தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்ப்பதற்காக, ஆண்டு தோறும் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கவுன்சிலிங் குறித்து, சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 486 உள்ளன. இந்த கல்லூரிகளில் இப்போதைக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களில் என்ஜினீயரிங் (பி.இ.) படிப்புக்கு மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் புதிதாக பல கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதால் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதில் அரசு இட ஒதுக்கீட்டில் உள்ள 1 லட்சத்து 23 ஆயிரம் இடங்களுக்கு அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும், சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் 2 லட்சத்து 20 ஆயிரம் அச்சடிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் மே மாதம் 16-ந் தேதி முதல் வழங்கப்படும்.
(விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு ரூ.250 மட்டுமே.)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் சில வங்கிகள் உள்பட 58 இடங்களில் விநியோகிக்கப்பட உள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் தொடங்கிய பின்னர் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கும். பெரும்பாலும் ஜுன் மாத இறுதியில் அல்லது ஜுலை முதல் வாரத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கும். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வருடந்தோறும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிப்பார்கள்.
அதன்படி இந்த வருடம் 40 பேர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தனர். எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 84 கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் மனுக்கள் மீது பரிசீலனை அண்ணாபல்கலைக்கழகத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைப்படி கல்லூரி நிலத்திற்கான தஸ்தாவேஜும், கட்டிடத்திற்கான அனுமதியும் தேவை.
ஆனால் 80 சதவீத கல்லூரிகளில் கட்டிடத்திற்கான அனுமதி பெறவில்லை. இதனால் அந்த கல்லூரிகளின் மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. புதிய படிப்புகள் கேட்டு 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. எனவே, இந்த ஆண்டு எப்படியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.இ. இடங்கள் அதிகரிக்கும். அண்ணாபல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஆடை கட்டுப்பாடு மற்றும் செல்போன் தடைகள் ஆகியவை அப்படியே அமுலில் உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
இவ்வாறு துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். முதல் தலைமுறை பட்டதாரிகளாக படிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த புதிய சலுகை அமல்படுத்தப்பட்டது. இந்த வருடமும் இந்த சலுகை தொடரும்.
நன்றி : மணற்கேணி டைம்ஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக