அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 25 ஏப்ரல், 2011

தவிர்ந்துகொள்ளுங்கள்-அசுத்தம் (பகுதி-2)

இவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கும் இந்ந நோய் கிருமிகள் பல் வேறு அறிவியல் ஆய்வுகள் நடத்தித்தான் இந்த காலத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த அறிவியல் வளர்ச்சியும் அடையாத காலகட்டத்தில் கண்ணுக்கு தெரியாத பொருட்களை பன் மடங்கு பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய நுண்ணோக்கிகள் இல்லாத காலத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருப்பதால் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையாகவும் நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இன்னொரு கட்டளையையும் இஸ்லாம் இடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கில் மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத் தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 403

இவ்வாறு காலையில் மட்டுமல்லாமல் இறைவனை வணங்குவதற்காக உளூ என்ற தூய்மையை செய்யும்போது மூக்கை சுத்தம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
உங்களில் ஒருவர் உளூ செய்தால் அவர் மூன்று முறைமூக்கை சுத்தம் செய்யட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 401

அது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை ஒரு நாளில் 5 தடவைகள் தொழு கைக்கு செல்லும்போதும் அதற்கென்ற பிரத்தியோக தூய்மைகளையும் இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தொழுகைக்கு தயாரானால் உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரைக்கும் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை நீரால் தடவுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 5:6)

இவை தவிர உடலிலுள்ள மற்ற உறுப்புகளையும் தூய்மைபடுத்தவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வாரத்தில் ஒரு நாளாவது தன் தலையும் உடலின் மற்ற பகுதிகளையும் கழுவுவது ஒரு முஸ்லிம் மீது கடமை.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி 898

இஸ்லாம் சொல்லக்கூடிய தூய்மை முறைகளையும் நோய் தடுப்பு முறைகளையும் பல ஆண்டுகள் ஆய்வு செய்து 1981, 1982, 1986 ஆகிய ஆண்டுகளில் குவைத்தில் இஸ்லாமிய மருத்துவ மாநாடு நடந்தது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள் மருத்துவ உலகை ஆச்சரியத் திற்குள்ளாக்கியது.

முடிவுகள்

உளுவில் வாய் கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒரு நாளைக்கு ஐவேளையிலும் தொழுகைக்காக உளுச்செய்யும் போது வாய் கொப்பளிக்கிறோம். இது வாயில் உள்ள கணக்கற்ற நுண் கிருமிகளை அகற்றுகிறது. வாயில் இருக்கக் கூடிய அந்த கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளின் வகைகளே 500 யை தாண்டிவிடும். வாயில் ஒரு மில்லி மீட்டருக்கு சுமார் 1 கோடி நுண் கிருமிகள் உள்ளன. அவைகள் கண்ணுக்கு தெரியாத புஞ்சை நுண்கிருமி வகைகளும் அதன் லார்வா முட்டைகளுமாக உள்ளன. அவைகள் பற்களுக்கிடையேயுள்ள உணவுத் துகள்களை சாப்பிடுகிறது. இன்னும் பலவிதமான அந்த உணவுத் துகள்களின் மூலம் அதிக எண்ணிக்கையில் அமிலங்கள் சுரப்பதால்  இவ்வகையான கிருமிகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன. இவைகள் வாய்க்கும் பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் வாய் கொப்பளிப்பதால் எண்ணற்ற நுண்கிருமிகள் அகற்றப்படுகின்றன.

பல் துலக்குதல்

இஸ்லாம் பல் துலக்குவதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பல் துலக்குவது வாய்க்கு சுத்தத்தையும், இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : நஸாயீ 5

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய சமுதாயத்திற்கு சிரமம் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின்போதும் பல் துலக்குவதை கடமையாக்கியிருப்பேன்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத் 8827

பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள்

பிரவ்ன் ஜாக்கப் என்ற உயிரியல் ஆய்வாளர் 1979 ஆம் ஆண்டு சில ஆய்வறிக்கைகளை வெளியிடுகிறார்.

அவைகள் பின்வருமாறு :

மனித வாய் பகுதியில்  நோய் ஏற்படுத்தக் கூடிய நுண்கிருமிகள் உள்ளன. அவைகளில் முக்கியமானது ஸ்டரப்டோகோக்கி என்ற பாக்டீரியாக்கள். இவை 5 வயது முதல் 15 வரை உள்ளவர்களுக்கு ருமெட்டிக் என்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த காய்ச்சல் பல வாரங்களாகவும் மாதங் களாகவும் நீடிக்கிறது. பல் துலக்குவதால் இந்த கிருமிகள் வெளியேற்றபடு கின்றன. மீதமுள்ள உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு பற்களின் மஞ்சள் தன்மையை நீக்கி பிரகாசமாக்குகிறது. பற்களின் ஈறுகளில் உள்ள காயங்களை அகற்றுகிறது. கிருமிகள் வளருவதை தடுக்கிறது.

 மூக்கை சுத்தம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மூக்கை சுத்தம் செய்வதால் பல்வேறு விதமான நன்மைகள் உள்ளன. மூக்கின் உட்பகுதியில் மறைந்திருக்கும் அதிகமான நுண்துகள்களையும் தூசுகளையும் வெளியேற்றுகிறது. அவைகளில் சில காற்றில் பரவக்கூடிய புஞ்சை கிருமிகளின் விதைகளும் கேடு விளைவிக்கும் கிருமிகளாகவும் உள்ளன.இன்னும் அவைகளில் ஸ்டபிலோகோகஸ் என்றபாக்டீரியாவும் உள்ளன. அவைகள் மனிதனுக்கு பல விதமான தோல்நோய்களையும் நுரையீரல் வீக்கம், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களையும் உருவாக்குகிறது. ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் சுத்தம் செய்வதால் இந்த பயங்கரமான கிருமிகள் வெளியேற்றபடுகின்றன.

குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தூய்மையின் உச்சகட்டம் நம் உடல் முழுவதும் தண்ணீரால் தேய்த்து குளிப்பதாகும். இதனால் நாம் பல்வேறு விதமான நோய்களிலிருந்து பாதுகாப்பு அடையமுடிகிறது.
மனித உடல் பல்வேறு பாக்டீரியாக்களுக்கும், பூஞ்சை கிருமிகளுக்கும் புகலிடமாக உள்ளது. அவைகள் மனித உடலின் ஒரு சென்டி மீட்டர் பரப் பளவுக்கு பத்தாயிரம் கிருமிகள் முதல் ஒரு இலட்சம்வரை காணப்படு கின்றன. ஈரத்தன்மையுள்ள கழுத்து அக்குள் போன்ற இடங்களில் 2 சென்டி மீட்டருக்கு 10 இலட்சம் முதல் 50 இலட்சம்வரை உள்ளன. நாம் தேய்த்து குளிப்பதனால் 90 சதவீதம் நுண் கிருமிகள் வெளியேற்றப்படுகின்றன. நோய்கள் பரவாமல் தடுக்க இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பல கருவிகளும் பல ஆண்டுகள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இஸ்லாம் இறைவனின் மார்க்கமாக இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தூய்மை முறைகளை கூறிவிட்டது.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக