அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இரவுத் தொழுகையின் சட்டதிட்டங்கள்

கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்தது நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1982),

இரவில் தொழப்படும் தொழுகைக்கு பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்து தொழும் தொழுகை) ஆகிய பெயர் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­லி), நூல் : புகாரீ (990)

இரவுத் தொழுகையின் நேரம்

இஷா தொழுகை முடிந்ததி­ருந்து பஜ்ர்  நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை முடித்ததி­ருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : முஸ்­லிம் (1216)

நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : புகாரீ (996)
 
ரக்அத்களின் எண்ணிக்கை

நம்முடைய நிலைமைகளுக்குத் தோதுவாக பின்வரும் ஏதேனும் ஒரு முறையில் நாம் இரவுத் தொழுகையை நிறைவேற்றலாம். பின்வரும் ஹதீஸ்கள் அனைத்தும் நபியவர்கள் பல நிலைகளில் நமக்கு தொழுது வழிகாட்டியுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

8+3 ரக்அத்கள்

ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ர­லி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன்  அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை என்று விடையளித்தார்கள்.    
அறிவிப்பவர் : அபூஸலமா,  நூல்கள் : புகாரீ (1147), 

12+1 ரக்அத்கள்

நபி (ஸல்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுவார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­லி),
நூல்கள் : புகாரீ (183), முஸ்­லிம் (1275)

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்கள் : புகாரீ (1138), முஸ்­லிம் (1276) 
 
10+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1339),திர்மிதீ (404),

8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில்  கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1341), திர்மிதீ (421),

9 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா(ர­லி),  அவர்களிடம் கேட்டேன்.அதற்கவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள் (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : மஸ்ரூக், நூல் : புகாரீ (1139)

7 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா(ர­லி) அவர்களிடம் கேட்டேன்.அதற்கவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள் (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக்,  நூல்கள் : புகாரீ (1139)

5, 3, 1 ரக்அத்கள்

வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும், யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.     அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ர­லி), நூல் : நஸயீ (1692), அபூதாவூத் (1212),

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மிகச் சிறந்ததாகும். ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது பள்ளிவாச­ல்தான் என்பது அவசியமில்லை. வீட்டிலும் ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம். நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மிகப் பெரும் சிறப்பைக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இரவுத் தொழுகையை இமாம் முடிக்கின்றவரை அவரோடு நின்று தொழுகின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை எழுதப்படுகின்றது.
அறிவிப்பவர் : அபூதர் (ர­லி)  நூல் : திர்மிதி (734)

தொழும் முறை
 
நபி (ஸல்) அவர்கள் ஐந்து, ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ அல்லது வார்த்தைகளைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ர­லி), நூல்கள் : நஸயீ (1695), 
 
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : நஸயீ (1698)

நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை. அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : நஸயீ (1699)

... நபி (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள், ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : நஸயீ (1700)

வித்ர் தொழுகை ஸலாம் கொடுத்தபிறகு ஓதும் துஆ

سُبْحاَنَ مَلِكِ الْقُدُّوْسُ

ஸுப்ஹான ம­க்கில் குத்தூஸ்

(பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூற வேண்டும். (நஸயீ 1681)

வீட்டில் தொழுவதே மிகச்சிறந்தது

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து ''உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள் அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ர­லி)  நூல்: புகாரி (731)

இரவுத் தொழுகை தவறி விட்டால்...

ஆயிஷா (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலி­யவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பக­ல் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்: முஸ்­லிம் (1358)
இரவுத் தொழுகையை பேணித் தொழல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர­லி) நூல் : புகாரி (30)

இரவுத் தொழுகை இருபது ரக்அத்கள் என வரையறுப்பது வழிகேடு
 
இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ர­லி)    நூல்: பைஹகீ (4391)

இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புப்படுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் உமர் (ர­லி) அவர்கள் தொடர்புடையதாகும்.

உமர் (ர­லி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார்.
நூல்: முஅத்தா (233)

இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள் யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ர­லி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ர­லி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை என்று தனது அல்மரிஃபா என்ற நூ­ல் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.  (நூல்: நஸபுர் ராயா, பாகம்: 2, பக்கம்: 154)

உமர் (ர­லி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்? எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகிறது,

மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ர­லி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலி­க் அவர்களின் அல்முஅத்தா என்ற நூ­ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபை பின் கஅப் (ர­லி), தமீமுத்தாரீ (ர­லி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ர­லி) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்   
நூல்: முஅத்தா (232)

உமர் (ர­லி) காலத்தில் மக்கள் தொழுதார்கள், உமர் (ர­லி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற இரண்டு செய்திகளில் உமர் (ர­லி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்?

மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ர­லி­) அவர்களுக்கு எங்கே தொடர்பு உள்ளது? உமர் (ரலி­) அவர்கள் 8+3 தொழுமாறு கட்டளையிட்டார்கள் என்பதில் தான் நேரடியான தெளிவான தொடர்பு உள்ளது என்பதோடு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப் போகிறது. எனவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸ்களும் இல்லை என்பதே சரியானதாகும்.

தராவீஹ் தொழுகையும் இரவுத் தொழுகையும் வேறு வேறா?

நபி (ஸல்) முன்னேரத்தில் ஒரு தொழுகையும் பின்னேரத்தில் ஒரு தொழுகையும் தொழுதுள்ளனர்; எனவே தராவீஹ் என்பது வேறு, தஹஜ்ஜுத் என்பது வேறு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்து என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸ்களி­ருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத் தான் பல நிலைகளில் தொழ வைத்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்அத்தமா என மக்கள் அழைக்கும் இஷா தொழுகையை முடித்ததி­ருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்.     நூல்: முஸ்­லிம் (1340)

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையி­ருந்து பஜ்ர் வரையிலும் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்று அன்னை ஆயிஷா (ர­லி) குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை என்றால் தராவீஹ் தொழுகை எங்கே? என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் செய்தி, நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதது பல பெயர்களில் உள்ள ஒரே தொழுகையைத் தான் என்பது தெளிவுபடுத்துகிறது.
 
நன்றி : மௌலவி கே. எம். அப்துந் நாஸிர் & DubaiTNTJ
ரமலான் மாத்தில் தொழப்படும் இரவுத்  தொழுகைக்கு பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றன.இந்த பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக