அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

இறையில்லத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் (பகுதி - 3)

அதே வேளையில் பள்ளிவாச­லில் நம் பார்வைக்கு சில அசுத்தங்கள் தென்பட்டால் அவற்றை விரைவாக அகற்றிட வேண்டும். நாமா இந்த அசுத்தத்தை ஏற்படுத்தினோம்? நமக்கென்ன? என்பது போல் சென்று விடக்கூடாது. மற்றவர்களின் இல்லத்தில் அசுத்தம் இருந்தால் இவ்வாறு அலட்சியமாக சென்று விடலாம். இறைவனின் இல்லத்தில் இந்த அலட்சியம் தகாது. அதனை தூய்மை செய்வதற்கு நாமே தகுதியானவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச­ல் (கிப்லாத் திசை) சுவரில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு, ”உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத்திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்.. தமது இடப் புறமோ தமது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
புகாரி 408, 409


ஒரு சமயம் நபியவர்கள் பள்ளிவாசல் சுவரில் அசுத்தத்தை காண்கிறார்கள். தான் ஒரு இறைத்தூதராயிற்றே என ஈகோ பார்க்காமல், தானே முன்வந்து அந்த அசுத்தத்தை சுரண்டி, தூய்மை செய்து, பிறகு இது போன்று அசுத்தம் செய்யாதீர்கள் என்று உபதேசிக்கின்றார்கள். இதைப்போன்று நாமும் பள்ளியினுள் அசுத்தத்தை கண்டால் உடன் அதை அகற்றிட முன்வரவேண்டும்.

குறிப்பு ; இந்த செய்தியில் இடப்புறம்     அல்லது காலடியில் எச்சிலை உமிழ அனுமதி கொடுக்கின்றார்கள் என்பதை வைத்து இப்போதுள்ள பள்ளியிலும் இவ்வாறு செய்ய அனுமதியுள்ளது என்று விளங்கி கொள்ளக் கூடாது.


நபியவர்கள் காலத்தில் உள்ள பள்ளிவாசல் மண் நிறைந்த பகுதியாகவே இருந்துள்ளன. காலடியில் எச்சிலை உமிழ்ந்தால் அந்த மண்ணை வைத்து மூடிவிட முடியும் என்ற நிலை இருந்தது. மேலும் பள்ளியில் எச்சில் உமிழ்வது குற்றம், தீமையான காரியம் என்றும், மீறி உமிழ்ந்தால் மண்ணால் அதனை மூடுவதே அதற்குரிய பரிகாரம் என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்


என் சமுதாயத்தாரின் நற்செயல்களும் தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. சாலையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை, அவர்களின் நற் செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன். பள்ளிவாசலில் (உமிழ்ந்து) மண்ணுக்குள் புதைக்கப் படாமல் இருக்கும் சளியை, அவர்களின் தீய செயல்களில் கண்டேன்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லி­ம்959


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.
அறிவிப்பவர் :  அனஸ் பின் மாலிக் (ரலி)
புகாரி 415


இந்த நிலை தற்போதுள்ள பள்ளிகளில் இல்லாததால் காலடியில் எச்சிலை உமிழக்கூடாது என்பதை புரிந்து கொள்ளலாம்.


பிறருக்கு இடையூறு அளித்தல்
நபியவர்கள் பள்ளிவாச­ல் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
அபுதாவூத் 1135


இறையில்லம் என்பது பலரும் ஒன்று திரளக்கூடிய இடம். ஒவ்வொருவரும் ஏதாவதொரு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பர். சிலர்கள் தொழுது கொண்டும், திருக்குர்ஆன் ஓதிக் கொண்டும் இருப்பார்கள். மற்ற சிலர்கள் ஹதீஸ்கள் படிப்பது, திக்ர் செயதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டிருப்பர். நம்மில் சிலர் மற்ற சிலருக்கு இடையூறு அளிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. பிறர் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நம்முடைய செயல் ஒரு தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது. இந்த ஒழுங்கை மஸ்ஜிதில் இருப்பவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.


இறையில்லத்தில் இன்னிசைகள்?
இன்று பள்ளிகள் தோறும் உங்கள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யவும், என்றும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் போது மனிதர்களின் தொடர்பை நிறுத்தி விடுங்கள் என்றும் பல்வேறு வாசங்களில் பள்ளிக்கு வரும் வாசகர்களை மொபைலை அணைத்துவிடுமாறு கெஞ்சுகின்றார்கள்.


பெரும்பாலும் யாரும் இதற்கு இசைவதில்லை. தொழுகையினூடே பல இன்னிசைகள் ரிங்டோன்களாக ரிங்காரமிடவே செய்கின்றன. அதிலும் பலர் சினிமாப் படப் பாடல்களையே ரிங்டோன்களாக அமைத்திருப்பதினால் இமாம் உட்பட பலரின் தொழுகைகளை அது பாழாக்கி விடுகின்றன. சில வேளைகளில் இமாம் இதன் தொந்தரவால் ஓரிரு ரக்அத்களை கூடுதல் குறைவாகவும் தொழவைத்து விடுகின்றார். இறையில்லம் இறைவன் துதிக்கப்பட வேண்டியமிடம். சினிமாப் பாடல்கள் ஒ­லிக்கப்பட வேண்டிய இடமல்ல. இறைவன் வெறுக்கின்ற இசையை அவனுடைய ஆலயத்திலேயே ஒலிக்க விடுவது ஒரு முஃமினுக்கு உகந்ததல்ல.


பெண்கள் நறுமணம் பூசுதல்
இஸ்லாமியர்களில் ஒரு சாரார் (ஆ­லிம்கள்? உட்பட) பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் பெண்கள் பள்ளிக்கு வரும் போது பேண வேண்டிய ஒழுங்கை கற்றுத்தருகின்றது. இதி­ருந்தே இவர்களின் இக்கருத்து இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை எளிதாக புரியலாம்.

பெண்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது என்றாலும், பள்ளிக்கு வருவதாக இருந்தால் நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது என்ற ஒழுங்கை விதிக்கின்றது. குறிப்பாக இரவு நேரத் தொழுகைக்கு பள்ளிக்கு வருவதாக இருந்தால் கண்டிப்பாக இதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும்போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.அறிவிப்பவர் : ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ர­லி) முஸ்­லிம் 758

”நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ர­லி)
முஸ்­லிம் 759


பெண்கள் நறுமணம் பூசிக் கொண்டு வெளியே வருவது பல்வேறு குழப்பங்களுக்கு ஆணிவேராய், அச்சாரமாய் அமைந்து விடுகின்றன.
பூ போன்ற அலங்காரங்களுடன் பொதுவாகவே வெளியில் வரக்கூடாது என்பது போல் அவைகளையும் பள்ளிக்கு வரும்போது  பெண்கள் தவிர்த்திட வேண்டும்


நன்றி : கடையநல்லூர் அக்ஸா  
                 & 
அப்துல் கரிம் மேளப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரி

தொடரும் இன்ஷாஅல்லாஹ்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக