அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 2 மே, 2013

ஆச்சர்யமூட்டும் அமேசான்.....!!

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியது அமேசான் காடுகள். அடர்த்தியான காடுகளும் இவைதான். அமேசான் என்றால் 'உயரமான திடகாத்திரமான பெண்' என்று அர்த்தம். அமேசான் நதியை நதிகளின் ராணி என்றுஅழைக்‍கிறார்கள். 6,712 கி.மீ. நீளம்கொண்ட இந்த நதி ராணி என்றால் அதை சூழ்ந்திருக்‍கும் காடு ராஜாதானே.அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது. சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.

உலகப்பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்‍கின்றன. உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன. 2,500 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன.

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர். இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்‍களை சேர்ந்த மக்‍கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர். அமேசான் காடுகளை நான்கு பிரிவுகளாக பிரிக்‍கிறார்கள். வான் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்த பிரிவில் குரங்கு போன்ற உயிரினங்களும், மூன்றாவது பிரிவில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. தரைப்பகுதியில் பயங்கர காட்டு விலங்குகள் உள்ளன. அனகோண்டா போன்ற உலகின் மிகப்பெரிய பாம்பு இனம் இருப்பது இங்குதான்.

இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள். அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது. இங்கு இருக்‍கும் 90 சதவீதத்துக்‍கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்‍கு உணர்த்தும். 




நன்றி : தினத்தந்தி & puvi.blogspot

0 கருத்துகள்:

கருத்துரையிடுக