அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 10 மே, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -18)

மிக எளிதில் மக்களை ஏமாற்ற உதவும் ஆன்மீகத் தலைமையை எவ்வாறு அப்பழுக்கற்றதாக ஆக்கிச் சென்றார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட போர்களில் உஹதுப் போரும் ஒன்றாகும்.இப்போரில் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இறைத் தூதரைக் காயப்படுத்தி பற்களையும் உடைத்தவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்' என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்ற குர்ஆன் வசனம் (3:128) அப்போது அருளப்பட்டது
 நூல் : முஸ்லிம் 3346.

வேதனைப்படுத்தப்பட்டவர்கள் எதிரிகளைக் குறித்து இவ்வாறு கூறுவது சாதாரணமான ஒன்று தான். இறைத் தூதரைக் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் பயன்படுத்திய வாசகத்தை இந்த வகையில் குறை கூற முடியாது. 'தனக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகவும் தன்னுடன் மோதியவர்களைச் சபித்தே அழித்து விடுவேன் என்பது போன்ற ஆன்மீக ஆணவமும் இந்தச் சொற்றொடரில் இல்லை. இது ஒரு வேதனையின் வெளிப்பாடு தானே தவிர வேறு இல்லை' என்று தான் நாம் நினைப்போம். ஆனால், இறைவன் இதை விரும்பவில்லை.இறைத் தூதரைக் காயப்படுத்தினால் காயப்படுத்தியவர்கள் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என்பதில்லை. இறைவன் நாடினால் இத்தகைய கொடூரமானவர்களுக்கும் இவ்வுலகில் வெற்றியை வழங்குவான். மறுமையில் தான் இவர்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்.இறைத் தூதரைத் தாக்குவதோ, ஆதரிப்பதோ இவ்வுலகின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. அது இறைவனாக எடுக்கின்ற முடிவாகும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதை போதிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர் இந்த அடிப்படைக்கு எதிரானது என்று இறைவன் கருதுகிறான். தமக்கு இறைத் தன்மை உள்ளது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தா விட்டாலும், வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தாலும் இறைவன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூட விரும்பவில்லை. தனது அதிகாரத்தில் தலையிடுவதாக இறைவன் எடுத்துக் கொள்கிறான்.எனவே தான் முஹம்மதே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவுறுத்துகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட வேதனையை விட அவர்கள் கடவுளாகக் கருதப்படும் வாசலை முழுமையாக அடைக்க வேண்டும் என்பதில் தான் இறைவன் கவனம் செலுத்தினான்.

'யாராவது இவரிடம் மோதினால் தோல்வி நிச்சயம்' என்ற நிலை ஏற்பட்டால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற அதிகாரம் இறைத் தூதரிடமும் உள்ளது என்ற நிலை ஏற்பட்டுவிடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலும் அதை விட முக்கியமான இந்த அறிவுரையை வழங்குகிறான்.'இவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்' என்று வேதனை தாள முடியாமல் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் இறைவனின் இந்தக் கட்டளையையும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.என்னைத் தாக்கியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் என நான் கூறியது தவறு தான். இதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும். என்னை என் இறைவன் கண்டித்து விட்டான் என்று அந்த வேதனையிலும் மக்களிடம் தெரிவித்து விடுகிறார்கள்.(குர்ஆன் என்பது அவர்களாகக் கற்பனை செய்து கொண்டதாக இருந்தால் இந்த வேதனையான நேரத்தில் இப்படிக் கற்பனை செய்து தன்னைத் தானே எவரும் கண்டித்துக் கொள்ளவே மாட்டார். இயல்பாகவே இது சாத்தியமாகாது. திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது தனி விஷயம்.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) மூலம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சில ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனாலும், ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட நான்கு பெண் மக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருந்தனர்.மதீனாவுக்கு வந்து அங்கே மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமது பாட்டனார் இப்ராஹீம் நபியின் பெயரை அக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் எல்லா தந்தையரும் மகிழ்ச்சியடைவதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால், ஆண் குழந்தையைக் கொடுத்த இறைவன் சிறு வயதிலேயே அக்குழந்தையைத் தன் வசம் எடுத்துக் கொண்டான்.  
பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார். நூல் : அஹ்மத் 17760இக்குழந்தை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைத்திருந்த அன்பைப் பின் வரும் ஹதீஸிருந்து நாம் அறியலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது...

இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. 'அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா?' என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது இரக்க உணர்வாகும்' என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். 'கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்' என்றும் கூறினார்கள். நூல் : புகாரி : 1303

தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது. சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது.அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்ய மின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில் தான் இருந்தார்கள்.ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.  
நூல் : புகாரி: 1043, 1061, 1063

இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.ஒரு அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.இதைக் கேட்கின்ற அவர் முகத்தில் தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமானவர்களாகவே உள்ளனர். தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் அரசியல் தலைவருக்கே இந்த வார்த்தை இனிக்கிறது என்றால் ஆன்மீகத் தலைமையை என்ன வென்பது?ஆனால், இந்த ஆன்மீகத் தலைவரோ இதைக் கேட்டு அருவருப்படைகிறார். நானே நாளை மறையும் போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டாலும் அதற்கு என் மரணம் காரணம் அல்ல என்ற கருத்தையும் உள்ளடக்கி அறிவுரை கூறுகிறார். அதுவும் தமது சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மக்களுக்கு ஏற்பட்ட அறியாமைத் துன்பத்தை அகற்றிட முன்னுரிமை தருகிறார். உலக வரலாற்றில் இத்தகைய அற்புத மனிதரை யாரேனும் கண்டதுண்டா?தேடித் தேடிப் பார்த்தாலும் எள்ளின் முனையளவு கூட மக்களை ஏமாற்றாதவராக இவர் மட்டும் தான் தென்படுகிறார். ஏமாற்றுவதற்கு எல்லா விதமான வாய்ப்புகள் இருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறார்.

அன்பு மேலிட்டு அல்லது அறியாமையின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் வரம்பு மீறிப் புகழும் விதமாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவதுண்டு. அல்லது வரம்பு மீறி நடந்து கொள்வதுண்டு. இது போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம் மக்களை எச்சரிக்காது இருந்ததில்லை. தம்மை மனித நிலைக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று அறிவுரை கூறி அவர்களின் அறிவை மேம்படுத்தாமல் இருந்ததில்லை.

நாம் மதிக்கின்ற ஒரு மனிதர் இன்று மழை பெய்யும் போல் தெரிகிறதே எனக் கூறுவார். பல நேரங்களில் அவர் கூறுவது போல் நடக்கா விட்டாலும் சில நேரங்களில் அவ்வாறு நடந்து விடுவதுண்டு. 'நீங்கள் கூறியவாறு மழை பெய்து விட்டதே' என்று அவரிடம் நாம் குறிப்பிடுவோம். அவர் எதைக் கூறினாலும் அது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் நாம் அவ்வாறு கூறுவதில்லை. இந்த முறை அவர் கூறியது போல் தற்செயலாக நடந்து விட்டது என்று உணர்ந்து தான் இவ்வாறு கூறுகிறோம்.இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் அறிவித்த அனைத்தும் நிறைவேறின. இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் மனிதர் என்ற முறையில் ஊகம் செய்து கூறிய விஷயங்களில் சில விஷயங்கள் நடந்து விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்தின் தோழர்கள் 'இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்' என்ற கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.மரியாதை வைத்திருக்கின்ற மனிதரைப் பற்றி நாம் கூறும் சொல்லை விட நபித் தோழர்களின் இந்தக் கூற்று இறை நினைவுக்கு நெருக்கமானதாகும். ஏனெனில் 'நீங்கள் கூறியபடி நடந்து விட்டதே' என்று தான் நாம் குறிப்பிடுவோம். 'அல்லாஹ்வும், நீங்களும் நினைத்த படி' எனக் கூற மாட்டோம். ஆனால், நபித்தோழர்கள் 'அல்லாஹ் நினைத்தபடியும் நீங்கள் நினைத்தபடியும் நடந்து விட்டது' எனக் கூறி அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தினார்கள்.அல்லாஹ்வை முதல் கூறி விட்டு அதன் பின்னர் நபிகள் நாயகத்தைக் கூறியதாலும், அந்த மக்களின் இதயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெய்வீக அம்சம் கொண்டவர்கள் அல்ல என்பது ஆழமாகப் பதிந்திருந்ததாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தடை செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது.

'ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். 'முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்' என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன் என்பது இதன் பொருள். ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது இவ்வாறு கூறுவது வழக்கம்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு 'அது என்ன?' என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பாதிரியார் 'நீங்கள் சத்தியம் செய்யும் போது கஃபாவின் மீது ஆணையாக எனக் கூறுகிறீர்களே அது தான்' என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஃபாவின் எஜமான் மீது ஆணையாக' எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். பின்னர் அந்தப் பாதிரியார் 'முஹம்மதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்' என்று கூறினார். 'சுப்ஹானல்லாஹ்' என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அது என்ன?' என்ற கேட்டார்கள். 'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்' என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனி மேல் யாரேனும் 'அல்லாஹ் நினைத்த படி' என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு 'பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்' என்று கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். நூல் : அஹ்மத் 25845

'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்' என்று கூறுவதன் மூலம் நபித் தோழர்கள் அல்லாஹ்வுக்கு நிகராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கருதவில்லை. ஆயினும், அந்த வார்த்தைப் பிரயோகம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது போல் உள்ளதாக மாற்று மதத்தவர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். இதை ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது அல்லாஹ் நினைத்ததாகும். பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்' என்று கூறுமாறு கட்டளையிடுகிறார்கள்.விபரீதமான எண்ணத்தில் நபித் தோழர்கள் கூறியிருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்திலேயே தடை செய்திருப்பார்கள்.ஆயினும், வார்த்தை அமைப்பு நபிகள் நாயகத்தையும், அல்லாஹ்வையும் சமமாக ஆக்குவது போல் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டவுடன் அதில் உள்ள நியாயத்தை ஏற்கிறார்கள்.'ஐயா! பாதிரியாரே! நாங்கள் அந்த எண்ணத்தில் அவ்வாறு கூறவில்லை' என்று வாதம் செய்திருக்க முடியும். ஆன்மீகத் தலைவர் என்பதால் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று சாதித்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் சாதித்து வருகின்றனர். அவ்வாறு சாதிக்காமல் அந்த வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் பின்னர் இந்த நிகழ்ச்சியை அறியாதவர் யாரேனும் பழைய வழக்கப்படி பேசினால் அதைக் கடுமையாகக் கண்டித்து விடுவார்கள்.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் 'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது' என்று கூறினார்கள். நூல் : அஹ்மத் 1742, 1863, 2430, 3077

'இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர், நீங்கள் நினைத்தீர்கள்' என்ற சொற்றொடரை தமக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறாமல் இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொது அனுமதியும் கொடுக்கிறார்கள்.

'இது அல்லாஹ் நினைத்ததும் இன்னார் நினைத்ததுமாகும் என்று கூறாதீர்கள். மாறாக இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர் இன்னார் நினைத்தார் எனக் கூறுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
 நூல்கள் : அபூதாவூத் 4328, அஹ்மத் 22179, 22257, 22292

எந்தச் சொல்லைத் தமக்குப் பயன்படுத்தலாம் என அனுமதித்தார்களோ அதை எந்த மனிதருக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறார்கள்.
ஆன்மீகத் தலைவர்கள் என்று கருதப்படுவோருக்கு மற்றவர்களுக்குச் செய்யப்படுவதை விட அதிகப்படியான மரியாதை செய்யப்படுவது உலகெங்கும் காணப்படும் வழக்கமாகவுள்ளது. நாட்டின் அதிபரே ஆனாலும் அவரால் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவரின் முன்னால் கைகட்டி நிற்கும் நிலையை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடும் காட்சியையும் காண்கிறோம். அன்று முதல் இன்று வரை உலகெங்கும் காணப்படும் நிலை இது தான்.ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்களுக்கு இது போன்ற மரியாதை செய்யப்படும் போது அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை நாம் மன்னித்து விடலாம். ஆனால், ஆன்மீகத் தலைவர்கள் இத்தகைய மரியாதையை ஏற்றுக் கொள்வதை மன்னிக்க முடியாது. ஆன்மீகத் தலைவர் என்பவர் மற்றவர்களை விட அதிகம் பக்குவப்பட்டவராக இருத்தல் அவசியம்.மற்றவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது போல் ஆன்மீகத் தலைவர் எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர்களை விட அதிகமான அடக்கம் அவரிடம் காணப்படுதல் வேண்டும்.மக்களிடம் அதிகமான மரியாதையை எதிர்பார்ப்பவர் நிச்சயம் மனப்பக்குவம் அடையவில்லை என்பது தான் பொருள். அறிவுடைய மக்கள் இப்படித் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த அடிப்படை அறிவு கூட பெரும்பாலான மக்களுக்கும் இல்லை. ஆன்மீகத் தலைவர்களுக்கும் இல்லை. உலகிலேயே இதை உறுதியாகக் கடைப்பிடித்த ஒரே ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்.
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்........

(P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) எனும் நூலிலிருந்து.....)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக