அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 30 மே, 2011

நபிகளாரின் நற்குணங்கள் பகுதி - 1

தன்னடக்கம்

நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2411)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவரையும் அவரது நற்செயல் (மட்டும்) சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்) என்று கூறினார்கள்.
மக்கள், தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னையும் தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர என்று கூறிவிட்டு, எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5673)

நன்மையில் முந்திச் செல்லுதல்

நபிகளார் எந்தக் காரியத்தை ஆர்வமூட்டினாலும் அதை, தாம் முதலில் செய்பவர்களாக இருப்பார்கள். கட்சித் தலைவர்களாக இருக்கும் பலர் பத்திரிக்கைகளில் படம் வரவேண்டும் என்பதற்காகக் கேமரா முன் வந்து நின்று விட்டு மாயமாகி விடுவார்கள். ஆனால் எந்தக் காரியத்தை செய்யத் தூண்டினாலும் அதைச் செய்யும் முதல் நபராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நபிகளார் திகழ்வார்கள்.

பத்ர் போர் நடந்த நாட்களில் நாங்கள் மூன்று பேர் ஒரு ஒட்டகத்தில் செல்லும் நிலைமையில் இருந்தோம். அபூலுபாபா(ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபிகளாருடன் சேர்ந்திருந்தார்கள். (இருவர் பயணம் செய்ய, மூன்றாம் நபர் நடந்து வருவார். இவ்வாறு பயணத்தை வைத்திருந்தனர்) நபிகளார் நடந்து வரும் முறை வந்த போது இரு நபித்தோழரும், நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம் (நீங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்) என்று கூறிய போது நீங்கள் இருவரும் என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் இல்லை. மேலும் உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள். (நூல்: அஹ்மத் 3706)

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்கன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நான் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (4837)

பாதுகாவலர்

தம் தோழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள். பிரச்சனைகள், சிக்கல்கள் தம் தோழர்களுக்கு வந்து விட்டால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக முதலில் களத்தில் ஈடுபடும் மாபெரும் வீரராகவும் நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர் கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள் என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, (தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம் அல்லது இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6033)

தொடரும் இன்ஷாஅல்லாஹ்....

நன்றி : தீன்குலப்பெண்மணி & கடையநல்லூர் அக்ஸா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக