அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்.

உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் தனக்கு ஏதாவது சந்தோஷமான நிகழ்வுகளோ அல்லது பேரை,புகழைப் பெற்றுத் தரக்கூடிய நிகழ்வுகளோ ஏற்படும் போது அது தன்னுடைய ஆற்றலாலும் அறிவாழும்தான் கிடைத்தது என நினைத்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவருக்கு இப்படிப் பட்ட நிகழ்வுகள் ஏற்பற்டால் அல்லாஹ் தான் இதை எனக்குத் தந்தான் எனது கையில் எதுவும் கிடையாது என்று நினைத்து அல்லாஹ்வைப் புகழ்வான் அப்படிப் புகழ்ந்தால்தான் அவன் உண்மை முஸ்லிமாக இருப்பான்.

ஏனெனில் பெருமையையும்,கர்வத்தையும்,அகங்காரத்தையும் தடுப்பதே அல்லாஹ்வைப் புகழ்வதுதான்.ஒருவன் தனக்கு விருப்பமான ஒரு காரியம் நடக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்தான் என்றால் அவனிடத்தில் பெருமையோ,அல்லது அகங்காரமோ இல்லை என்பதை நாம் தெளிவாக அறிய முடியும்.இதைத்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அறுவுறித்தியுள்ளார்கள்.அந்த அடிப்படையில் அல்லாஹ்வைப் புகழுவதுடைய தெளிவான நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்வோம்.இறைவனைப் புகழ்வது பெருமையைத் தடுக்கும்.
மக்காவை நபி(ஸல்)அவர்கள் வெற்றி பெற்ற போது இறைவன் நபிகளாருக்கு அல்லாஹ்வைப் புகழும் படி கட்டளை இடுகிறான்.

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹ் செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் ''தவ்பாவை"" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1,2,3)

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் பெரிய அளவில் ஒரு வெற்றி கிடைக்கின்ற நேரத்தில் படைத்தவனை மறந்து அது தன்னுடைய ஆற்றலால் கிடைத்தது என நினைத்து விடுவான்.அதனைத் தடுப்பதற்காகத்தான் இறைவன் நபியவாகளையே முதலில் அல்லாஹ்வைப் புகழும் படி கூறுகிறான்.
மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்தல்.
இப்றாஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் குழந்தைப் பாக்கியத்தை அவர்களுடைய வயதின் முதிர்ச்சியில்த்தான் கொடுத்தான் அந்நேரத்தில் கொடுத்தாலும் அதையும் தன்னுடைய இறைவனின் ஆற்றல்தான் என நினைத்து அவனைப் புகழும் படி இறைவன் கூறுகிறான்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.(14:39)
ஆக நமக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது துதி பாட வேண்டும்.

கவலைகள்,கஷ்டங்கள் நீங்கும் போதும் இறைவனைப் புகழ்தல்.
நமக்கு ஒரு கஷ்டம்,அல்லது கவலை நீங்கும் போது அல்லாஹ்வைப் புகழும் படி நமக்கு இறைவன் கட்டளையிடுகிறான்.
எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்"" என்றும் அவர்கள் கூறுவார்கள்.(35:34)
நபி நூஹ்(அலை)அவர்கள் காலத்தில் அநியாயக் காரர்களை அழிப்பதற்காக அல்லாஹ் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான் அந்நேரத்தில் நூஹ் நபியவர்களைப் பற்றி கூறும் போது கப்பலில் ஏறியவுடன் அநியாயக் காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக அல்லாஹ்வைப் புகழும்படி இறைவன் கூறுகிறான்.
நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; ''அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்"" என்று கூறுவீராக!(23:28)
இப்படி நாமும் நமக்கு ஏதும் கஷ்டங்கள்,கவலைகள் ஏற்பட்டு அது நீங்கியவுடன் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
சுலைமான் நபியும்,தாவுத் நபியும் அல்லாஹ்வையே முதலில் புகழ்ந்தனர்.
உலகத்திலேயே எந்த ஒருவருக்கும் வழங்கப் படாத ஒரு ஆட்சி,அதிகாரம் நபி தாவுதுக்கும்,நபி சுலைமானுக்கும் வழங்கப் பட்டது.அவர்களுடைய ஆட்சி எப்படி இருந்தது என்றால் உலகத்திற்கே அவர்கள் ஆட்சியாளர்கள்.இன்னும் சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் பறவைகள்,விலங்குகளின் பாசையைப் புரியும் ஆற்றவையும் கொடுத்திருந்தான்.அத்துடன் காற்றும் கூட அவருக்குக் கட்டுப் பட்டிருந்தது.இப்படியெல்லாம் வளங்களைப் பெற்றும் கூட சுலைமான் நபியும் தாவுத் நபியும் இறைவனை மறக்காமல் எங்களுக்கு இவ்வளவு அருளையும் கொடுத்தவன் அல்லாஹ்தான் எனக்கூறி அவனையே புகழ்ந்தார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனிலே சிலாகித்துக் கூறுகிறான்.
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; ''புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்"" என்று கூறினார்கள்.(27:15)
வாதங்களில் அடுத்தவரை ஜெயித்தாலும் அல்லாஹ்வைப் புகழ்தல்.
நபி(ஸல்)அவர்கள் மக்கத்து காபிர்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்து வைத்த நேரத்தில் அவர்கள் நபியவர்களை எதிர்பதற்கும்,அவர்களின் ஏகத்துவக் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடுவதற்க்கும் பல வாதங்களை முன்வைத்தார்கள். அப்படி வாதங்களை முன்வைக்கும் போது அல்லாஹ் நபியவர்களிடம் ஒரு பதில் வாதத்தைக் கற்றுக் கொடுக்கிறான் அதை அந்த காபிர்களிடம் எடுத்து வைத்தால் அவர்கள் உடனே உமது வாதத்தை ஏற்று தோல்வியை ஒத்துக் கொள்வார்கள்.
அப்படி அவர்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளும் போது இந்த வாதத்திரமை உங்கள் ஆற்றலால் வந்தது என நினைத்து பெருமைப் பட்டு விடாமல் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.என அல்லாஹ் நபிகள்(ஸல்)அவர்களுக்கும் கட்டளையிடுகிறான்.
ஏனெனில் பெருமையைப் பொருத்தவரையில் சொத்து,செல்வாக்கில் வருவதை விட அறிவு விஷயத்தில்தான் அதிகம் பெருமை ஏற்படும்.
இன்னும், அவர்களிடம்; வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் கேட்பீராயின், அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், அல்லாஹ் என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று நீர் கூறுவீராக எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.(31:25)
அடுத்தவனுக்கு நன்மை ஏற்பட்டதற்க்காக இறைவனைப் புகழ்தல்.
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலைமாட்டில் அமர்ந்து, இஸ்லாதை ஏற்றுக் கொள்! என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்கள்) சொல்வதைக் கேள் என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள். (புஹாரி:1356)

ஒரு யூதச்சிறுவனுக்கு நேர்வழி கிடைத்ததற்க்காக நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்கிறார்கள்.இதனடிப்படையில் நம்முடைய சகோதரன் ஒருவனுக்கு ஒரு நன்மை ஏற்பட்டாலும் அந்த நன்மையை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்பது இந்தச் நிகழ்ச்சியிலிருந்து நமக்குத் தெரிய வருகின்றது.
சாப்பிட்டு முடித்தவுடன் அல்ஹம்துலில்லாஹ்.
இறைவன் நமக்கு எத்தனையோ அருளைக் கொடுத்திருக்கிறான் அவை அனைத்திற்கும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் நன்றி செலுத்தினாலும் நம்மால் நன்றி செலுத்திட இயலாது ஆனால் அல்லாஹ்வோ அற்பமானதில் கூட திருப்திப்படுபவனாகத்தான் இருக்கிறான்.ஒரு மனிதன் உணவு உண்பதென்பது ஒரு சாதாரன விஷயம்.ஆனால் அதில் கூட உணவு உண்டு முடித்தவுடன் இந்த உணவை எனக்குத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.
தூய்மையான பாக்கியம் நிரைந்த,அதிக அளவிலான புகழ் அல்லாஹ்விற்கே அவனது அருற்கொடை மறுக்கப்பட்டதல்ல.நன்றி மறுக்கப் படுவதுமன்று,அது தேவையற்றதுமல்ல. (புகாரி :5858)
சாப்பாட்டுத் தட்டை தூக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்தல்.
அபு உமாமா(ரலி) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு தட்டை எடுக்கும்போது அல்ஹம்து லில்லாஹி சுக்ரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)(புகாரி:5458)

இது போல் நாமும் சாப்பிட்டு முடிந்து தட்டை எடுக்கும் போது அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
தும்மியவுடன் அல்லாஹ்வைப் புகழ்தல்.
ஒரு மனிதன் தும்மியவுடன் அல்ஹம்து லில்லாஹ் எனக்கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.
ஏனெனில் தும்முதலைப் பொருத்த வரை அது மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரிய நன்மையாகும்.மனிதனுடைய உடம்பினுல் உடம்புக்கு ஒத்து வராத ஏதாவது ஒரு பொருள் நுழையும் போது அதனை தும்மலின் முலமாக உடனே வெளியேற்றும் வகையில் அல்லாஹ் மிகப்பெரிய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான்.
இல்லையெனில் மனிதனின் உடலுக்குள் எத்தனையோ பொருட்கள் சென்று உடலை நாசப்படுத்திவிடும்.அந்நேரத்தில் நாம் நம்முடைய செல்வங்களை செலவு செய்து அதற்குறிய நிவாரணம் தேட வேண்டிய நிலை உருவாகும்.இப்படியொரு ஏற்ப்பாட்டை செய்த இறைவனை நாம் போற்றிப் புகழ வேண்டும்.மேலும் தும்மும்போது இதயம் நின்று மீண்டும் துடிக்கிறது.இதயத்தை இயங்கச் செய்த இறைவனை நாம் தினமும் புகழ வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் கூறினார்கள்.
உங்களில் யாராவது தும்மினால் அல்ஹம்து லில்லாஹ்(எல்லாப் புகலும் இறைவனுக்கே)எனக் கூறட்டும்.(புஹாரி:1224)

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் அளவு எவ்வளவு?
இந்த அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தையை நாம் சாதாரனமாக என்னுகின்ற காரணத்தால்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம்.ஆனால் இந்த அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை நாளை மறுமையில் நம்முடைய நன்மையின் தராசை நிறப்பிவிடும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.சுத்தம் என்பது ஈமானில் ஒரு பகுதியாகும்,இன்னும் அல்ஹம்துலில்லாஹ் என்பது (நன்மையின்)தராசை நிறப்பக் கூடியதாகும்.அறிவிப்பவர் : அபூ மாளில் அல் அஷ்அரீ, நூல்: முஸ்லிம்(328)
ஆக அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையைக் கூறி நம் அனைவருடையவும் நன்மையின் தராசுகளை நிரப்பிக் கொள்வோமாக!
நன்றி : http://rasminmisc.blogspot.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக