அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 8 ஜூலை, 2011

இறையில்லத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் (பகுதி-1)

அகில உலகையும் படைத்து, பரிபா­த்துக் கொண்டிருக்கும் ஓரிறைவனை, அவனது அடியார்கள் கூட்டாகவும், தனியாகவும் வணங்கி வழிபடுவதற்காக எழுப்பும் ஆலயமே இறையில்லம், வழிபாட்டுத்தலம் எனப்படுகின்றது. எப்போது இறைவனுக்காக என்ற தூயநோக்கில் ஒரு பள்ளிவாசலை எழுப்புகிறோமோ அப்போதே அதற்கு இறைவன் சொந்தக்காரனாக ஆகிவிடுகின்றான். எனவே தான் பள்ளிவாசல்கள் யாவும் தனக்கே சொந்தம் என இறைவன் திருக்குர்ஆனில் உரிமை கொண்டாடுகின்றான்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72 : 18

உலகில் உள்ள இடங்களிலேயே தன்னை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட ஆலயம், தனக்கு மிகவும் விருப்பமானது என்றும் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)
முஸ்லி­ம்1190

இறைவனுக்கு சொந்தமான, மிகவும் விருப்பமான பள்ளிவாசலை நம்முடைய செயல்பாடுகளால் அவனுக்கு வெறுப்பிற்குரியதாக மாற்றிவிடுகின்றோம். இறைவனது இல்லத்தில் அவனது விருப்பத்திற்கேற்ப, உத்தரவிற்கேற்ப நடந்து கொள்ளாமல் நம்முடைய மனவிருப்பத்திற்கு தோதுவாக செயல்படுகின்றோம்.

உலகில் மனிதர்களால் உயர்வாக மதிக்கப்படும் எந்தவொரு இடமாக இருந்தாலும், அதற்கென சில வரையறைகளும் ஒழுங்குமுறைகளும் கட்டாயமாக கடைபிடிக்கப்படும். கவர்னர் மாளிகை, அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் அவற்றை நிர்வாகம் செய்பவர்களால் பிறப்பிக்கப்பட்டிருக்கும். வெளிநாடுகளில் பெரும் பெரும் ஷாப்பிங் சென்டர்களில் கூட ஷூ அணிந்து தான் உள்ளே வரவேண்டும். கை­லி, வேஷ்டி அணிந்தவர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதை அறிகிறோம்.

கே­லிக்கூத்துகளும், அனாச்சாரங்களும் நிறைந்திருக்கும் இது போன்ற இடங்களிலும் சில ஒழுங்குமுறைகள் வரையறுக்கப்படுமாயின் இறைவனுடைய ஆலயம் நிபந்தனைகள் விதிக்கப்படுதற்கு மிகவும் ஏற்றமானதே.

பள்ளிவாச­ன் புனிதம்

இறையில்லம் என்பது சாதாரணமான ஒன்றல்லவே. இறையில்லத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மறுமை நாளில் இறைவனின் அருளுக்கு உரியவர்கள். முழு மனித சமுதாயமும் அந்நாளில் வேதனைகளில் மூழ்கி, தவித்துக் கொண்டும், சூரியனின் அளவற்ற அனலுக்கு இரையாகிக் கொண்டும் நிம்மதி பெற நிழலை தேடி அலையும் தருணத்தில் சில பாக்கியவான்கள் மட்டும் இறைவனது சிம்மாசனத்தின் நிழலை பெற்று நிம்மதி பெறுவார்கள், மகிழ்ச்சியுறுவார்கள். அவர்களில் இறையில்லத்தோடு தொடர்பில் இருந்தவர்களும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்:(அதில் ஒருவர்) பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)புகாரி 660

இறைவனை வணங்குவதற்காக அவனது ஆலயத்திற்கு வந்தால் அவர்களுக்கென சொர்க்கத்தில் ஒரு மாளிகையை இறைவன் தயார் செய்வதாகவும் நபிகளார் தெரிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பள்ளிவாசலுக்கு  (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
புகாரி 662

இவ்வளவு உயர்வுமிக்க, தனக்கு விருப்பமான பள்ளிவாச­ல் அவசியம் பேணப்பட வேண்டிய சில ஒழுங்குமுறைகளை இறைவன் விதிக்கின்றான். அவைகளை அறிந்து, பேணுவதின் மூலம் இறையில்லத்தை கண்ணியம் செய்வோமாக.

இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.
அல்குர்ஆன் 22 : 32

பிரார்த்தனை
முதன்மையாக இறையில்லத்திற்குள் நுழையும் போது அவனது அருளை, கருணையை வேண்டும் விதமாக ஒரு பிரார்த்தனை புரிய வேண்டும். அந்த பிரார்த்தனையை நபிகளார் கற்றுத்தந்துள்ளார்கள். இதனை கூறிய வண்ணம் உள்ளே நுழைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ‘அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்; பள்ளிவாசரிரி­ருந்து வெளியேறும்போது ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிரிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுமைத் (ர­லி), அல்லது அபூஉசைத் (ர­லி)
முஸ்­லிம் : 1286 அபுதாவூத் 323

அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்


தொழுகைக்காகவோ, வேறு ஏதேனும் விஷயத்திற்காகவோ பள்ளியினுள் நுழைந்தால் உடனே அமர்ந்து விடக்கூடாது.மாறாக உட்காரும் முன் இரண்டு இரக்அத்கள் தொழவேண்டும் என நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
 


அறிவிப்பவர் : அபூகத்தாதா (ஹர்ஸ் பின் ரிப்ஈ) அஸ்ஸலமீ (ரலி)
புகாரி 444
இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுதான் அமரவேண்டும் என்பதில் நாம் அலட்சியம் காட்டிவிடக்கூடாது. ஏனெனில் நபிகளார் இதில் மிகுந்த கவனம் எடுத்துள்ளார்கள். ஒரு முறை நபியவர்கள் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில்  ஒரு மனிதர் உள்ளே நுழைகின்றார். உரையை தவற விடாது கேட்க வேண்டும் என்ற நோக்கில் அமர்ந்து விடுகின்றார். இதைக்கண்ட நபியவர்கள் தொழாமல் அமர்ந்து விட்ட அத்தோழரை நோக்கி தோழரே எழுந்து இரண்டு இரக்அத்கள் சுருக்கமாக தொழுதுவிட்டு பிறகு உட்காருங்கள் என்று உரையின் இடையிலேயே குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாüல் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார் உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), ”நீர் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இல்லை” என்றார். ”(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
புகாரி 931

அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதின் முக்கியத்துவத்தை இச்சம்பவம் ஆழமாய் உணர்த்துவதை அறியலாம்.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா  
                 & 
அப்துல் கரிம் மேளப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரி

தொடரும் இன்ஷாஅல்லாஹ்...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக