அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -14)

மக்களுடன் கலந்து மக்களில் ஒருவராக இருப்பதையே தேர்வு செய்து கொண்டார்கள்.

ஆன்மீகத் தலைவராகவும், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உயர் பண்பின் காரணமாகவே மாமனிதர் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.நாகரீகம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் கூட ஆன்மீகத் தலைவரோ, அரசியல் தலைவரோ, பெரிய தலைவரோ, சிறிய தலைவரோ இவ்வளவு சகஜமாக சாதாரண மக்களுடன் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற நம்பகத் தன்மை நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஸ்மாயீன் வழித் தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்' என்று கூறினார்கள். மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்' என்றார்கள். நூல் : புகாரி 2899, 3507, 3373

இரண்டு அணிகள் அம்பெய்து விளையாட்டில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம். அவ்வாறு ஒதுங்காமல் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். தாமும் ஒரு அணியில் சேர்ந்து சாதாரண மனிதர் நிலைக்கு இறங்கி வருகிறார்கள். எதிரணியினரின் மனம் ஒப்பாததன் காரணமாகவே அதிருந்து விலகிக் கொள்கின்றனர்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

மிக்தாத் (ரலி) என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள். நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி 'இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம்' என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசல் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.ஒரு நாள் என்னிடம் ஷைத்தான் வந்து விட்டான். நான் என் பங்கை அருந்தினேன். 'முஹம்மது அவர்கள் அன்ஸார்களிடம் செல்கிறார்கள்; அன்ஸார்கள் நபிகள் நாயகத்தைக் கவனிப்பார்கள்; எனவே இந்த மிடறுகள் அவர்களுக்குத் தேவைப்படாது' என்று எனக்குள் கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திற்குரிய பங்கையும் அருந்தி விட்டேன். அது வயிற்றுக்குள் சென்றதும் தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டேன்.

'நீ என்ன காரியம் செய்து விட்டாய்! முஹம்மது அவர்களின் பங்கையும் அருந்தி விட்டாயே! அவர்கள் வந்து பார்க்கும் போது தமது பாலைக் காணாவிட்டால் உனக்கு எதிராகப் பிரார்த்தனை செய்து விடுவார்களே! அவ்வாறு பிரார்த்தனை செய்து விட்டால் நீ அழிந்து விடுவாயே! உனது இவ்வுலக வாழ்வும், மறுமை வாழ்வும் நாசமாகி விடுமே' என்று ஷைத்தான் எனக்குள் பலவாறாக எண்ணங்களை ஏற்படுத்தினான்.என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதனால் காலைப் போர்த்தினால் தலை தெரியும். தலையைப் போர்த்தினால் கால் தெரியும். எனக்குத் தூக்கமும் வரவில்லை. எனது இரு நண்பர்களும் நான் செய்த காரியத்தைச் செய்யாததால் தூங்கி விட்டார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். வழக்கம் போல் ஸலாம் கூறினார்கள். பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பின்னர் தமது பானத்தை நோக்கி வந்தார்கள். அதைத் திறந்து பார்த்ததும் அதில் எதையும் காணவில்லை. உடனே தமது தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள் 'இப்போது பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நான் அழியப் போகிறேன்' என்று நினைத்தேன். அவர்கள் 'இறைவா! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகத் தந்தவருக்கு நீ பருகச் செய்வாயாக!' என்று வழக்கம் போல் பிரார்த்தனை செய்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போர்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு, கத்தியை எடுத்துக் கொண்டு ஆடுகளை நோக்கிச் சென்றேன். அந்த ஆடுகளில் நன்கு கொழுத்ததை அறுத்து நபிகள் நாயகத்திற்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அந்த ஆடு மடியில் பால் சுரந்து நின்றது. மற்ற ஆடுகளும் மடியில் பால் சுரந்து நின்றன. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நுரை பொங்கும் அளவுக்கு பால் கறந்தேன். அதை நபிகள் நாயகத்திடம் கொண்டு சென்றேன். 'உங்கள் பங்கை நீங்கள் பருகி விட்டீர்களா?' என்று அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்' என்றேன். அவர்கள் அருந்திவிட்டு மீதியைத் தந்தார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்' என்று மீண்டும் கூறினேன். மீண்டும் அருந்திவிட்டு என்னிடம் தந்தார்கள். அவர்களின் பசி அடங்கியது என்பதை அறிந்து கொண்டதும், அவர்களின் பிரார்த்தனைக்குரியவனாக நான் ஆகிவிட்டதை உணர்ந்த போது, நான் விழுந்து விழுந்து சிரித்தேன். நான் கீழே விழுந்து விடுவேனோ என்ற அளவுக்குச் சிரித்தேன். 'மிக்தாதே! ஆடையைச் சரிப்படுத்துவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.'அல்லாஹ்வின் தூதரே! இப்படி இப்படி நடந்து விட்டேன்' என்று அவர்களிடம் விளக்கினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ்வின் அருள் தவிர வேறில்லை. இதை முன்பே என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நமது நண்பர்கள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே' என்றார்கள். நூல் : முஸ்லிம் 3831

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராக இருக்கும் நிலையிலும் ஆட்டில் கறக்கும் பாலே அவர்களின் உணவாக இருந்ததுள்ளது அவர்களின் தூய வாழ்க்கைக்குச் சான்றாகவுள்ளது.தம்மிடம் வசதி இல்லாத நிலையிலும் மூன்று நபர்களைப் பல நாட்கள் தமது பொறுப்பில் சுமந்து கொண்டது அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்றாகவுள்ளது.தமது ஆடுகளில் கறந்த பாலின் ஒரு பகுதியைத் தமக்குத் தராமல் அருந்தியவர்கள் மீது அவர்களுக்குக் கோபமே வரவில்லை என்பது இந்த மாமனிதரின் மகத்தான நற்பண்புகளைக் காட்டுகிறது.'எனக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தது தான் அவர்களின் அதிகபட்ச கண்டனமாக இருந்தது. நபிகள் நாயகத்திற்கு உணவளித்தால் இறைவன் நமக்கு உணவளிப்பான் என்று ஆர்வமூட்டினார்களே தவிர யார் தனது பங்கை அருந்தியவர் என்று கூட விசாரிக்கவில்லை.தம்மைப் பட்டினி போட்டவர்களை இவ்வளவு மென்மையாக நல்வழிப்படுத்தியது அவர்களின் மகத்தான நற்குணத்திற்கு மற்றொரு சான்றாகவுள்ளது.தமக்கு உணவளித்தவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்து விட்டார்கள். எனவே, எப்படியாவது அவர்களுக்கு உணவளித்து அவர்களின் பிரார்த்தனையைப் பெற வேண்டும் என்று மிக்தாத் (ரலி) எண்ணி நபிகள் நாயகத்திற்குச் சொந்தமான ஆட்டை அறுக்கத் துணிகிறார். எவ்வளவு இடையூறு செய்தாலும், இழப்பை ஏற்படுத்தினாலும் நபிகள் நாயகத்திற்குக் கோபமே வராது என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு அவர்களின் பண்பாடு அமைந்துள்ளது.

இரவில் பால் கறந்து விட்டதால் ஆட்டில் மீண்டும் கறக்க முடியாது என்று எண்ணியே அவர் ஆட்டை அறுக்கத் துணிகிறார். ஆனால் அல்லாஹ்வின் அருளால் மூன்று ஆடுகளின் மடிகளிலும் பால் சுரந்திருப்பதைக் கண்டு அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். செய்த தவறையும் செய்து விட்டு அவர்கள் முன்னிலையில் விழுந்து விழுந்து இந்த நபித் தோழரால் சிரிக்க முடிகிறது. அப்போது கூட இந்த மாமனிதருக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரிக்கும் போது ஆடை விலகுவதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள்.வழக்கத்துக்கு மாறாக அல்லாஹ்வின் அருளால் மீண்டும் ஒரு முறை பால் கறக்கப்பட்டு தமக்குத் தரப்படுகிறது என்பதை அறிந்தவுடன் மற்ற இரு நண்பர்களையும் எழுப்பியிருக்கக் கூடாதா? என்று அக்கறையுடன் விசாரித்தது அவர்களின் நற்பண்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) நடந்து கொண்டது போல் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் கூட நடக்க முடியுமா? என்று கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த மாமனிதரின் மகத்துவம் நமக்கு விளங்கும்.

யார் என்று தெரியாதவர்களைப் பல நாட்கள் தங்க வைத்து கவனிக்க மாட்டோம். நமது உணவையும் சாப்பிட்டு விட்டு நம்மைப் பட்டினி போட்டால் சும்மா இருக்க மாட்டோம். செய்வதையும் செய்து விட்டு நம் முன்னே சிரித்தால் அதையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடமே காணப்பட முடியாத இந்தப் பண்பாடு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் காணப்படுவதால் தான் உலகம் அவர்களை மாமனிதர் எனப் போற்றுகிறது. 
 
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன்' எனக் கூறினார்கள்
 நூல் : பஸ்ஸார் 1293

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுடன் கலந்து மக்களில் ஒருவராக இருப்பதை தாமாக வேண்டி விரும்பியே தேர்வு செய்து கொண்டார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்ததால் மக்களால் அவர்களுக்குப் பலவிதக் கஷ்டங்கள் ஏற்பட்டன என்பதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாகத் தங்கும் வகையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தால் மக்கள் சகஜமாக அவர்களை நெருங்க முடியாது. இதனால் அவர்களின் சிரமம் குறையும் என அவர்கள் மீது அக்கரை கொண்ட சில நபித்தோழர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், நபிகள் நாயகமோ வேண்டி விரும்பியே இதைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறி விடுகிறார்கள். பதவியோ, அதிகாரமோ அவர்களை எள்ளளவும் பாதித்து விடவில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மக்களோடு மக்களாகப் பழகினார்கள் என்றால் குறைந்த பட்சம் தினசரி ஐந்து தடவை யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்தித்து விடலாம் என்ற அளவுக்கு மக்களோடு கலந்திருந்தார்கள்.இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளில் ஐந்து நேரத் தொழுகை முதன்மையானது என்பதை அனைவரும் அறிவர். அந்தத் தொழுகையைப் பள்ளிவாசலில் கூட்டாக நிறைவேற்றுமாறு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தக் கூட்டுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் தாம் தலைமையேற்று நடத்தி வந்தார்கள். தினமும் பள்ளி வாசலுக்கு ஐந்து தடவை வருவார்கள். தினமும் ஐந்து தடவை மக்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கடைசிக் கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் கூட அவர்களை நூறு தடவைக்குக் குறையாமல் பார்த்திருப்பார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பத்து ஆண்டுகள் கூட்டுத் தொழுகை நடத்தினார்கள். பத்து ஆண்டுகளும் விடாமல் பள்ளிவாசல் வந்தவர் நபிகள் நாயகத்தை 18 ஆயிரம் தடவை பார்த்திருக்க முடியும்.வெளியூர்ப் பயணம் சென்ற காலத்தைக் கழித்தால் கூட பெரும்பாலானவர்கள் பதினைந்தாயிரம் தடவைக்கு மேல் நபிகள் நாயகத்தைப் பார்த்திருக்கிறார்கள்.
 
உலக வரலாற்றில் இவ்வளவு அதிகமான சந்தர்ப்பங்களில் மக்களைச் சந்தித்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.மாபெரும் ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) பார்வையில் சாமான்யரும், பிரமுகரும் சமமாகவே தென்பட்டனர். அவர்களின் வரலாற்றில் இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகளைக் காணலாம்.
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக