அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 6 ஜூன், 2011

நபிகளாரின் நற்குணங்கள் பகுதி - 2

நல்ல வார்த்தைகள்

அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்கடம் பேசினார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் என்று கூறுவார்கள் என்று சொன்னார்கள்.அறிவிப்பவர்; மஸ்ரூக்,
நூல்: புகாரி (6035)
 

கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6046)

பெரியவர்களுக்கு மரியாதை

தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு நபிகளார் மரியாதை தருபவர்களாக இருந்தார்கள். இவ்வுலகின் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறுதி நபி என்ற ஆணவம் அவர்களிடம் இருக்கவில்லை. தம்மை, சிறு வயதில் எடுத்து வளர்த்த உம்மு ஐமன் (ரலி) அவர்களை மரியாதை நிமித்தம் அவர்களின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்து வருவார்கள். அவர்கள் கோபப்படும் போது அமைதியாக இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்தார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்து விட்டார்கள்.)
அதற்காக உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்து கொண்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4848)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நம்மை (அம்மையார்) உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம் என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே? என்று கேட்டார்கள்.அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்) என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச் செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4849)

உணர்வுக்கு மதிப்பளித்தல்

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (950)

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5236

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்த்து) விளையாடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (6130)

ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களைத் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

நன்றி : தீன்குலப்பெண்மணி & கடையநல்லூர் அக்ஸா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக