அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 16 மே, 2011

முதியவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் (பகுதி - 1)

மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு இறைவன் அறிவை அதிகமாகக் கொடுத்திருந்தாலும் அவனை நல்வழிப்படுத்த பிறரின் வாயிலாக உபதேசங்களும் விதிமுறைகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றது. எனவே தான் எல்லா நாடுகளிலும் குடிமக்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது அந்நாடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனிதனுடைய அறிவை நம்பி அந்நாடு அவற்றை வ­யுறுத்தாமல் விட்டுவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

அவனுடைய அறிவு நல்லதையும் தீயதையும் தனித்தனியே பிரித்துக்காட்டினாலும் அவன் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தவறான வழியில் செல்பவனாக இருக்கிறான். இவற்றை கவனத்தில் கொண்டு தான் இஸ்லாமிய மார்க்கம் ஆன்மீக ரீதியில் பிள்ளைகள் பெற்றோர்களிடத்திலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்திலும் கணவன் மனைவியிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் இப்படி ஒவ்வொருவரிடத்திலும் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை அவனுக்கு பட்டிய­லிட்டு கூறுகிறது. இதன் அடிப்படையில் முதியவர்களிடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

முதுமை என்பது மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். முதுமையை எட்டியவர்கள் சாப்பிட முடியாமல் நடக்க முடியாமல் தன்னுடைய இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் மூளைக் குழும்பி முழுக்க முழுக்க ஒரு குழந்தை எப்படி பெற்றோரைச் சார்ந்து வாழுமோ அது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதனால் இவர்களும் சிரமப்படுவதோடு மற்றவர்களும் இவர்களுக்காக சிரமப்பட வேண்டிய நிலை உருவாகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை தான் அடைந்துவிடக் கூடாது என்று இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹீ‎ம்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கஸ­லீ வல்ஜ‎ப்னீ வல்ஹரமீ. வஅஊது பிக்க மின் அதாபில் கப்ற். வஅஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத் என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள் : இறைவா இயலாமையி­லிருந்தும் சோம்பலிலி­­ருந்தும் கோழைத்தனத்திலி­ருந்தும் தள்ளாமையி­லிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையி­லிருந்தும் இறப்பின் சோதனையி­லிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மா­லீக் (ர­லீ) அவர்கள்

நூல் : புகாரி

நாமும் ஒரு நாள் இது போன்ற நிலையை அடைந்தால் பிறருடைய உதவி நமக்கும் தேவைப்படும் என்பதை உணராமல் இன்றைக்கு முதியவர்களை கண்டும் காணாமல் பலர் இருக்கிறார்கள். தான் சிறுகுழந்தையாக இருக்கும் போது தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் வயது முதிர்ந்த உடன் அவர்களுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராமல் பலர் தங்கள் பெற்றோரை கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளின் கவனிப்பில்லாமையால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பலர் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரயில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை இளைஞர்கள் தூக்கி இரயிலுக்கு வெளியே எரிந்ததால் அம்மூதாட்டி இறந்து போனதை செய்திகள் வாயிலாக நாம் அறிந்தோம். முதியவர்களால் ஏற்படும் சிரமங்களைக் கருதி அவர்களை இப்படி கவனிப்பற்று விட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வயோதிகத்தை குறிப்பிட்டுக் கூறி அவர்கள் நலம் பேணுவதை மறந்து விடக்கூடாது என்று வ­யுறுத்தியுள்ளார்கள்.

''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அல்குர்ஆன் (17 : 23)

வயதான பெற்றோரைப் பெற்று யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவருடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹீரைரா (ர­) அவர்கள்

நூல் : முஸ்­லிம் (4627)

சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறார்கள். இந்த முதியோர் இல்லங்கள் தோன்றுவதற்கு பெரும்பாலும் வீட்டிற்கு மணமகளாக வரும் மருமகள்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். தாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தங்களை தங்கள் பெற்றோர்கள் சிரமம் கருதி அனாதை இல்லத்தில் சேர்த்திருந்தால் தங்களுடைய நிலை என்ன? என்பதை அவர்கள் உணருவதில்லை. மாமனார் மாமியாரை தன்னுடைய தாய் தந்தையினரைப் போல் நினைத்து அவர்களுக்கு பணிவிடை செய்தால் அல்லாஹ் கொடுக்கும் நன்மைக்கு நம்மால் அளவு சொல்ல இயலாது. ஒரு நாய்க்கு இரக்கப்பட்டதற்காக ஒரு விபச்சாரம் செய்துகொண்டிருந்தப் பெண்ணுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைப் பரிசாக்கினான். நம்மைப் போன்ற ஒரு மனிதருக்கு அதுவும் பலவீனமான மனிதருக்கு இரக்கப்பட்டால் அவன் தரும் பரிசு என்ன என்பதை அவனே மிகஅறிந்தவன்.

சில பெண்கள் மார்க்கச் சட்டங்களை கரைத்து குடித்துவிட்டதைப் போல் கணவனின் பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவா செய்கிறது? என்று கேட்கிறார்கள். வயது முதிர்ந்த மாமனார் மாமியாரை ஓய்வெடுக்க விடாமல் எதாவது வேலைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கு உதவ வேண்டும் முதியவர்களுக்கு மதிப்பு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் பொதுவான உபதேசத்தை மறந்துவிடுகிறார்கள்.

முதியவர்களின் நலம் பேணுதல்

.பேருந்தில் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள போது உட்கார இடமில்லாமல் வயதானவர்கள் தள்ளாடிக்கொண்டிருக்க பலமிக்க உடல் உள்ளவர்கள் ஈவு இரக்கமின்றி சொகுசாக பயனம் செய்துவருகிறார்கள். இதுபோன்ற இறுகிய உள்ளம் உள்ளவர்களால் தான் அரசு பேருந்துகளில் முதியவர் மட்டும் ஊனமுற்றோர் மட்டும் என்று இருக்கைகளை தனியாக அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் இப்படி ஒரு நிலையை அடைந்தால் நமது கதி என்ன? என்று இவர்கள் சற்று யோசிப்பார்க்க வேண்டும்.

தான் சொகுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர வயதானவர்கள் படும் கஷ்டங்களை அவர்கள் உணருவதில்லை.

வயது முதிர்ந்தவர் நீண்ட நேரம் நின்றால் அது அவர்களுக்கு கஷ்டத்தை அளிக்கும் என்பதால் மக்களுக்கு தொழவைப்பவர் சுருக்கித் தொழவேண்டும். அவர் தனியாக தொழும்போது விரும்பியவாறு நீட்டிக்கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சுயநலத்தைப் பார்க்காமல் பலவீனமானவர்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழவைத்தால் அவர் சுருக்கித்தொழ வைக்கட்டும். ஏனென்றால் அவர்களில் பவலீனரும் நோயாளியும் வயதுமுதிர்ந்தவரும் இருப்பார்கள். உங்களில் யாரேனும் தனியாக தொழுதால் அவர் விரும்பியவாறு அவர் நீட்டிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அபூஹீரைரா (ர­லி) அவர்கள்

நூல் : புகாரி (703)

சஹாபாக்களில் அபூபக்கர் (ரலி­) அவர்கள் வயதில் மூத்தவராக இருந்தார்கள். அபூபக்கர் (ரலி­) அவர்களுக்கே முடி நரைத்திருந்தது என்றால் அவருடைய தந்தை எவ்வளவு முதியவராக இருந்திருப்பார்கள்? மக்கா வெற்றியின் போது அபூபக்கர் (ர­லி) அவர்கள் தன்னுடைய தந்தையான அபூ குஹாஃபாவை நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ர­லி) அவர்களிடம் இந்த வயதானவரை நீங்கள் வீட்டிலே வைத்திருந்தால் நான் வந்து அவரை பார்த்திருப்பேன் என்று கூறினார்கள். பின்பு அபூகுஹாஃபா (ர­லி) அவர்களின் முடி நரைத்திருந்ததால் அதனுடைய நிறத்தை மாற்றும் படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலி­க் (ரலி­) அவர்கள்

நூல் : அஹ்மத் (12174).

நன்றி : http://rasminmisc.blogspot.com/

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக