அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 7 ஜூன், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -20)

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டுவிட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்' என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 624


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) முன்னால் அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோன்றுகிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.  


தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்ததை அறியும் போது இந்த மாமனிதரின் அப்பழுக்கற்றத் தூய்மை நம் கண்களைக் கலங்க வைக்கிறது.கண்ணை மூடிக் கொண்டு ஒருவரின் பின்னே செல்ல நினைத்தால் அதற்கான முழுத் தகுதியும் இவருக்கு மட்டுமே உள்ளது. எந்த வகையிலும் இவர் நம்மை ஏமாற்றவே மாட்டார். தமது அற்பமான சுயநலனுக்குக் கூட நம்மைப் பயன்படுத்த மாட்டார் என்று ஒருவரைப் பற்றிக் கருதுவதாக இருந்தால் இவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்தத் தகுதியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். நூல் : திர்மிதீ 3807நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.தமக்காக எழுந்து நிற்பதைக் கூட நிராகரித்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்வதால் தான் முஸ்லிம்கள் அவரை நூறு சதவிகிதம் பின்பற்றுகின்றனர்.மக்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதிலும், எல்லா வகையிலும் மக்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதிலும் தான் ஆன்மீகத் தலைவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.மக்களுடன் சர்வ சாதாரணமாக அவர்கள் நடந்து கொண்டால் மனிதத்ன்மைக்கு அப்பாற்பட்ட எந்தச் சிறப்பும் அவர்களுக்கு இல்லை என்பது மக்களிடம் வெளிச்சமானால் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் தான் தாம் ஒரு ஆன்மீகத் தலைவராக இருந்த போதும் எந்த வகையிலும் தாம் மனிதத் ன்மைக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். அறியாத மக்கள் அவர்களை மனித நிலையை விட்டும் அப்பாற்பட்டவர்களாகக் கருதினாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் இத்தகைய கருத்துக்கு இடமிருந்தாலோ அதை உடனடியாகக் கண்டித்துத் திருத்தி விடுவார்கள்.


அவர்களின் வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் போது அவர்களுக்கு இயன்றதையே கட்டளையிடுவார்கள். அப்போது சில நபித் தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களைப் போன்றவர்களாக இல்லை. அல்லாஹ் உங்களின் முன் பாவங்களையும், பின் பாவங்களையும் மன்னித்து விட்டான்.' என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அந்தக் கோபத்தின் அறிகுறி அவர்களின் முகத்தில் தென்பட்டது.' நான் உங்களை விட இறைவனை அறிந்தவன். அவனை அதிகம் அஞ்சுபவன்' எனக் கூறினார்கள். நூல் : புகாரி: 20


பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் தாம் கூறும் ஆன்மீக நெறியைத் தாம் கடைப் பிடிக்காவிட்டாலும் தமது சீடர்களும், பக்தர்களும் முழுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வீடு வாசல் குழந்தை குட்டிகள் என அனைத்தையும் மறந்து தனது குருநாதரே கதி என்று கிடப்பவர்களைத் தான் இவர்கள் மிகவும் விரும்புவார்கள். இத்தகையோர் கூட்டம் பெருகப் பெருகத் தான் இவர்களது மதிப்பும், செல்வமும் உயரும். ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எது இயலுமோ அதைத் தான் செய்ய வேண்டும். ஆன்மீகத்தின் பெயரால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து விடக் கூடாது' என்று அறிவுரை கூறி வந்தார்கள்.

குடும்பம், ஆட்சி, நிர்வாகம், பிரச்சாரம் என்று பல்வேறு பொறுப்புக்கள் அவர்கள் மீது இருந்ததால் முழு நேரத்தையும் வணக்க வழிபாடுகளிலேயே அவர்களும் செலவிட மாட்டார்கள். ஆயினும் சில நபித் தோழர்கள் வேறு விதமாக நினைத்தனர்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதராக இருப்பதால் அவர்கள் குறைவாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போதுமானது. ஏனெனில், இறைத் தூதர் என்ற தகுதியின் மூலம் மறுமையில் அவர்கள் மகத்தான பதவியைப் பெற்று விட முடியும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அப்படி நடக்கக் கூடாது. அவர்களை விட நாம் அதிகமதிகம் மார்க்கத்திற்காகச் செலவிட்டாக வேண்டும் என்பது தான் அவர்களின் நினைப்பு.

எல்லாக் காலத்திலும் மக்களின் நம்பிக்கை இப்படித் தான் இருக்கிறது. இதனால் தான் ஆன்மீகத் தலைவர்கள் கஞ்சா அடிக்கின்றனர். பெண்களுடன் உல்லாசம் புரிகின்றனர். இதைப் பார்க்கும் பக்தர்கள் அவர் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் கடவுளுக்கு வேண்டப்பட்டவர் (?) என்பதால் அவரது தவறைக் கடவுள் கண்டு கொள்ள மாட்டார்; நாம் அப்படி நடந்தால் மட்டும் தான் கடவுள் தண்டிப்பார் என்று அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக நினைக்கின்றனர்.ஆனால் அறியாத மக்களின் இந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக இந்த மாமனிதர் பயன்படுத்திக் கொண்டாரா? 'ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான். நான் உங்களை விட்டு வேறுபட்டவன் தான்' எனக் கூறினார்களா?மாறாகக் கடும் கோபம் கொள்கிறார்கள். அந்தக் கோபம் அவர்களது முகத்திலும் தென்படுகிறது. இறைவனை அதிகமாக அஞ்சுகின்ற நானே இயன்றதை மட்டுமே செய்யும் போது உங்களை நீங்கள் வருத்திக் கொள்வது எப்படிச் சரியாகும்? எனக் கூறி அந்த மக்களின் அறியாமையை நீக்குகிறார்கள்.இத்தகைய அறியாத மக்கள் மற்ற ஆன்மீகத் தலைவர்களின் கைகளில் சிக்கியிருந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெளிப்படையாக நான் செய்கிற வணக்கம் மட்டும் தான் உங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாத முறையில் நான் கடவுளோடு எப்படி ஒன்றிப் போய் வணங்குகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு முழுவதும் உறங்காமல் தவத்திலேயே நான் மூழ்கி இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்றெல்லாம் புளுகி மக்களைத் தங்களின் அடிமைகளாகவே வைத்திருப்பார்கள்.


மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்தார்கள். 'அவர் பெயர் அபூ இஸ்ராயீல். உட்காராமல் நின்று கொண்டிருப்பது என்றும், நிழலை அனுபவிப்பதில்லை எனவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பது எனவும் அவர் நேர்ச்சை செய்திருக்கிறார்' என்று மக்கள் விளக்கினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்காருமாறும், நிழலை அனுபவிக்குமாறும், பேசுமாறும், நோன்பை மட்டும் முழுமைப் படுத்துமாறும் அவருக்குக் கூறச் சொன்னார்கள். நூல் : புகாரி: 6704


எந்த ஆன்மீக வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டினார்களோ அந்த ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி ஒருவர் அதி தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார்.இம்மாமனிதர் இறைவனின் தூதராக இல்லாமல் வேறு நோக்கத்திற்காக இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்திருந்தால் இத்தகையோரை ஊக்குவித்திருப்பார்கள்.இது போன்ற கிறுக்குத்தனமான காரியங்களைச் செய்வோர் தான் ஆன்மீகத் தலைவர்களின் முக்கியமான பலம்.தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தனது தொண்டன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு சாவதை சாதாரண அரசியல் தலைவர்களே உள்ளூர விரும்புகின்றனர். ஆன்மீகம் இதை விட அதிகம் போதை தரக் கூடியது. தன்னால் மதிக்கப்படும் குரு, தன்னை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மனிதப் படுக்கைகளாக மாறும் பக்தர்களை இன்றைக்கும் பார்க்கிறோம்.தன்னைக் காண்பதற்காக வாகனத்தில் செல்ல வசதி இருந்தும் சுட்டெரிக்கும் வெயில் கால்நடையாகவே பக்தர்கள் நடந்து வருவதைக் கண்டு ஆனந்தம் அடையும் ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம்.ஆண்கள் மட்டுமின்றி பெண்களும், சிறுவர்களும் கூட பல நாட்கள் நடையாக நடந்து தங்கள் குருநாதரைக் காண வருகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் விரைவான வாகனங்களை யாரும் பயன்படுத்த முடியும். ஆனாலும் அறியாத மக்கள் சாரைசாரையாக பல நாட்கள் நடந்து வருவதில் கிடைக்கும் விளம்பரங்கள் வாகனத்தில் வந்தால் கிடைக்காதே!

இந்த மாமனிதரைப் பாருங்கள்!


1) உட்காராமல் நிற்க வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் ஒருவர் முடிவு செய்கிறார்.
2) யாருடனும் பேசவே மாட்டேன்
3) பகலெல்லாம் வெயிலில் தான் நிற்பேன். நிழலை அனுபவிக்க மாட்டேன்.
4) காலமெல்லாம் நோன்பு நோற்பேன்
என்று நான்கு காரியங்களைச் செய்வதாக இவர் செய்த தீர்மானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அடியோடு நிராகரிக்கிறார்கள்.'நோன்பு மட்டும் வைத்துக் கொள்! மற்ற மூன்று தீர்மானங்களையும் மாற்றிக் கொள்' என ஆணையிடுகிறார்கள்.ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்த முயன்றவர்கள் கூட இந்த இடத்தில் தோற்று விட்டனர். தமக்காக மற்றவர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டும்! கஷ்டப்பட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டனர். 
ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அனைவரும் தோற்ற இடத்தில் இந்த மாமனிதர் வென்று காட்டுகிறார்!  
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக