அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -10)

புகழுக்கு ஆசைப்பட்டார்களா ?

எந்தச் சுயநலனும் இன்றி யாரேனும் பொதுச் சேவை செய்ய முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு வேறு விதமான சந்தேகம் தோன்றலாம். சுயநலவாதிகளையே பார்த்துப் பழகியதால் இந்தச் சந்தேகம் ஏற்படலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் பதவியினால் கிடைக்கும் அதிகாரத்துக்காகவும், புகழுக்காகவும் அந்தப் பதவிகளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா?
எத்தனையோ வசதி படைத்தவர்கள் புகழுக்காக பெருமளவு செலவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே பணம் காசுகள் விஷயத்தில் தூய்மையாக நடந்தாலும் பதவியைப் பயன்படுத்தி புகழையும், பாராட்டையும் பெற்றிருக்கலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது. தனக்கு முன்னால் நாலு பேர் கைகட்டி நிற்கும் போதும், நாலு பேர் புகழும் போதும் ஏற்படும் போதை சாதாரணமானது அல்ல.
சொத்து சுகம் சேர்ப்பதற்காக அதிகாரத்துக்கு வர பலர் விரும்புகிறார்கள் என்றால் சில பேர் இந்தப் புகழ்ப் போதைக்காக அதிகாரத்தை விரும்புகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழுக்கு ஆசைப்பட்டார்களா? பதவியின் மூலம் கிடைக்கும் மரியாதையைப் பயன்படுத்திக் கொண்டார்களா?நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமை, ஆட்சித் தலைமை ஆகிய தலைமைகளில் எந்த ஒன்றையும் அவர்கள் தமது புகழுக்காகப் பயன்படுத்தியதில்லை.ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்' என்று கூறினார்கள். நூல் : புகாரி 2433, 2055, 2431

'கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ' என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை' என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.நமக்குச் சொந்தமான நாலணா கீழே விழுந்து விட்டால் நாலு பேர் பார்க்கும் போது அதை எடுப்பதற்கு நமக்கே கூச்சமாக இருக்கிறது. 'இந்த அற்பமான பொருளைக் கூட எடுக்கிறானே என்று மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பார்களே' என்று கருதுகிறோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதன் பார்க்கின்ற கௌரவத்தைக் கூட இம்மாமனிதர் பார்க்கவில்லை.

இன்னொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. 'அள்பா' என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராம வாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராம வாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்' என்று கூறினார்கள். நூல் : புகாரி 2872, 6501

எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம்.மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் கூட தமது நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தோல்வியடையும் போது அவர்கள் மீது அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் வீசுவதைப் பார்க்கிறோம். சாதாரண மக்கள் கூட தம்மைச் சேர்ந்தவர்கள் விளையாட்டில் தோற்பதைக் கேவலமாக எண்ணுகின்றனர்.சாதாரண நிலையில் உள்ள ஒரு கிராமவாசி தனது கோழியோ, ஆடோ சண்டையில் தோற்று விட்டால் அது தனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் என்று கருதுகிறான்.இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளாமல் இருப்பது கூட ஆச்சரியமானது அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் கூறிய அறிவுரை தான் மிகவும் ஆச்சரியமானது.

'உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்' என்னே அற்புதமான வாசகம்!

தனது ஓட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்' என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்' எனவும் கூறினார்கள். நூல் : புகாரி 2821, 3148

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலை வராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.

'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது' என்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண்ணிக்கையளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்குவேன்' என்று கூறுவதிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....) 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக