அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 4 ஜனவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -6)

நபிகள் நாயகத்தின் அரண்மனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர். 

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள். நூல் : புகாரி 3906


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

'
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். நூல் : புகாரி 382, 513, 1209

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5X5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!பேரீச்சை மர ஓலையால் வேயப்பட்டதாகத் தான் அந்த அறை கூட அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குக் கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது; திறந்த வாசல் தான். இரவில் பாயையே வாசல் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.

மாமன்னரை விட்டு விடுங்கள்! இதை வாசிக்கின்றவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவராவது இத்தகைய ஒரு வீட்டில் வசிக்க ஒப்புவாரா? தனது வீட்டை விட ஆயிரம் மடங்கு பெரிய இடத்தைச் சமுதாயத்துக்கு வழங்கிய ஒருவர் இப்படி வசிக்க விரும்புவாரா?இந்த வரலாற்று நிகழ்ச்சி நபிகள் நாயகத்தின் வீட்டின் பரப்பளவை மட்டும் கூறவில்லைஅத்துடன் மற்றொரு செய்தியையும் சேர்த்துக் கூறுகிறது.

'
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரம் பணியும் போது நீங்களே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற சந்தேகத்தை நீக்குவதற்காக 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்று ஆயிஷா (ரலி) விளக்கம் தருகிறார்.வீட்டில் விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் தான் விரலால் குத்துவதை வைத்து ஸஜ்தா செய்யப் போகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கும் கீழே ஒரு எளிமை இருக்க முடியுமா?

பாரசீக ரோமாபுரி மன்னர்களின் அரண்மனைகளில் தொங்கிய சரவிளக்குகள் பற்றி இங்கே கூறப்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உதவும் மண்சிட்டிகளில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி எரிக்கப்படும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். இந்த விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் இருந்தால் காய்ந்த ரொட்டியைத் தொட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்களே?ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை. 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள். நூல் : புகாரி 729

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.ஆனாலும் அரசுப் பணத்தில் எதையும் தொடுவதில்லை என்ற கொள்கையின் காரணமாக கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன

தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக