அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 10 ஜனவரி, 2013

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

கேள்வி : ...உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15 என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறை வசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும். -ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம்


பதில் : திருக்குர்ஆன் வசனம் 16:15-க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழாக்கம் தவறானதாகும். 'உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக' என்று பொருள் கொள்ள முடியாது. 'உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க' என்பது தான் அதன் சரியான அர்த்தமாகும்.

நாம் வாழ்கின்ற இப்பூமி பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கும் ஒரே அளவுடையதாகவோ, ஒரே கனம் உடையதாகவோ இல்லை. மேலடுக்கு மென்மையாகவும் கீழடுக்கு கடினமாகவும் உள்ளன.இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு உருண்டையை பூமி சுற்றும் வேகத்திற்கு சுற்றினால் மென்மையான பகுதி வேகமாகவும், கடினமான பகுதி குறைந்த வேகத்திலும் சுற்றும். இதனால் மேல் பகுதி மையப் பகுதியுடன் உள்ள ஈர்ப்பு சக்தியை இழந்து விடும். மேலே உள்ள பொருட்கள் பறக்க ஆரம்பித்து விடும்.
 
ஒரு பலகையின் மீது ஒரு அட்டையை வைத்து அப்பலகையை வேகமாகத் தள்ளினால் பலகைக்கு எதிர் திசையில் அட்டை பறந்து வந்து விழுவதை நீங்கள் காணலாம். இரண்டும் சமமான கனமுடையதாக இல்லாததும் இரண்டுக்கும் இடையே இணைப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.பலகைக்கு மேல் வைக்கப்பட்ட அட்டையையும், பலகையையும் இணைக்கும் வகையில் நான்கு ஆணிகளை அறைந்து இணைத்து விட்டு பலகையை எவ்வளவு வேகமாகத் தள்ளிவிட்டாலும் பலகையின் வேகத்திலும், திசையிலும் அட்டையும் சேர்ந்து செல்லும்.அது போல் தான் பூமியின் மென்மையாக பகுதியையும், கடினமான பகுதியையும் இணைக்கும் வகையில் ஆணிகளைப் போல் மலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதனால் தான் அனைத்து அடுக்குகளும் ஒரே சீராகச் சுழல முடிகிறது.


மலைகள் இல்லாவிட்டால் பூமியின் மேற்பகுதி, பூமியின் கீழ்ப்பகுதிக்கு எதிர்த் திசையிலும், மையப் பகுதியின் பிடிப்பை விட்டு விலகியும் தாறுமாறாகச் சுற்றும். நாமெல்லாம் பந்தாடப்படுவோம். இந்த மாபெரும் அறிவியலைத் தான் அவ்வசனம் கூறுகிறது.

P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலிலிருந்து......


0 கருத்துகள்:

கருத்துரையிடுக