூர்வமாக கட்டுப்படுவதும் ‘ஷிர்க்’ ஆகும். இவ்வாறு செயல்பட யூத-கிறிஸ்தவர்களைப் பற்றி குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்.

வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை. அவன், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.’ (9:31)

வேதம் வழங்கப்பட்ட யூத-கிறிஸ்தவர்கள் தமது மத குருமார்களை தெய்வங்களாக்கிக் கொண்டார்கள் என்றால், அவர்களை வணங்கி வழிபட்டார்கள், பூஜித்தார்கள் என்பதன்று. இறை சட்டத்துக்கு மாறாக அவர்கள் உருவாக்கிய சட்டங்களைப் பின்பற்றினார்கள். எனவே, அவர்கள் இணைவைப்பாளர்களானார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

தொடரும் இன்ஷாஅல்லாஹ்.....

நன்றி : ஹஃபீழ் சலஃபி

நன்றி : கடயநல்லூர் அக்ஸா






அந்த ஏழு நபர்கள் (பாகம்-2)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக