அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 8 டிசம்பர், 2011

அரசு மருத்துவ காப்பீடு திட்டம் ஒரு மாதத்தில் துவக்கம்!

முதல்வரின் புதிய ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டப்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 497 ரூபாய் பிரீமியமாக அரசு செலுத்தும்.

ரூ.13.40 கோடி மிச்சம்:

அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில், முதலில் விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து, புதிய குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது. இந்த டெண்டர், கடந்த மாதம் 21ம் தேதி திறக்கப்பட்டது. இதில், மிகக் குறைந்த விலையாக, ஆண்டுக்கு 499 ரூபாயை பிரீமியமாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இதன் பின், இந்நிறுவனத்துடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறுதியாக, பிரீமிய தொகையில் இரண்டு ரூபாய் குறைத்து, 497 ரூபாயாக நிர்ணயிக்க, அந்த நிறுவனம் சம்மதித்தது.

இதன் மூலம், முதலில் விடப்பட்ட டெண்டரில் குறிப்பிடப்பட்ட தொகையான, 510 ரூபாயை விட, 13 ரூபாய் குறைவாக, தற்போது முடிவாகி உள்ளது. எனவே, ஆண்டுக்கு 13.40 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. மேலும், பொதுத் துறை நிறுவனமே திட்டத்தை செயல்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, செயல் திட்டத்தை விரைவாக வகுத்து அளிக்கும்படி, யுனைடெட் இந்தியா நிறுவனத்தை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. செயல்திட்ட அறிக்கையை, யுனைடெட் இந்தியா நிறுவனம் அளித்ததும், திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். ஒரு மாதத்தில் திட்டத்தை துவக்கும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதிய அட்டை வரும் வரை:

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ஏற்கனவே 1.34 கோடி குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. அந்த விவரதளம், தமிழக அரசிடம் உள்ளது. அவர்களுக்கு புதிய கார்டுகள், திட்டம் துவங்கிய இரண்டு மாதத்துக்குள் வழங்கப்படும்.அதுவரை பழைய அட்டை, ரேஷன் அட்டை, வி.ஏ.ஓ., சான்று ஆகியவற்றைக் காண்பித்து, சிகிச்சை பெறலாம். திட்டம் துவங்கிய தேதியில் இருந்து, பிரீமியம் செலுத்தப்படும்,'' என்றார்.

முதல் டெண்டர் : கடந்த ஆகஸ்ட் மாதமே, மருத்துவக் காப்பீட்டிற்கான டெண்டர் விடப்பட்டது. அதில், ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்திய ஸ்டார் ஹெல்த் நிறுவனம், மிகக் குறைந்த விலையாக, ஆண்டுக்கு 510 ரூபாயை குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, இந்நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விலையை குறைக்கும்படி, அதிகாரிகள் வலியுறுத்தினர். இறுதியாக, இரண்டு ரூபாய் வரை குறைக்க, இந்த நிறுவனம் முன்வந்தது. இதனால், டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டரை தமிழக அரசு அறிவித்தது.

அரசு கேட்டுள்ள செயல் திட்ட விவரம்:

* அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலை உறுதி செய்தல்.
* நோயை முன்னதாக கண்டறியும் குழு அமைத்தல்.
* விண்ணப்பங்களை பரிசீலித்தல்.
* ஆன்-லைன் மென்பொருள் வசதி.
* மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமனம்.
* ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கும், ஒரு தொடர்பு அலுவலரை நியமித்தல்.
* மாவட்ட அளவில் தொடுதிரை வசதி ஏற்படுத்துதல்.
 
நன்றி : mpmpages
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக