அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் (ரமளான் சிறப்பு தொடர் பகுதி - 1)

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இருவகைகளாக உள்ளன.
தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும். நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை. இவர்கள் ஒவ்வொரு நோன்பை விடுவதற்காக ஒரு ஏழைக்கு உணவளிப்பதே போதுமானதாகும்.

 1. தள்ளாத வயதினர்

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள். இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.நூல்: புகாரி 4505 இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால் தான் முழு விளக்கம் பெற முடியும்.


நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; விரும்பினால் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை!
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.
பின்னர், ரமளானை அடைபவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இதைத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொறுத்த வரை மாற்றப்பட்டாலும், தள்ளாத வயதினரைப் பொறுத்த வரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் எதை உணவாக அளிப்பது? எந்த அளவுக்கு அளிப்பது? இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறை எதையும் செய்யவில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது உணவாக உட்கொள்கின்றனரோ அதை வழங்க வேண்டும் என்பதால் தான் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் தினசரி மூன்று வேளை உணவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை உணவுப் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை உணவுப் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.

நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.

ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளித்தல் என்பது வசதியுள்ளவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் தான் சாத்தியமாகும். சாத்தியமில்லாதவர்கள் சமுதாயத்தில் கணிசமாக உள்ளனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். (பார்க்க: அல்குர்ஆன் 6:152, 7:42, 23:62, 2:286, 65:7, 2:223) ஒரு நபித்தோழர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த போது, அவரிடம் பரிகாரம் செய்ய ஏதுமில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள். (இந்த ஹதீஸ், நோன்பை முறிப்பதற்கான பரிகாரம் என்ற தலைப்பில் விரிவாகப் பின்னர் இடம் பெற்றுள்ளது.) மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலும், இந்த நபிவழியின் அடிப்படையிலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள், ஏழைக்கு உணவளிக்கவும் சக்தி பெறவில்லை என்றால் அவர்கள் எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 2839, 4423

இறைவன், அடியார்கள் விஷயத்தில் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முதுமையின் காரணமாகத் தான் நோன்பை விட்டு விட்டார்கள் என்றால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர் எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

 2. நோயாளிகள்

 நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்குர்ஆன் 2:184

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும். நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும். இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள். பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை. ஆயினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.

நன்றி : நன்றி : ஆன்லைன் பீ.ஜே , planetislam

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக