அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 17 நவம்பர், 2011

உம்ரா

இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும்.
அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.
தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம். ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

ரமளானில் உம்ரா

ரமளானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1782, 1863

நான் எங்கிருந்து உம்ராச் செய்ய வேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நஜ்து வாசிகளுக்கு கர்ன்என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் ஜுபைர் நூல்: புகாரி 1522

ஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்டி வர வேண்டும்என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம்என்ற இடத்தில் இஹ்ராம் கட்டியதிலிருந்து அறியலாம்.
தன்யீம் என்ற இடத்திலும் இஹ்ராம் கட்டலாம். அதை விட தூரமான இடத்துக்குச் சென்றும் இஹ்ராம் கட்டலாம். எவ்வளவு தொலைவுக்குச் சென்று இஹ்ராம் கட்டி வருகிறாரோ அவ்வளவு அதிக நன்மை கிடைக்கும்.

தன்யீம்என்ற இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது நீ தன்யீமுக்குச் சென்று அங்கே இஹ்ராம் கட்டு! பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர்! என்றாலும் உன் செலவு உன் சிரமம் ஆகியவற்றைப் பொருத்து (சிறந்த)தாகும்.என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1787

ஹாகிம், தாரகுத்னியில் உன் சிரமத்திற்கு ஏற்ப உனக்குக் கூலி உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் காணப்படுகின்றது.
உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.
.
ஸம்ஸம் நீர்
மக்காவில் ஸம்ஸம்என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். திர்மிதீ 886

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸம்ஸம்) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தமது மகன்) பழ்லு அவர்களிடம், நீ உன் தாயாரிடம் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வாஎன்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குடிக்கத் தருவீராகஎன்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரேஎன்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதையே குடிக்கத் தருவீராகஎன்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ஸம்ஸம்கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள்என்று கூறிவிட்டு, மற்றவர்கள் உங்களுடன் போட்டியிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறங்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன்எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1636

ஸம்ஸம் நீரைக் கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ஸம்ஸம்நீர் புனிதமானது என்பதையும் இதிலிருந்து அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ஸம்ஸம்நீரை வேண்டிப் பெற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்தும் இதனை நாம் அறியலாம்.
ஸம்ஸம் நீரை நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை.
இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்கக் கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது.
மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும் போது ஸம்ஸம் நீரை ஊற்ற வேண்டும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஸம்ஸம் நீரைக் குடிப்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருந்தும், அதற்காக இஹ்ராம் கட்டியிருந்தும் அவர்கள் மரணித்த பின் இஹ்ராம் ஆடையால் கபனிடப்படவில்லை. தைக்கப்பட்ட சட்டையிலேயே அவர்கள் கபனிடப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

நன்றி : planetislam

0 கருத்துகள்:

கருத்துரையிடுக