அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 27 நவம்பர், 2012

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 2:208)

பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏதோ ஒப்பு சப்புக்காக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றிரண்டைப் பின்பற்றி விட்டு மற்றவற்றில் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான் வரதட்சணை! இந்த வரதட்சணை மற்றும் அதனால் ஏற்படும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து, தவ்ஹீது ஜமாஅத் போரிடுவது போன்று வேறெந்த ஜமாஅத்தும் போரிடவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

எத்தனையோ இளைஞர்கள் இந்தப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வந்தது, இன்னும் முடித்துக் கொண்டிருப்பது, ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தாங்கள் பெண் வீட்டில் வாங்கிய பொருட்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற காரியங்களெல்லாம் நடப்பது ஒரு சரித்திர மாற்றமாகும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மறுமை பயம் தான்! அந்த மறுமை பயத்தைப் பிரச்சாரத்தின் போது ஊட்டியதால் தான் இந்த மாற்றமும் மறுமலர்ச்சியும்!

இதனுடைய முன்னேற்றம் தான் வரதட்சணை திருமணத்தை மக்கள் புறக்கணிக்க முன்வந்த காரியம்! எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சொந்த சகோதரர்களின் திருமணத்தைக் கூட புறக்கணித்து விட்டு, சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் இந்தப் போரட்ட உணர்வு, புரட்சித் தீ தொடர்ந்து பற்றி எரியுமானால் இன்ஷா அல்லாஹ் பெருமளவில் இந்த வரதட்சணை எனும் கொடுமையை சுட்டுப் பொசுக்கலாம். ஆனால் இதை ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களே சரியாகப் பேணுவது கிடையாது.இந்த வரதட்சணை ஏற்படுத்திய மோசமான விளைவுகளைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்குத் தீமை என்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் தான் வரதட்சணை!

இன்று பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, பெண்ணினம் கருவில் உருவாகும் போதே நவீன கருவிகள் மூலம் கண்டறியப் பட்டு அதைக் கொலை செய்வது, நீண்ட காலம் ஆகியும் திருமணமாகாமல் பெண்கள் விபச்சாரத்தை நோக்கி ஓடுவது போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான தீமைகள் அனைத்திற்கும் காரணமே வரதட்சணை தான்! வரதட்சணை வாங்கியவர்களிடம் இந்தப் பாவங்களுக்கெல்லாம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ்விடப் போவது கிடையாது.அல்லாஹ் கணக்கு தீர்க்கும் பாவங்களின் பட்டியலில் இன்னும் சில பாவங்களும் சேர்கின்றன. அந்தப் பாவங்கள் எவை என்பதை விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்!

பிள்ளைகளிடம் பாரபட்சம்
எல்லாவற்றிற்கும் வழி காட்டும் மார்க்கம், தாய் தந்தையர் தமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் வழி காட்டுகின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எப்படி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதும் அந்த வழி காட்டல்களில் உள்ள ஒன்றாகும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல், நூல்: புகாரி 2587

மற்றொரு அறிவிப்பில், “நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.

இந்த வேறுபாட்டை பெற்றோர்கள் தாங்களாகவும் செய்கின்றார்கள்; வரக் கூடிய மாப்பிள்ளைகள் வைக்கும் கோரிக்கைக்குத் தக்கவும் இந்த வேறுபாட்டைச் செய்கின்றார்கள். இங்கு தான் வரதட்சணையின் முதல் விபரீதத்தை, மோசமான விளைவுகளை நாம் பார்க்கிறோம்.
பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள். மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

“அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீதமாக நடங்கள்! என்னைப் பாவத்திற்கு சாட்சியாக்காதீர்கள்!” என்ற நபி (ஸல்) அவர்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கருத்தில் கொண்டு பாருங்கள். இந்த வரதட்சணைக் கொடுமை எந்த அளவுக்குப் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நீதம் தவற வைக்கின்றது? எனவே வரதட்சணை வாங்கக் கூடியவர்கள் இந்தப் பாவத்திற்காகவும் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றாக வேண்டும். அல்லாஹ் காப்பானாக!

பாகப் பிரிவினையா? பாவப் பிரிவினையா?

வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும்.நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ!

பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது. மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர். தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார். தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!

பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, “உன்னைக் கட்டிக் கொடுக்கும் போது இவ்வளவு தொகை பணமாகவும், பொருளாகவும் தந்திருக்கின்றார். அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் ஆகின்றது.
எனவே இப்போது சொத்தில் உனக்குரிய பங்கை எங்களுக்காக விட்டுக் கொடு” என்று அன்பாகவோ, அதட்டலாகவோ பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள்.ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள்.இந்தக் கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தகப்பன் இறந்த பிறகு பங்கு வைக்கப்பட வேண்டிய சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் போது வழங்கிய அன்பளிப்பை எப்படிக் கழிக்க முடியும்? இதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி விட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!

இவை அல்லாஹ்வின் வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான்.அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 4:13,14)

அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம். ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வரதட்சணை மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் வரதட்சணை வாங்கப் படும் திருமணங்களில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. சொத்துக்களைப் பறிப்பது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்கலாமா? அவ்வாறு வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா? முடிவெடுங்கள்!
இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!

                                                                                                                              -எம். ஷம்சுல்லுஹா

நன்றி : tntj.net


0 கருத்துகள்:

கருத்துரையிடுக