அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ. 57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க நெருக்கடியால் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த நாடுகள் அதை வேறு நாடுகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், ஈரானுக்கு டாலர்களை வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உத்தரவால், கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி மூலமாக ஈரானுக்கு ரூபாயாகத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது. இந்த ரூபாயை ஈரானால் சர்வதேச சந்தையில் பயன்படுத்த முடியாது. இதனால் இந்த ரூபாய்கு இணையான உணவுப் பொருட்கள், மருந்துகள், ரயில்வே என்ஜின்கள், ரயில் பெட்டிகளை இந்தியாவிடம் இருந்து ஈரான் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று இந்திய சந்தையில் டாலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. இந் வகையில் டாலர்களை சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவை மிச்சப்படுத்தவும் அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு புதிய யோசனையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.ஈரானுக்கு டாலர்களுக்குப் பதிலாக ரூபாயைத் தந்தே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியும் என்பதால், அந்த நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவை அதிகரிக்கலாம் என்கிறார் மொய்லி.
இந்த ஆண்டில் இதுவரை ஈரானிடம் இருந்து இந்தியா 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இன்னும் நமக்குத் தேவைப்படும் எண்ணெய்யில் 11 மில்லியன் டன்னை ஈரானிடம் இருந்தே வாங்கினால் நமக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈரானிடம் இருந்து 13 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. அதே அளவை இந்த ஆண்டும் ஈரானிடம் இருந்தே வாங்கினால், பணம் மிச்சமாகும். இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் மொய்லி நேரடியாகவே பேசியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஈரானுடன் தயங்கித் தயங்கி மிகச் சொற்பமான அளவிலேயே இந்தியா வர்த்தம் செய்து வருகிறது. இந் நிலையில் ஈரானுக்கு பெரும் லாபம் கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான வர்த்தகத்தில் இந்தியா இறங்கினால் அது அமெரிக்காவை பகைத்துக் கொண்டது போலாகிவிடும் என்பதால் மன்மோகன் சிங் தயங்குவதாகத் தெரிகிறது.இந்நிலையில் முதலில் ஈரானுடனான தூதரக உறவை சீராக்க வேண்டிய வேலையும் மத்திய அரசுக்கு உள்ளது. இராக்கில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு தனது கடல் எல்லைப் பகுதியைக் கடந்து சென்ற இந்திய டேங்கர் கப்பலை சமீபத்தில் ஈரான் சிறை பிடித்தது. தனக்கு 6 மில்லியன் டாலர் வரை வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் கூறிவிட்டது.
அதே நேரத்தில் ஈரானுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைப்பது அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இதைச் செய்யாவிட்டால் பல ஆயிரம் கோடிகள் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும்.
இதனால் மொய்லி சொல்வதைப் போல ஈரானில் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து டாலர்களை மிச்சப்படுத்தி ரூபாய் மதிப்பு மேலும் சரிவதைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார் ப.சிதம்பரம். மொய்லிக்கு முன்னதாகவே சிதம்பரம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், ஐ.நா. பொருளாதாரத் தடைகள், அமெரிக்க உறவை கருத்தில் கொண்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.
 
நன்றி :thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக