அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 24 ஜூலை, 2011

நற்செயலுக்குக் கிடைக்கும் பரிசு.

இறைவன் மனிதனை உலகில் படைத்த நோக்கம் அவனை வணங்குவதற்காகத்தான்.அதன் காரணத்தினால் மனிதனுக்கு வாழ்வையும் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான்.மனிதன் வாழுகின்ற பொழுது நற் செயலை செய்கின்றானா? இல்லையா? என்பதை சோதித்துப் பார்க்கிறான். அவன் செயல்கள்; செய்தால் அதற்கு கூலி மரணத்தின் பின் மறுமையில் வழங்குவான்.இதையே திருமறையில் கூறுகிறான்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தை யும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன் மன்னிப்பவன்.(67:2)

படைப்புக்களில் அழகானவனும் பகுத்தறிவாளனும் மனிதனே!

இறைவனுடைய படைப்புக்களில் விலங்குகள்,பறவைகள் போன்ற பல வகையான படைப்புக்கள் உள்ளன.ஆனால் தன்னுடைய படைப்புக்களில் அழகானதாகவும் சிறந்த படைப்பாகவும் பகுத்தறிவுள்ளதாகவும் மனிதனை அல்லாஹ் படைத்துள்ளான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(95:4)

ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கட­லும் சுமந்து செல்ல வைத்தோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.(17:70)

நற் செயலுடையோரே சிறந்தவர்கள்.இன்று மனிதன் பகுத்தறிவின் மூலமாக எல்லாப் படைப்புக்களை விடவும் சிறந்தவனாக திகழ்கின்றான்.இதை எல்லா மதங்களும் கொள்கைகளுமே ஏற்றுக்கொள்கின்றன.ஆனால் அல்லாஹ்விடத்தில் ஒரு மனிதன் பகுத்தறிவின் மூலமாக மாத்திரம் சிறந்தவனாக முடியாது.ஏன் என்றால் அல்லாஹ் கூறுகிறான். 

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூ­ லிஉண்டு.(95:4,5,6)

இந்த வசனத்தில் மனிதனை அழகாக படைத்ததாகவும் அம்மனிதனையே இழிந்தவனாகவும் ஆக்கியிருப்பதாகவும் கூறுகிறான்.ஆனால் நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோர் தான் சிறந்தவர்கள் என்றும் உணர்த்துகிறான்.ஆகவே பகுத்தறிவின் மூலமாக ஒரு மனிதன் சிறந்தவனாக முடியாது.அவனிடத்தில் ஈமானும் நற் செயல்களும் இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் தான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவனாக முடியும்.இவ்வாறு அல்லாஹ் கூறுவதற்கு காரணம் உள்ளது.ஏன் என்றால் எத்தனையோ நபர்கள் பெயரளவில் முஸ்லிம்களாக உள்ளனர்.ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுகின்ற முஸ்லிம்களாக இல்லை.அப்துல்லாஹ்(அல்லாஹ்வின் அடியான்)என்ற பெயரை சூட்டியிருப்பார் ஆனால் அவனோ ஆபாசத்தின் தந்தையாக இருப்பான்.மூஸா என்று பெயரை சூட்டியிருப்பான் ஆனால் அவனுமோ வட்டிக்கு முன்னுதாரனமாக  இருப்பான்..இது போல் எத்தனையோ பெயர்தாங்கி முஸ்லிம்கள் உள்ளனர்.இவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாக முடியுமா? சிந்தியுங்கள்.

நற்செயலே இறைவனிடத்தில் சிறந்தது.

உலகத்தில் இன்று மனிதன் பதவியாலும் பணத்தினாலும் சிறந்தவனாகக் கருதப்படுகின்றான். ஆனால் அல்லாஹ்விடத்தில் நாம் சாம்பாதித்த செல்வத்தையோ பதவியையோ காட்டி சிறந்தவன் என்ற அந்தஸ்தை பெற முடியாது.மாறாக நம்முடைய நற் செயல்களின் மூலம்தான் அந்த அந்தஸ்த்தை பெற முடியும்.

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும்.(46:18)­

காடு வரை குடும்பம் கடைசி வரை நற்செயல்கள்.

மனிதனுக்கு இவ்வுலகில் அவனது மனைவி பிள்ளைகள் மற்றும்; உறவினர்கள் சொத்து செல்வம் உதவியாக இருக்கின்றது.அவனுக்கு நோய்,நொடி என்றால் அரவணைப்பதற்கு குடும்பமும்,நலம் விசாரிப்பதற்கு உறவினர்களும்,குணமாக்க,செலவழிப்பதற்கு செல்வமும் உள்ளது.ஆனால் இவைகள் அனைத்தும் அவன் மண்ணறைக்குப் போகும் வரைதான். கடைசி வரைக்கும் அவன் செய்த நற்செயல்களே அவனைக் காக்கும் கவசமாக உள்ளது.இதை பின் வரும் நபி மொழியும் திருமறையும் உணர்த்துகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறந்தவரை மூன்று விஷயங்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அதில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அதில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய நற்செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் 
நூல் : புகாரி(6514) 

சம்பாதிப்பதில் நிரந்தரமானது நற்செயலா? செல்வமா?

உலக ஆசையில் மூழ்கி பணம் சம்பாதிப்பதலேயே மனிதன் குறிக்கோளாக இருக்கிறான்.ஆனால் நாம் சம்பாதிக்கின்ற செல்வம் நிலையானதும் கிடையாது.அதை முழுமையாக அனுபவிப்பதும் கிடையாது.ஆனால் நாம் செய்கின்ற நற்செயல்கள் நிலையானது.அதனால் முழுமையான இன்பத்தையே அனுபவிப்போம்.அதை பின் வரும் நபி மொழி உணர்த்துகின்றது. 

நபி (ஸல்) அவர்கள், ''மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது'' என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.அப்போது அவர்கள், ''ஆதமின் மகன் , எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி)­
நுல் : முஸ்லிம்(5665)­ 

நற்செயல் செய்யாத மனிதனின் அவல நிலை.

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ''எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் விட்டதே! எனக் கூறுவான்(69:2) 

நற்செயல் இல்லாதவன் நஷ்டமடைந்தவனே!

நாம் உலகத்தில் இன்பமாக வாழ்வதாலோ உயர்ந்த கல்வி கற்று விட்டதாலோ நல்ல குடும்பம் அமைந்ததாலோ வெற்றியடைந்து விட்டோம் என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.ஆனால் இதுவெல்லாம் இவ்வுலகில் கிடைக்கும் நிலையில்லா சந்தோஷமாகும். நல்லமல்கள் செய்தவர்களே நிலையான வெற்றியை அடைந்தவர்கள்.அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.

மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(103:2,3) 

நற்செயலால் கிடைக்கும் நன்மைகள்.

நாம் தொழுகை,நோன்பு,தர்மம் போன்ற நல்ல அமல்கள் செய்வதின் மூலமாக அல்லாஹ் எண்ணிளடங்கா நன்மைகளை வழங்குகிறான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு முடிவில்லாத கூலி­ உண்டு.(41:8)

அடியான் மீது அல்லாஹ்வின் அன்பு.

இன்னொருவரின் அன்பை அடைவதற்காக எவ்வளவோ செயல்களை செய்கிறான். தலைவனின் அன்பை பெறுவதற்காக தொண்டன் தீக்குழிக்கிறான்.காதலியின் காதலை பெறுவதற்காக காதலன் கடலில் குதிப்பதற்கும் முன்வருகிறான்.பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் கடவுளின் அன்பை பெறுவதற்காக தன்னை வருத்துகின்ற வணக்கங்களை எல்லாம் செய்வதை அறிகிறோம்.ஆனால் இஸ்லாத்தில் உள்ள வணக்க வழிபாடுகள் அனைத்துமே ஒரு மனிதனின் சக்திக்கேற்பவே அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.அதை செய்கின்ற இறைநம்பிக்கையாளனுக்கு தன் அன்பை வழங்குகிறான். 

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.(19:96) 

அல்லாஹ்வின் நேசம் அடியானுக்கு ஓர் பாக்கியம்.

அல்லாஹ் நற்செயல் புரிகின்ற இறை நம்பிக்கையாளனை விரும்புகிறான்.இறைவனின் நேசமே நமக்கு கிடைத்த பாக்கியமாகும்.ஏன் என்றால் அல்லாஹ் ஒரு மனிதனை விரும்பினால் வானவர்களிடத்திலும் அம்மனிதனை நேசிக்கும் படியும் சொல்கிறான்.இப்பாக்கியம் இறை நம்பிக்கையோடு நற் செயல் செய்யும் மனிதனுக்கே கிடைக்கின்றது.இதை பின் வரும் நபி மொழி உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ''அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!'' என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ''அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்'' என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகின்றது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி(3209) 

நற் செயலுக்கு இறையருள் தான் பரிசு.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை அவர்களது இறைவன் தனது அருளில் நுழைப்பான். இதுவே தெளிவான வெற்றி.(45:30)

இந்த வசனத்தில் நன்மையான காரியங்களை செய்வோருக்கு அல்லாஹ் தன் அருளை வழங்குவதாகவும் அதுதான் மிகப் பெரிய வெற்றி என்றும் கூறுகிறான்.ஆகவே நாம் அதிகமான நல் அமல்களை செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுவோமாக…………
நன்றி : பர்லின்  M.I.Sc (India) & http://rasminmisc.blogspot.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக