அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -15)

அவர்களைப் பொருத்தவரை  பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகவேத் தோன்றினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவரை அற்பமாகக் கருதிய நபித் தோழர்கள் அவரது மரணத்தை நபிகள் நாயகத்திடம் தெரிவிக்காததால் அவர் இறந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியவில்லை. ஒரு நாள் அவரைப் பற்றி நினைவு வந்து 'அவர் எங்கே?' என விசாரித்தனர். அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 'அப்போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். பின்னர் 'அவரது அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டி யதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.  
நூல் : புகாரி 1337

'இறந்தவர் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவர் என்பதால், இவரைப் போன்ற மதிப்பற்றவர்களின் மரணத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?' என எண்ணி நபித் தோழர்கள் அவரை அடக்கம் செய்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை ஏற்க முடியவில்லை. 'எனக்கு ஏன் அப்போதே தெரிவிக்கவில்லை?' எனக் கேட்கிறார்கள்.அறிவித்திருந்தால் அவரை நல்லடக்கம் செய்யும் பணியில் நானும் ஈடுபட்டிருப்பேனே என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக்காக இவ்வாறு கூறவில்லை. மாறாக அவரை நல்லடக்கம் செய்த இடம் எதுவென விசாரித்து அறிந்து அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைக் காண்கிறோம். அவர்களைப் பொருத்தவரை பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகத் தோன்றியதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்து கொள்ள முடிந்தது.

அனஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் பணியாளராக இருந்தார். அவரது பாட்டி முளைக்கா (ரலி) தமது இல்லத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினார். அங்கே சென்று அவர் அளித்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கொண்டார்கள். முளைக்கா (ரலி) வசதி படைத்தவர் அல்லர். சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவரும் அல்லர். மிக மிகச் சாதாரண நிலையில் உள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே தொழுதார்கள். தொழுவதற்குத் தகுதியான பாய் கூட அவ்வீட்டில் இருக்கவில்லை. நீண்ட நாட்கள் பயன் படுத்தியதால் கறுப்பு நிறமாக மாறிவிட்ட பாய் தான் அங்கே இருந்தது. அதில் தான் தொழுதார்கள். நூல் : புகாரி 380, 860

பாய் கூட இல்லாத அளவுக்குப் பரம ஏழை தான் முளைக்கா (ரலி). அவர் அளித்த விருந்து எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து ஊகிக்கலாம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட ஒதுக்கித் தள்ளும் நிலையில் இருந்த ஏழைக் குடிசையின் விருந்தை ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். அவர்கள் எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருந்தார்கள். சாதாரண மனிதனும் கூட தன்னை விட அற்பமானவர்களை ஒதுக்கித் தள்ளுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த மாமனிதர் இதிலும் வெற்றி பெறுகிறார்கள்.ஆன்மீகத் தலைவர்களானாலும், அரசியல் தலைவர்களானாலும், அதிகாரம் படைத்தோராக இருந்தாலும் பிரமுகர்களையும், சாமானியர்களையும் பாரபட்சமாக நடத்துவதைக் காண்கிறோம்.அதிகாரம் படைத்தோர், அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாலும், 'நாங்கள் பக்குவம் பெற்றவர்கள், துறந்தவர்கள்' என்றெல்லாம் அவர்கள் தம்மைப் பற்றி கூறிக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாமான்யர்களையும், பிரமுகர்களையும் பாரபட்சமாக நடத்துவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

'மற்ற மனிதர்களை விட தாங்கள் பண்பட்டவர்கள்; பக்குவம் அடைந்தவர்கள்' என்று ஆன்மீகத் தலைவர்கள் தம்மைப் பற்றி அறிவித்துக் கொள்கிறார்கள். இது உண்மை என்றால் அவர்களின் பார்வையில் பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகவே தென்பட வேண்டும்.ஆனால் இவ்வாறு பாரபட்சம் காட்டுவதில் ஆன்மீகத் தலைவர் என்று தம்மைக் கூறிக் கொள்வோர், மற்றவர்களை விட மிஞ்சி நிற்பதை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம்.அவர்களின் கதவுகள் அதிபர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், புகழ் பெற்றவர்களுக்கும் தான் திறக்கப்படுகின்றன. மற்ற சாமான்யர்களுக்குக் கூட்டத்தோடு கூட்டமாக தர்ம தரிசனம் தான் கிடைக்கின்றது.அது போல ஆன்மீகத் தலைவர்கள் எத்தகைய மக்களைத் தேடிச் செல்கிறார்கள்? கோடீஸ்வரர்களைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களது வணிக நிறுவனங்கள், இல்லங்களைத் திறந்து வைக்கச் செல்கிறார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதற்காக அல்லாமல் இவர்கள் எந்தக் குடிசையிலும் கால் வைத்திருக்க மாட்டார்கள்.இவ்வளவு எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையறியாமல், தம் கவனத்துக்கு வராமல் தம்மால் மக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறார்கள்.

மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அவர்கள் நோய் வாய்ப்பட்ட போது இது பற்றி மக்களுக்கு அவர்கள் செய்த பிரகடனம் அவர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டதாகும். அந்த நிகழ்ச்சியை ஃபழ்லு என்பார் பின் வருமாறு விவரிக்கிறார்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது. 'என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக' என்றார்கள். அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன். பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். (நபிகள் நாயகம் (ஸல்) மரணப் படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழுமி யிருந்தனர்.) 'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள். நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இப்படிச் சொல்லக் கூடிய துணிவு இன்றைய உலகில் ஒருவருக்கும் கிடையாது. என்னிடம் யார் கணக்குத் தீர்க்கிறாரோ அவர் தான் மற்றவர்களை விட எனக்கு நெருக்கமானவர் என்று இன்றைக்கு எவரேனும் கூற முடியுமா? இந்த மாமனிதருக்குத் தான் இவ்வாறு பிரகடனம் செய்ய முடிகின்றது.இவ்வளவு தெளிவாகப் பிரகடனம் செய்த பிறகும், மக்களுக்கு இருந்த தயக்கம் முழுவதையும் நீக்கிய பிறகும் 'என்னை அடித்தீர்கள்; ஏசினீர்கள்' என்றெல்லாம் ஒருவர் கூடக் கூறவில்லை. பொது நன்மைக்காக வாங்கிய கடனை அவர்கள் மறந்து விட்டார்கள். அது மட்டுமே முறையிடப்பட்டது. இம்மாமனிதரால் எந்த மனிதருக்கும் முடியளவு கூட பாதிப்பு ஏற்படவே இல்லை.

இந்த நூல் நெடுகிலும் நபித் தோழர்கள் என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சமுதாயத்தில் சில பேர் நபிகள் நாயகத்துக்குத் தோழராக இருந்திருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். நபிகள் நாயகத்தின் மார்க்கத்தை ஏற்று அவர்கள் அணியில் சேர்ந்த ஒவ்வொருவரும் தமது தோழர்கள் என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். எந்த மன்னரும் தனது குடிமக்கள் அனைவரும் தனது நண்பர்கள் என அறிவித்ததில்லை. தொண்டர்கள் என்று தான் அறிவித்திருக்கிறார்கள்.எந்த ஆன்மீகத் தலைவரும் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை தோழர்கள் என அறிவித்தது கிடையாது. மாறாக அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சீடர்கள் என்றே அறிவிக்கப்படுகின்றனர்.தொண்டர்களும் சீடர்களும் இல்லாத அனைவரையும் தோழர் என அழைத்த ஒரே தலைவரும் ஒரே மன்னரும் ஒரே ஆன்மீகத் தலைவரும் நபிகள் நயாகம் மட்டுமே. இதனால் தான் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களை ஏற்ற அனைவரையும் முஸ்லிம்கள் இன்றளவும் தோழர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.இவ்வாறு அறிவித்து தம்மை மற்றவர்களுக்குச் சமமாகக் கருதி அதைப் பிரகடனம் செய்தவர் புகழுக்காகவோ மக்களின் செல்வாக்குப் பெறவோ பதவியை ஏற்றிருக்க இயலுமா?

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது எனத் தெளிவான கட்டளையும் பிறப்பித்திருந்தார்கள். தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று கடுமையான முறையில் எச்சரிக்கையும் செய்திருந்தார்கள்.

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள். நூல் : அஹ்மத் 12093 இதே கருத்து அஹ்மத் 15726, 15717 ஆகிய ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

'
கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்' என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். நூல் : புகாரி: 3445

தம்மை எல்லை மீறிப் புகழக் கூடாது என்று மக்கள் மன்றத்தில் கடுமையாக எச்சரிக்கை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியின் மூலம் புகழடைய விரும்பியிருப்பார்கள் என்று கருத இயலுமா?
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக