அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 17 ஏப்ரல், 2013

எஸ்.எஸ்.எல்.சி. கணித வினாக்கள் கடினம்: மாணவர்களுக்கு 10 மார்க் போனஸ்

சென்னை: 10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்கள் கணித தேர்வு எழுதினர். தேர்வில் ப்ளூ பிரிண்ட்டுக்கு மாறாக வினாத்தாள் இருந்ததால் அதைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 மதிப்பெண்களுக்கான மேட்ரிக்ஸில் வழக்கமாக ஒரு வினா கோட்கப்படும். ஆனால் இம்முறை 2 வினாக்கள் கேட்கப்பட்டன. மேலும் அல்ஜீப்ராவில் வழக்கமாக கேட்கப்படும் 3 வினாக்களுக்கு பதில் 2 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. இது தவிர 5 மதிப்பெண்கள் பிரிவில் 2 வினாக்கள் கடினமாக இருந்ததால் அவற்றுக்கு விடை எழுத கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கட்கிழமை துவங்கியது. இந்நிலையில் கணக்கு தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸாக வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தீர்மானித்துள்ளது. இது குறித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரயர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விடைக் குறிப்பாணையில் கூறியிருப்பதாவது, மேட்ரிக்ஸ், முக்கோணவியல் பாடப் பிரிவுகளில் ப்ளூ பிரிண்டுக்கு மாறாக கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிரிவு 3-ல் உள்ள அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து அதில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு விடைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். அதாவது ஒரு மாணவன் 0, 1, 2, 3, 4 என மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவருக்கு 5 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து என்று அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பிரிவில் உள்ள 9 விடைகளுக்கும் விடையளித்த மாணவர்களுக்கு மட்டும் போனஸ் மதிப்பெண்கள் அளிப்பதா அல்லது ஓரிரு வினாக்களுக்கு விடையளித்தவர்களுக்கும் அளிக்கலாமா என்பது புரியாமல் ஆசிரியர்கள் குழம்பி வருகின்றனர்.நன்றி :thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக