அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 3 மே, 2011

முஸ்லிம்களே! விழித்திருங்கள் !!

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவன் எனவும், அவனைத்தவிர வேறு கடவுள்கள் இல்லை எனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள். அல்லாஹ்வின் போதனைகள் ஆகிய குர்ஆனையும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான ஹதீஸையும் பின்பற்றக்கூடியவர்களே முஸ்லிம்கள்.

முன்னைய காலத்தில் தாம் வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டே இவர்கள் முஸ்லிம்கள் என்று அறியக்கூடியதாக இருந்தது. அது ஒரு காலம். அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கையை நடைமுறைப்படுத்தியவர்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெயரைக் கொண்டுதான் ஒருவர் இன்னொருவரை, இவர் முஸ்லிம் சகோதரர் என்று அறியக்கூடியதாகவுள்ளது.அதுவும் அவர் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வாழ்பவரா என்பதை அல்லாஹ்வே அறிவான் நாம் முஸ்லிம்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டியவர்கள். ஆனால், இன்று மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் ஒரு முஸ்லிமுடைய பண்புகளை குழிதோண்டிப் புதைக்கக்கூடியவர்களாகவும் உள்ளோம்.

“யார் ஒரு சமூகத்தாருக்கு ஒப்பாக (வாழ்வின் எந்த அம்சத்திலும்) நடந்து கொள்கிறாரோ அவரும் அவர்களை சேர்ந்தவரே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம் அபூதாவூத்)

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோரை விடவும் பிள்ளைகளை விடவும் அனைத்து மக்களை விடவும் நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்”. அறிவிப்பவர் அபூஹ_ரைரா (ரலி) நூல் புகாரி.

ஆனால் நாம் இன்று எமக்குப் பிரியமானவர்களுக்காக கவர்ச்சியாகவுள்ள இவ்வுலக வாழ்க்கைக்காக எமது இஸ்லாமிய மார்க்கத்தையே விட்டுக் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

இதுவா ஈமான்? இதுவா இறையச்சம்?

அல்லாஹ் தனது திருமறையிலே குறிப்பிடுகின்றான்

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது.விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 6:32)

இன்று நம் முஸ்லிம்கள் மத்தியில் மேலைத்தேய கலாச்சாரம் அவர்களை அறியாமலேயே அவர்களின் வாழ்வில் குடிகொண்டுவிட்டது. அநேகமான வசதி படைத்த நம் முஸ்லிம் சகோதரர்கள் தமது வேடிக்கை, வினோத தேவைகளுக்காக ஆயிரக்கணக்கில் ஏன் இலட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள். பிறந்த நாள் வைபவம், திருமணத்திற்கு முன் ஏதேதோ பெயர்களில் வைபவங்கள் இன்னும் எக்கச்சக்கமான காரியங்களுக்காக கோலாகலமான வைபவங்கள், நபி வழி அல்லாத திருமண வைபவங்கள் என்று பணத்தை வாரி வாரி இவ்வுலக இன்பங்களிற்காக சிறிதும் தயக்கமின்றி இரைக்கிறார்கள்.

ஆனால், நமது முஸ்லிம் சமுதாயத்தில் தோன்றும் பல பிரச்சினைகளுக்கு உதாரணமாக பாடசாலை விசயங்கள், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல், இன்னும் பல இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான பண உதவிகளை அவர்களிடத்தில் பெற நாடினால் அப்போதுதான் அவர்களுக்கு பணத்தின் அருமை புரியும். பலவாறு யோசனை செய்து விருப்பமேயின்றி ஒரு சிறிய தொகையை பல காரணங்களை கூறிவிட்டு தருவார்கள்.

சைத்தானின் வழியில் செலவு செய்வதற்கு துணிந்தவன் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய தயங்குகிறான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஓவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன். அறிந்தவன். (அல்குர்ஆன் 2:261)

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல் குர்ஆன் 2:271)

முஸ்லிம் சகோதரர்களே! தூங்குவது போல் நடித்தது போதும். விழித்தெழுங்கள். அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த வழியில் சிறிதும் தயக்கமின்றி துணிந்து எழுவோம். யார் எமக்குத் தடையாக இருந்தாலும் நம் இஸ்லாமியக் கொள்கையை நிலைநாட்டி அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்வோம். முஸ்லிம்களாகிய நாம் எமது இஸ்லாமிய மார்க்கத்தை நமது இஸ்லாமிய வாழ்க்கையினூடாக எடுத்துக் காட்டுவோம். நமது முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுகூடிப் பாடுபடுவோம். அல்லாஹ்வின் இந்த பூமியில் இஸ்லாமிய கொள்கைகளை நிலைநாட்டி மறுமை வாழ்க்கைக்காக வித்திடுவோம். இம்மைக்கும் மறுமைக்குமான ஈடேற்றத்திற்காக பாடுபடுவொம்.

நாம் முஸ்லிம்கள். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நாம் அல்லாஹ்வின் பாதையில் எதற்கும் துணிந்தவர்கள்.
                                                                           
                                   - சகோதரி பாத்திமா ஷஹானா, கொழும்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக