அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 5 ஜூலை, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -21)

ஆன்மீகவாதிகளின் மிக முக்கியமான கேடயத்தையும் முறித்துப் போடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து எதையோ பேசினார்கள். என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் பேச்சு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்விருவரையும் ஏசியதுடன் சபிக்கவும் செய்தார்கள். அவ்விருவரும் சென்ற பின் இவ்விருவருக்கும் கிடைத்த நன்மையை வேறு எவரும் அடைய முடியாது என்று நான் கூறினேன். நீ என்ன சொல்கிறாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'அவ்விருவரையும் திட்டிச் சபித்தீர்களே' என்று நான் கூறினேன். 'ஆம்! நானும் ஒரு மனிதனே. எனவே நான் யாரையாவது திட்டினாலோ, சபித்தாலோ அதை அவருக்கு அருளாக ஆக்கி விடு என்று என் இறைவனிடம் நான் உறுதி மொழி பெற்றுள்ளேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4705

உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒரு அனாதைப் பெண் இருந்தாள். அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது 'நீ பெரியவளாகி விட்டாய்! உன் வயது பெரிதாகாமல் போகட்டும்' எனக் கூறினார்கள். உடனே அந்த அனாதைப் பெண் உம்மு சுலைம் அவர்களிடம் அழுது கொண்டே சென்றார். 'மகளே என்ன நேர்ந்தது' என்று உம்மு சுலைம் கேட்டார்கள். 'என் வயது அதிகமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) எனக்கெதிராகச் சபித்து விட்டார்களே! இனி மேல் நான் வளராது போய் விடுவேனே' எனக் கூறினார். உடனே அவசரமாக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது அனாதைக் குழந்தைக்கு எதிராகச் சாபம் இட்டீர்களா? எனக் கேட்டார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். 'நான் எனது இறைவனிடம் உறுதி மொழி பெற்றுள்ளது உனக்குத் தெரியாதா? நானும் ஒரு மனிதனே! மற்ற மனிதர்கள் திருப்தியுறுவது போல் (சிலர் மீது) நானும் திருப்தியுறுவேன். மற்ற மனிதர்கள் கோபம் கொள்வது போல் நானும் கோபப்படுவேன். எனவே என் சமுதாயத்தில் எவருக்கு எதிராகவேனும் நான் பிரார்த்தனை செய்து அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டால் அதை அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வணக்கமாகவும் ஆக்குவாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்துள்ளேன் என்றார்கள்.  
நூல் : முஸ்லிம் 4712

'இறைவா! நம்பிக்கையாளர் எவரையேனும் நான் ஏசினால் அதை மறுமையில் உன்னிடம் நெருங்குவதற்குக் காரணமாக ஆக்கி விடு!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததை நான் செவியுற்றுள்ளேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்
 நூல் : புகாரி: 6361

'
என் சாபத்திற்கு யாரும் பயப்பட வேண்டாம்!' என்று கூறியது மட்டுமின்றி நான் கோபத்தில் யாரையாவது சபித்தால் அது அவருக்கு நன்மையாகத் தான் முடியும் எனவும் கூறிய ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இப்படி அறிவித்ததன் முலம் தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர், விமர்சனம் செய்வோரின் அச்சத்தைப் போக்குகிறார்கள்.

நியாயத் தீர்ப்பு நாளில் நான் தடாகத்தின் அருகே நிற்பேன். அப்போது என்னுடன் தோழமை கொண்டிருந்த சிலர் தடாகத்தை நோக்கி தண்ணீர் அருந்த வருவார்கள். அவர்களை நான் காணும் போது, வெட்கப்பட்டு என்னை விட்டும் திரும்பிக் கொள்வார்கள். 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் ஆயிற்றே!' என்று நான் முறையிடுவேன். 'உமக்குப் பின் அவர்கள் என்ன செய்தார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று எனக்குப் பதில் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நூல்கள் : முஸ்லிம் 4259, 
புகாரி 4259, 4740, 6576, 6582, 6585, 6586, 7049

என்னுடைய தோழர்கள் சிலர் (மறுமையில்) பிடிக்கப்படுவார்கள். அப்போது 'என் தோழர்கள், என் தோழர்கள்' என்று நான் கூறுவேன். 'நீர் அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர்' என்று என்னிடம் கூறப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி: 3349, 3447, 4625, 6526

கெட்டவர்களையெல்லாம் தீட்சைக் கொடுத்து நல்லவர்களாக்குகிறோம் என்று கூறும் போலிகள் எங்கே? நல்லவன் யார் கெட்டவன் யார்' என்பதை இறைவனால் மட்டுமே கண்டுகொள்ள இயலும் என அறிவித்த இந்த மாமனிதரின் போதனை எங்கே?இத்தகைய ஆன்மீகத்தினால் யாருடைய சுயமரியாதைக்காவது பங்கம் ஏற்படுமா? யாரேனும் சுரண்டப்பட முடியுமா?
எப்படி நடப்பது நல்லது என்று அறிவுரை கூறத்தான் இறைவனால் தேர்வு செய்யப்பட்டுள்ளேனே தவிர மறுமையில் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் அதிகாரத்தைப் பெற்று வரவில்லை என்பதைப் பல முறை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவர்களின் கீழ்க்கண்ட அறிவுரைகளைப் பாருங்கள்.  
 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அது பெரிய பாவம் என்பதையும் எடுத்துரைத்தார்கள். 'கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கணைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் மறுமை நாளில் தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் அப்போது காண வேண்டாம். (ஏனெனில்) 'உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று அப்போது நான் கூறி விடுவேன். கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தன் கழுத்தில் சுமந்து வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியையும், தங்கத்தையும் சுமந்து கொண்டு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று அப்போது நான், கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நூல் : புகாரி 1402, 3073

எத்தகைய அக்கிரமத்தையும் நாம் செய்யலாம். செய்து விட்டு ஒரு ஆன்மீகக் குருவைப் பிடித்து, அவருக்கு தட்சணை கொடுத்து விட்டால், அவரிடம் ஆசி வாங்கி விட்டால் அல்லது அவரிடம் அருள்வாக்கு பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்பது தான் பெரும்பாலான மக்களின் ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.கொள்ளையடிப்பவர்கள், ஊழல் செய்வோர், சுரண்டுவோர் அதில் சிறு பகுதியைக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 20 ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறார்கள்.இத்தகைய ஆன்மீகத்தால் யாருக்கு என்ன நன்மை? குற்றம் புரிவதை வாடிக்கையாகக் கொண்டவனை இத்தகைய நம்பிக்கைகள் திருத்துமா? ஒருக்காலும் திருத்தாது. மாறாக அவன் மேலும், மேலும் குற்றங்கள் புரிவதைத் தான் இந்த நம்பிக்கை உருவாக்கும்.இத்தகைய நம்பிக்கை அவனை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்கள் அவனது அக்கிரமத்தால் பாதிக்கப்படவும் இந்த நம்பிக்கை தான் காரண மாக அமைகிறது. போலி ஆன்மீக குருமார்கள் பலவிதத்திலும் மக்களை ஏமாற்ற இந்த நம்பிக்கை தான் முழு முதற்காரணமாக இருக்கிறது.

மனிதர்களை நல்வழிப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்களை தீமை செய்யத் தூண்டுகிற ஒரு நெறி தேவைதானா? என்று அறிவுடையோர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்த மாமனிதரோ இது போன்ற விமர்சனங்கள் வரவே முடியாத அளவுக்கு அணை போடுகிறார்.அரசியல் அதிகாரத்தின் மூலம் இவர் எந்தப் பலனையும் அடையாதது போல் ஆன்மீகத் தலைமையின் மூலமாகவும் எதையுமே அடையவில்லை; யாரையும் ஏமாற்றவில்லை என்று அறியலாம்.
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக