அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 22 ஜூலை, 2013

நோன்பின் சட்டங்கள்!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (2:184)

நோன்பு என்பது இஸ்லாமிய மாளிகையை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கும் நோன்பை முஸ்லிம் சமுதாயம் சரியான முறையில் விளங்கிப் பேணிக் கொள்வது இஸ்லாத்தை நிலைநாட்டுவதும், ஈமானை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் அருட்கொடையாகும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் ரமளான் என்ற பரகத் மிக்க மாதத்தை நோன்பிற்காகவே படைத்துள்ளான். நோன்போடு ஏனைய வணக்கங்களும், ஏனைய வணக்கங் களோடு நோன்பும் இரண்டறக் கலந்து இறையருளைப் பல்கிப் பெருகிடச் செய்யும் அற்புதமான மாதமே ரமளான். இதில் நோன்பை நிய்யத் செய்வதிலிருந்து நோன்பை பூர்த்திச் செய்யும் வரை திருமறை திருக்குர்ஆனும், ஹதிஸ்களும் கூறும் முறைப்படி இஸ்லாமிய சமுதாயம் கடைப்பிடிக்கிறதா? என்பதை நம்மை நாமே ஆய்வு செய்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் வணக்கங்களில் அலட்சியம் கொள்வது சிலரின் நிலைப்பாடாக இருக்க வேறு சிலரோ பேணுதல் என்ற அடிப்படையில் வணக்கங்களை கஷ்டப்படுத்திக் கொள்வதை மார்க்கத்திற்கு முரணாக தங்களை வருத்திக் கொள்வதை பார்க்கிறோம். இதில் நோன்பையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. முதலாவதாக நிய்யத்தை எடுத்துக் கொள்வோம்.நிய்யத் என்றால் என்ன? நிய்யத் செய்யும் முறை எப்படி?

நிய்யத் செய்வது

செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
(உமர்(ரலி) புகாரி 1)

இங்கு நிய்யத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. நிய்யத் என்னும் வார்த்தைக்கு மனதால் எண்ணுவது, தீர்மானம் செய்வது என்பதாகும். ஆனால் வாயால் மொழிவது என்கின்ற அர்த்தம் கிடையாது.ஆனால் இன்று நம் சமுதாயத்தில், நவ்வைத்து ஸவ்மகதின் அன்ன தாயி ஃபர்ளி ரமளானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா என்ற வாசகங்களைக்  கொண்டு நிய்யத் எனும் பெயரால் வாயால் மொழியும் பழக்கம் இருந்து வருகிறது. முதலில் இந்த செய்தி  ஹதிஸ் கிரந்தங்களில் இருந்தாலும் அனைத்து ஹதிஸ்களும் பலவீனமானவையாகும். இவ்வாறு கூறித்தான் நோன்பு நோற்க வேண்டுமென்றிருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒரு நிய்யத் மார்க்கத்தில் இல்லை ஆகவே அதை ஓதக் கூடாது. மீறி செய்தால் அது நிராகரிக்கப்படும்.

யாரேனும் நமது  கட்டளையின்றி ஒரு செயலை செய்தால் அது நிராகரிக்கப்படும் (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 3243)எனவே கடமையான நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் எடுக்கக்கூடாது. ஏனெனில் அது நமது விருப்பத்திற்கு உட்பட்டதல்ல. சுபுஹ் முதல் மக்ரிப் வரை நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சுபுஹ் முதலே நோன்பாளியாக நாம் இருக்க வேண்டும் என்றால் சுபுஹூக்கு முன்பே நோன்பு நோற்கும் முடிவை நாம் எடுத்து விட வேண்டும்.

நோன்பின் நேரம் 

வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்) கருப்பு கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். (அல்குர்ஆன்: 2:187)

அதாவது பஜ்ரிலிருந்து நோன்பின் நேரம் தொடங்குகிறது என இவ்வசனத்தின் மூலம் அறியலாம். ஆனால் நம் சமுதாய மக்கள் சிலரிடம்  இரவு 12 மணிக்கோ அல்லது 3 மணிக்கோ சாப்பிட்டு விட்டு உறங்கி விடும் பழக்கம் இருந்து வருவதைப் பார்க்கிறோம். இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும். இதனை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அல்லாஹ் பஜ்ரிலிருந்து தொடங்குங்கள் என்று கட்டளையிட்டிருக்க, நாமோ இல்லை நான் 12 மணிக்கோ அல்லது 3 மணிக்கோ தான் தொடங்குவேன் என்பது அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணிப்பது போலாகும் என்பதை  விளங்க மறுக்கின்றோம்.

ஸஹரின் நேரம்

நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (பஜ்ர்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (பஜ்ருக்கும் ஸஹருக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஒதும் நேரம் என்றார்கள்.(அனஸ்(ரலி) புகாரி 576, 1134, 1921, 575)
அதாவது ஐம்பது திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும்.

ஸஹர் உணவு

நம்மில் பலர் விடி ஸஹர் எனும் பெயரில் மார்க்கத்திற்கு முரணான வகையில், ஸஹர் நேரம் முடிந்தவுடன் எழுந்து தண்ணீரை மட்டும் குடித்து விட்டு நோன்பு நோற்பதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். இத்தகைய செயல்கள் நம்மை நோன்பின் பலனை விட்டும் தூரமாக்கி விடும் என்பதை விளங்க வேண்டும். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஸஹர் உணவில் பரகத் உள்ளது என நவின்றுள்ளார்கள்;

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரகத் உள்ளது (அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1923)

நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட(யூத கிருஸ்துவ)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும். 
அம்ரு பின் ஆஸ் (ரலி) முஸ்லிம் 1836)

மேலும் எதுவரை நோன்பை நோற்றிருக்க வேண்டும் என அல்லாஹ் தன் திருமறையில் :

பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் (அல்குர்ஆன் 2:187)

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர்(அபுதர்(ரலி) புகாரி 1957)

இந்த திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்-இப்னு அபீ அவ்ஃபா(ரலி)புகாரி1954)

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கவர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே! என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே என்ற அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். 
(இப்னு அபீ அவ்ஃபா(ரலி) புகாரி 1941, 1955, 1956,1958, 5297)

ஆனால் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாக பேணுதல் என்ற அடிப்படையில் நம்மவர்கள் சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்து நோன்பு துறக்கின்றனர். இது அல்லாஹ்வின் கட்டளையையும், அவனின் தூதரின் கட்டளையையும் மீறுகின்ற செயல் என்பதை உணர்ந்து அதை விட்டும் விலக வேண்டும்.

நம்மிடம்  உள்ள மற்றொரு அறியாமையையும் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விடுவதுண்டு. இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் உடலும், மனமும் உணவின் பால் நாட்டம் கொண்டிருக்கும். இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல் அல்ல! மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட ஒரு செயலாகும்.

மல ஜலத்தை அடக்கிய நிலையிலும், உணவு முன்னே இருக்கும் போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 869

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 5465, 671

இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத் தொழுகையை விட, பசியைப் போக்குவது முதன்மையானது என்பதை அறிந்து கொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே இந்த நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப் நேரத்தில் அதிகமான பசியும், உணவின் பால் அதிக நாட்டமும் இருக்கும். இந்த நேரத்தில் மனதை உணவில் வைத்து விட்டு, உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

இன்னொன்றையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப நேரமும், ஒரு முடிவு நேரமும் உள்ளது. முடிவு நேரத்துக்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும். பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான் விடலாமே தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது. மஃக்ரிப் தொழுகையைப் பொறுத்தவரை சூரியன் மறைந்தது முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம் நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றிவிட வேண்டும்.ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது என்று (4:103 வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.

நோன்பை முறிக்கும் செயல்கள்

சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும், உடலுறவு கொள்ளாமலும் இருப்பது. தீய பேச்சுக்கள் பேசாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு ஆகும். இத்தகைய நோன்பை முறிக்கும் செயல்களில் பதினோரு மாத பழக்கத்தின் அடிப்படையில் செய்துவிட்டால் என்ன செய்வது.ஏனெனில் இதன் விபரங்களை அறியாமல் நோன்பை விட்டவர்கள் அநேகம் பேர் உள்ளனர். ஆனால் நோன்பை தொடரலாம் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் செய்தான்.(அபூஹூரைரா(ரலி) புகாரி 1933, 6669)

மேலும் நம்மில் பலர் நோன்பு வைத்துக் கொண்டு குளிக்கக் கூடாது என்றும் எண்ணுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குளித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பிருக்கும் நிலையில் வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். (அஹ்மது22107, அபூதாவுத் 2018)

அதேபோல் பல் துலக்குதல், நறுமணம் பூசுதல் போன்றவற்றையும் தடை செய்கின்றனர். இவற்றிற்கெல்லாம் மார்க்கத்தில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.மேலும் நோன்பு நோற்றுக் கொண்டு இரத்தம் கொடுப்பதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதையும் விளங்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர்கள் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே நாங்கள் வெறுத்தோம் என்று கூறினார்கள்.
(ஸாபித் அல் புனானி புகாரி 1940)

அதேசமயம் உடலுக்குள் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதோ  மருந்து ஊசிக் குத்திக் கொள்வதோ கூடாது.

நோன்பு திறக்கும் துஆ

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் (புகாரி 5376) என்ற நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் தான் சரியான முறை.


எனவே நோன்பின் உண்மையான சட்டதிட்டத்தை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்தி அல்லாஹ்விற்காக நோன்பை நிறைவு செய்யும் நன்மக்களாக ஆகிட வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் நற்கிருபை செய்வானாக!  இறையச்சம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ரமளானில் நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு ஈருலக நன்மையை அடைவோமாக!

நன்றி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,துபை மண்டலம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக