அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 30 டிசம்பர், 2011

மண் கேட்ட படலம்

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

பூமியையும், வானங்களையும் நோக்கி, “நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள்!” என்று (அல்லாஹ்) கூறினான், “நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்என்று அவ்விரண்டும் (வானமும், பூமியும்) கூறின.
 (அல்குர்ஆன் 41:11)

அல்லாஹ் பூமிக்கோ, வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர்ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும் போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால், திருக்குர்ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமே! இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகுமே!எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று அந்த முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.


இந்தக் கதையில், அல்லாஹ், மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதற்கு மாற்றமாக பூமி வேறொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றனது. ஜிப்ரில், மீகாயில், இஸ்ராபீல் ஆகிய மூவரும் மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள மூவரும், உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
அல்லாஹ்வின்

…………அவன் எதை ஆணையிடுகின்றாகோ அதைச் செய்து முடிப்பார்கள் . (அல்குர்ஆன் 66:6)

(எதையேனும் ) பேசுவதில் அவனை அவர்கள்  ( மலக்குகள் ) முந்த மாட்டார்கள். அவனது ஆணைப்படியே செயலாற்றுவார்கள். (அல்குர்ஆன் 21:27)

மேற்கூறிய இரண்டு வசனங்களும், வானவர்களைப் பற்றி அல்லாஹ் தருகின்ற நற்சான்று. அவனது உத்திரவை அப்படியே செயல்படுத்திக் காட்டுகின்ற வானவர்கள்அதிலும் சிறப்புக்குரிய வானவர்கள், அல்லாஹ்வின் கட்டளையை செல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?


அப்படி எல்லாம் இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாக்குகின்றதே அந்தக் குர்ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.இந்தக் கதையின் கருத்துப்படி அல்லாஹ் மண் எடுத்து வரச் சொன்னது, கீழ்த்தரமான பொருளைப் படைப்பதற்காக அல்லவே! படைப்பினங்களிலேயே மிகச் சிறந்து விளக்குகின்ற, மனித இனத்தைப் படைப்பதற்கு தான் அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்கிறான்.


பூமியில் நான் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்
(அல் குர்ஆன் 2:30) என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறகிறான். மிக உயர்ந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லி இருக்கும் போது பூமி எப்படி மறுத்திருக்க முடியும்? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.அந்தப் பணியை செய்து முடிக்க அனுப்பபட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும் அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.அற்பமான காரியத்தை செய்து முடிக்க மண் எடுத்து வரச் சொல்லவில்லை.மிக உயர்ந்த -சிறந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக் கதை குறிப்பிடுகிறது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தக்கதை சரியானதல்ல. ஒரு முஸ்லிம் நம்பக்கூடாது என்பது தெளிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால், இறைவனைப் பற்றியும், அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக் காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.இந்தக் கதை முழுக்க முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபிமொழி தெளிவாக்குகின்றது.

பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்” (நபிமொழி)
        நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுஹிப்பான்
       அறிவிப்பவர்: அபூமூஸல் அஷ்அரீ(ரழி)

மண் எடுத்து வரும்படி அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம்(அலை) அவர்களை உருவாக்கினான், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது, இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது.

நன்றி : டிஸ்கவர் தவ்ஹீத்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக