அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 25 மார்ச், 2011

பேச்சின் ஒழுங்குகள் (பாகம்-1)

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும், கொடியவனாகவும், மென்மையானவனாகவும், கடுமை காட்டுபவனாகவும் பிரதிப­க்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் ஜோக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார். 

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு


பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன. 


மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.


ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால்,ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வ­யுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது. 


நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்


நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும்.மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும்.தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.


இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது.நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!  
அல்குர்ஆன் (33:70)
 
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். அல்குர்ஆன் (35:10)
 
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)    நூல்: புகாரி (2989)
 
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.


நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரி­ருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: அஹ்மத் (9996)
 
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது.கடும் வேதனையான நரக நெருப்பி­ருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்தி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).  அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ர­லி)  நூல்: புகாரி (6023)
 
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது.மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான்.அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.


ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி).  நூல்: புகாரி (5754)
 
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது.குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும்.ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.


சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.


நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து,''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி)  நூல்: முஸ்­லிம் (4020)
 
பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!


நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.  அறிவிப்பவர்: உமர் (ர­லி)  நூல்: புகாரி (6780)
 
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி­) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி­ருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்   நூல்: முஸ்­லிம் (118)


யாகாவாராயினும் நாகாக்க!


நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள். 


ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.  அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி­)  நூல்: அஹ்மத் (14870)
 
தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்


தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.


(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.  அல்குர்ஆன் (17:53)
 
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.  அல்குர்ஆன் (28:55)
 
வீணானதைப் புறக்கணிப்பார்கள்.  அல்குர்ஆன் (23:3)
 
அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.  அல்குர்ஆன் (25:72)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி (6018)
 
நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதையே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.  அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்  நூல்: அஹ்மத் (19403)
 
பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வ­யுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.


இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலி­யுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.


ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.


சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.


அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள். 


ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றி­ருந்தே தவிர (மற்றவற்றி­ருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ர­லி)   நூல்: அஹ்மத் (17902)


தொடரும் இன்ஷா அல்லாஹ்.....

நன்றி : துபைTNTJ
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக